Sunday, July 7, 2024

எதிர்க்கட்சித் தலைவரின் ஆக்ரோசத்தால் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த மோடியின் அரசாங்கம்


மூன்றாவது  முறையாக  மோடி பிரதமராகி நாடாளுமன்றம்  கூடியபோது எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தியின் அனல் தெறிக்கும்  பேச்சால் ஆளும் கட்சியினர்  அதிர்ச்சியடைந்தனர்.

சுமார் இரண்டுமணி நேரம் ராகுல் பேசியதால்  நாடாளுமன்றத்தில் புயல் அடித்தது போல  இருந்தது.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்ற, ராஜ்யசபாவில் நடைபெற்றது.  தீர்மானத்தின் மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்துப் பேசினார். புதியவரான எதிர்க் கட்சித்தலைவரின்  உரை வழமைபோல் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால்,  அவரது பேச்சுநாடாளுமன்றத்தில்  பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது.   ராகுல் காந்தியின் பேச்சை ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்படி ஒரு அனல் பறந்த பேச்சை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி.

கிட்டத்தட்ட 2 மணி நேரமாக ராகுல் காந்தி படு ஆவேசமாகவும், வாதங்களை எடுத்து வைத்தும், பல்வேறு ஆவணங்களைக் காட்டியும் விடாமல் பேசினார். அவரது பேச்சின்போது பலமுறை பாஜக எம்.பிக்கள் எழுந்து ஆவேசமாக ஆட்சேபனை தெரிவித்தனர். கடந்த 10 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது குறுக்கிட்டதில்லை. ஆனால் அவரே  இரண்டு முறை குறுக்கிட்டு மறுத்துப் பேசும் அளவுக்கு ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பலமுறை எழுந்து ராகுல் காந்தியின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாக மறுப்பு தெரிவித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மறுப்பு தெரிவித்தார். பாஜக எம்.பிக்கள் தொடர்ந்து குரல் எழுப்பியபடியே இருந்தனர். ஆனாலும் ராகுல் காந்தியின் பேச்சு நிற்கவில்லை. மணிப்பூர் விவகாரம், அக்னிவீர் திட்டம், நீட், இந்து மதம் என்று ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்து வைத்து அனல் பறக்கப் பேசினார் ராகுல் காந்தி.

மணிப்பூரை எரித்தது பாஜகவின் கொள்கைகள்தான். அந்த மாநிலத்தில் உள்நாட்டுப் போரை உருவாக்கி விட்டது பாஜகதான். இன்னும் அந்த மாநிலத்திற்குப் போகாமல் இருக்கிறார் பிரதமர் மோடி

பண மதிப்பிழப்பு சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள். என்ன பயன் கிடைத்தது.. தவறான ஜிஎஸ்டி கொள்கையால் நாட்டின் வேலைவாய்ப்பே பறி போய் விட்டது. அதன் முதுகெலும்பையே முறித்து விட்டீர்கள். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கோரி போராட்டம் நடத்தினர். ஆனால் அதைக் கண்டு கொள்ளவே அரசு விரும்பவில்லை.

நீட் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு வசதி செய்து கொடுத்து வருகிறீர்கள். இதனால் டியூஷன் கோச்சிங் சென்டர் வைத்திருப்பவர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். இது வர்த்தக தேர்வாக மாறி விட்டது. பணக்கார மாணவர்களுக்கே இது உதவுகிறது.. அவர்களுக்காகவே இதை வடிவமைத்துள்ளனர். அப்பாவி ஏழை மாணவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

பாஜக தலைவர்களையே மிரட்டுகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கிறேன்.. நீங்கள் பயப்படாதீர்கள்.. உங்களைக் காக்கும் அபய முத்திரை எங்களிடம் உள்ளது (கை சின்னத்தைக் காட்டினார் ராகுல் காந்தி). இதைத்தான் அனைத்து மதங்களும் நமக்கு போதிக்கின்றன. அபய முத்திரை காங்கிரஸ் கட்சியின் சின்னம். இது பாதுகாப்பைத் தரும், அன்பைத் தரும், அச்சத்தை அகற்றும், பாதுகாக்கும். இதைத்தான் இந்து மதமும், இஸ்லாமும், சீக்கிய மதமும், புத்த மதமும், அனைத்து மதங்களும் போதிக்கின்றன, நாங்களும் அதையே சொல்கிறோம்.

இந்த அவையின் உயரிய தலைவர் சபாநாயகர்தான். நீங்கள் சபாநாயகராக பொறுப்பில் அமர்ந்தபோது நானும், பிரதமரும் சேர்ந்து உங்களை இருக்கையில் அமர வைத்தோம். அப்போது எங்களுக்கு நீங்கள் கை குலுக்கினீர்கள். பிரதமரிடம் கை குலுக்கியபோது பணிவுடன் குணிந்து கை குலுக்கினீர்கள். என்னிடம் கை குலுக்கியபோது நிமிர்ந்த நிலையில் கை குலுக்கினீர்கள். இந்த அவையில் பெரியவர் நீங்கள்தான், பிரதமர் அல்ல என்று ராகுல் காந்தி பேசினார்.

 ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி   பதில் அளித்துப் பேசினார்.அப்போது மணிப்பூர் விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் பிரதமர் மோடி 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பதில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வைத்திகதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் மறுநாள்  (03.07.2024) வரை நடக்கவிருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த வேண்டுமென்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில்  விவாதிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி இருந்த நிலையில் மக்களவையைத் திகதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் கேள்வித்தாள்  வெளியான விவகாரம் இந்தியாவில் சூடு பிடித்துள்ளது.   நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் கடுமையாகக் குரல் எழுப்பி வருகிறது. இப்போது  மிழு இந்தியாவும் நீட்டுக்கு எதிராக  போராட்டம் நடத்தத் தயராகி விட்டது.

நீட் தேர்வு கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை, சிறப்பு போலீஸ் படை அதிரடியாக கைது செய்துள்ளது.

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே மாதம் 5 ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்றது. 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் திகதி வெளியானது.

இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது, 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள மையம் ஒன்றில் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு, முன்கூட்டியே கேள்வித்தாள் கிடைத்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 4 மாணவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை பீகார் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரவி அத்ரி என்பவர், நீட் கேள்வித்தாளை லீக் செய்தது அம்பலமானது.

சனிக்கிழமை நொய்டா அருகே நீம்கா கிராமத்தில் பதுங்கியிருந்த ரவி அத்ரியை உத்தர பிரதேச சிறப்பு போலீஸ் படையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். நீட் கேள்வித்தாள் கசிய விடப்பட்டதில் ரவி அத்ரி, மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

தேர்வுக்கு முதல்நாள் உத்தர பிரதேசத்தில் கசிய விட்ட நீட் கேள்வித்தாள், ஜார்க்கண்ட் வழியாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. லட்சங்களில் பணம் கொடுக்கும் மாணவர்களுக்கு சால்வர் கேங் மூலம் உதவி செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுக்கும் மாணவர்களை தேர்வுக்கு முந்தைய நாள் ஒரே இடத்தில் தங்க வைத்து கேள்வித்தாள் கொடுக்கப்படும். அப்போது, கேள்விக்கான விடைகளையும் தயார் செய்து கொடுத்து, தேர்வுக்கு தயார் செய்யப்படுவர்.

ரவி அத்ரியின் இந்த ஃபார்முலா டைப் மோசடி தான்சால்வர் கேங்என அழைக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் மருத்துவம் பயின்ற ரவி அத்ரி,

நான்காம் ஆண்டு தேர்வை எழுதாமல் பாதியில் படிப்பை கைவிட்டதாக கூறப்படுகிறது. தேர்வு கேள்வித்தாள் கசிய விடும் கும்பலுடன் ரவி அத்ரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கேள்வித்தாள் மோசடியில் லட்சங்கள் புரளுவதை அறிந்து மருத்துவ படிப்பையே ரவி கைவிட்டுள்ளார். ஏற்கனவே உத்தர பிரதேச மாநிலத்தில் காவலர் தேர்வுக்கான கேள்வித்தாள் லீக் விவகாரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். முன்னதாக, 2012 இல் மருத்துவ நுழைவுத் தேர்வு கேள்வித்தாள் மோசடி மற்றும் 2015 இல் எய்ம்ஸ் முதுநிலைத் தேர்வு கேள்வித்தாளை லீக் செய்த வழக்கிலும் சிறை சென்றது தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தேர்வு முறைகேடு சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட ரவி அத்ரி, தற்போது நீட் தேர்வு கேள்வித்தாளை கசிய விட்டதில் வசமாக சிக்கியுள்ளார்.இவருக்கு முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற ஆரம்ப நாளே அட்டகாசமாக இருப்பதால்  ஐந்து வருடங்களுக்கு மோடியின் அரசு என்ன செய்யப்போகிறதென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரமணி

No comments: