Monday, July 22, 2024

சர்வதேச அரசியலில் எழுச்சி பெறும் இடதுசாரிகள் வீழ்ச்சியடைகிறது வலதுசாரிகளின் ஆட்சி


 உலக அரசியல் அரங்கில் அரசியல் மாற்றம்  புதுப் பாதையில் பயணத்தை ஆரம்பித்துள்ளது. உலக அரங்கில்  அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் வலது சாரிகளின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. இடது சாரிகள் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.  அதேவேளை, பழமைவாதக் கொள்கைகளை  மக்கள் நிராகரித்துள்ளனர்.

பிரிட்டன் தொடங்கி பிரான்ஸ் வரை, ஈரான் முதல் மெக்சிகோ வரை இப்போது பல நாடுகளில் வரிசையாக வலதுசாரிகளை மக்கள் நிராகரித்து இடதுசாரி கொள்கை கொண்ட கட்சிகளை வெற்றி பெற வைத்து வருகின்றனர்.  இடதுசாரிகள் எழுச்சி  எதிர்பார்க்கத மாற்றமாக  உள்ளது.

 கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற தேர்தல்களில்  வலதுசாரிகள் வெற்றி பெற்று  ஆட்சி அமைத்த்னர்.  ஓரிரு நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகளில் வலதுசாரிகளின் ஆட்சி அமைந்தது.  உலகெங்கும் வலதுசாரிகளின் ஆதிக்கம் அமோகமாக  இருந்தது.  ஆனால், இப்போது நிலைமை மாற்றமடைந்து  இடதுசாரிகள் கை ஓங்குகிறது.

  பிரிட்டனில்  நடந்த  பாராளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் தலைமையிலான வலதுசாரி கட்சியான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்தது.  14 வருடங்களுக்குப் பின்னர் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட தொழிலாளர் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது. அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமரானார். இது பிரிட்டன் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலைப் பார்க்கப்படுகிறது. 650தொகுதிக்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியால் வெறும் 121 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இது கடந்த முறை அவர்கள் பெற்ற இடங்களைக் காட்டிலும் 251 தொகுதிகள் குறைவாகும்.

வேல்ஸ் பகுதியில் ஒரு சீட்டில் கூட கன்சர்வேடிவ் கட்சி வெல்லவில்லை. பிரிட்டன் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சி இந்தளவுக்கு மோசமாகத் தோல்வி அடைந்ததே இல்லை.  இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சி 411 இடங்களைப் பெற்று ஆட்சி பிடித்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் மீண்டும் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

 தேசிய சுகாதார சர்வீஸை மறுசீரமைப்பது, புதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல், பள்ளிகளில் இலவச காலை உணவு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் LGBT+ பிரிவுக்கான உரிமைகள் எனத் தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

 பிரான்ஸ் நாட்டிலும் இடதுசாரிகள் கையே ஓங்கி உள்ளது. அங்கு ஜனாதிபதியாக மையவாத கொள்கை கொண்ட இமானுவேல் மாக்ரோன் உள்ள நிலையில், சமீபத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. அங்கு முதல் ரவுண்டு தேர்தலில் வலதுசாரிகள் அதிக இடங்களைப் பெறும் சூழல் உருவான போதிலும், 2ஆவது சுற்றில் வலதுசாரிகள் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டனர்.   இடதுசாரிகள் கூட்டணியே அதிக இடங்களை வென்றது.

  577 இடங்களைக் கொண்ட பிரான்ஸ் பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் கூட்டணி 180 இடங்களில் வென்றுள்ளது. மையவாத கொள்கை கொண்ட இமானுவேல் மாக்ரோன் 159 சீட்களை பெற்றுள்ள நிலையில், வலதுசாரி கூட்டணி 142 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 289 சீட்கள் யாருக்கும் கிடைக்காததால் அங்குத் தொங்கு பாராளுமன்றம் உருவாகி உள்ளது.

 தீவிர இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டிலும் அதே நிலை தான். அங்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக   அதி தீவிர பழமைவாதியான இப்ராஹிம் ரைசி ஜனாதிபதியாக இருந்தார். அவரது ஆட்சியில் தான் கலச்சார காவலர்கள் ஈரானில் மீண்டும் கொண்டு வரப்பட்டனர். கலாச்சார காவலர்களால் மஹ்ஸா அமினி என்ற இளம்பெண் கொல்லப்பட்டதால் அங்கு 2022 செப்டம்பரில் தொடங்கிப் பல மாதங்கள் போராட்டங்கள் நடந்தது.

 மக்களின்  போராட்ட ந்ழுச்சியால்  ஈரான் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்தது. இதுபோல ரைசி ஆட்சியில் பல பழமைவாத கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. இந்தச் சூழலில் தான் ரைசி  கடந்த மே மாதம் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில்     சீர்திருத்தவாதியாக அறியப்படும் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றார். பழமைவாதியான சயீத் ஜலிலி தோல்வியடைந்தார். இதன் மூலம் ஈரான் நாட்டில் பல முக்கிய மாற்றங்கள் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 மெக்சிகோ நாட்டில் நடந்த ஜனாதிபதித்  தேர்தலில் இடதுசாரிகள் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 61  வயது கிளாடியா ஷீன்பாம் அங்கு ஜனாதிபதியாகத்  தேர்வாகியுள்ளார். மெக்சிகோ நகர மேயராக இவர் இருந்துள்ளார்.. சுற்றுச்சூழல் விவகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் இவர், வலதுசாரி வேட்பாளரை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்தியாவிலும்  வலதுசாரி சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 400 சீட் என்ற இலக்குடன் தேர்தலைச் சந்தித்த பாஜகவால் தனிப்பெரும்பான்மை கூடப் பெற முடியவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடித்த பாஜகவால் இந்த முறை 240 இடங்களில் மட்டுமே பெற முடிந்தது. இதையடுத்து கூட்டணி ஆட்சியையே பாஜக அமைத்துள்ளது. காங்கிரஸ் 99 இடங்களில் வென்ற நிலையில், எதிர்க்கட்சிகள் வலிமையாக உள்ளன.

 பிறேஸில், அவுஸ்திரேலியா  ஆகிய இரண்டு நாடுகளிலும் வலதுசாரிகளை நிராகரித்த மக்கள் இடதுசாரி கொள்கை கொண்ட கட்சிகளை ஆட்சியில் அமர்த்தினர்.கொரோனா பாதிப்பு, அதைத் தொடர்ந்து பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் வலதுசாரி அரசுகள் தங்களைக் காக்கத் தவறிவிட்டதாகவே மக்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே மக்கள் இப்போது மீண்டும் இடதுசாரி கொள்கை கொண்ட கட்சிகள் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

No comments: