Friday, January 16, 2026

அடக்கு முறைக்கு எதிராக ஈரானைத் திணறடிக்கும் அரபுப் புரட்சி

ஈரானிய மக்களைக் காப்பாற்ற ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்த பட்டத்து இளவரசர். 

  ஈரனியப் புரட்சி அரபு நாடுகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான மன நிலையில்  அரபு நாடுகள் உள்ளன.

 

இரட்டை இலக்க பணவீக்கம், ஈரான் நாணயத்தின் தொடர் மதிப்பிழப்பு, வேலைவாய்ப்பின்மை  பொருளாதார காரணங்களால்  மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கி உள்ளனர். போராட்டக் காரர்களை அடக்குவதற்கு ஈரான் அரசாங்கம்  தனது சக்தியைப் பிரயோகிக்கிறது.

  இதனால் ஈரான் முழுவதும் அசாதாரண நிலை உருவாகியுள்ளது.  கடந்த டிசம்பர்  28 ஆம் திகதி  ஆரம்பமான அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறான.அரசுத் தலைவர் அயதுல்லா கொமெனிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறாங்கிப் போராடத் தொடங்கிவிட்டனர். சுமார் 30 க்கும் மேற்பட்ட  மாகாணங்களில் 100 க்கும் அதிகமான  நகரங்களில் தீவிரமான போராட்டங்கள் நடை பெறூகின்றன.போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் களம்  இறக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வன்முறைகள் ந‌டைபெற்றன. கடந்த வியாழக்கிழமைவரை சுமார்  3,500 பேர் பலியாகினர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியின் மூலம் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இஸ்லாமியத் தலைவரின் கையில் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் ஒரு புரட்சி  ஈரானில்  ஆரம்பமாகி உள்ளது.

ஈரானில் நடைபெறும் போராட்டத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருக்கிறது. போராட்டக் காரர்களுக்கு  ட்ரம்ப்  ஆதரவு தெரிவித்துள்ளார்.  போராடுபவர்களைக் கொல்லக்கூடாது. கைது செய்பவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக்கூடாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தனது நாட்டு உள் விவகாரத்தில்  ட்ரம்ப் மூக்கை நுழைப்பதை ஈரான் விரும்பவில்லை.  ஈரான்  ஊடகம்  ட்ரம்புக்கு மிரட்டல் விடுத்துள்ளது.   கடந்த 2024-ம் ஆண்டு பிரசார கூட்டத்தின் போது    ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காதில் குண்டு உரசிச் சென்று காயமடைந்தார். அந்த புகைப்படத்தை வெளியிட்ட ஈரான் அரசு ஊடகம், ‘இந்த முறை தோட்டாக்கள் இலக்கை தவற விடாது என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

1979ல் ஏற்பட்ட புரட்சி போல் ஈரானில் அயதுல்லா அலி கமேனியின் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூட கருதப்படுகிறது. இதனை உணர்ந்த அரசு போராட்டத்தை கட்டுப்படுத்த இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான்  அமெரிக்காவில் வசிக்கும் ஈரான் பட்டத்து இளவரசரான ரெசா பஹ்லவி  டொனால்ட்  ட்ர‌ம்பிடம் உதவி கேட்டுள்ளார். இந்த ரெசா பஹ்லவி தான் மக்கள் போராட்டத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இவர் ஈரானின் அயதுல்லா கமேனிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்.


ரெசா பஹ்லவி ஈரான் நாட்டை ஆட்சி செய்த கடைசி மன்னரின் மகன் ஆவார். கடந்த 1925 முதல் 1979ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஈரானில் ஆட்சி புரிந்த வம்சத்தின் பெயர் பஹ்லவி. கடந்த 1979ம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிராக புரட்சி வெடித்தது. அப்போது ஈரானை ஆட்சி செய்த மன்னர் பெயர் முகமது ரெசா பஹ்லவி. இவர் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு  தூக்கி எறியப்பட்டார்.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய அமைப்பினர் மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து முகமது ரெசா பஹ்லவியின் குடும்பத்தினர் அமெரிக்கா சென்றனர். அதன்பிறகு தான் ஈரானின் உயர்மட்ட தலைவராக அயதுல்லா ருஹோல்லா கொமேனி பொறுப்பேற்றார். இவரது மறைவுக்கு பிறகு அயதுல்லா அலி கமேனி அந்த பொறுப்பில் உள்ளார். ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெசா பஹ்லவியின் மகன் ரெசா பஹ்லவி தான் தற்போது ட்ரம்பிடம் உதவி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் - திரண்டு வந்து மக்கள் போராட்டம் முந்தைய போராட்டங்களைப் போலல்லாமல், இந்த இயக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவுக்குள் மட்டுமே இல்லை. தொழிலாளர்கள், மாணவர்கள், கடைக்காரர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் பங்கேற்கின்றனர்.

 பொருளாதாரக் கோரிக்கைகளிலிருந்து அரசியல் அமைப்பை நேரடியாக விமர்சிக்கும் நிலைக்கு மாறியுள்ளன. ஈரானில் போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், அதன் ஆட்சி கவிழ்ந்தால் என்ன நடக்கும் என்ற உலகளாவிய கேள்வி எழுகிறது. இதன் தாக்கம் ஈரானின் எல்லைகளைக் கடந்து, ஈரான் ஆதரிக்கும் அல்லது செல்வாக்கு செலுத்தும் பல நாடுகள் மற்றும் குழுக்களையும் பாதிக்கும்.

இஸ்லாமிய அரசாங்கங்கள், தங்கள் நாடுகளிலும் இதே போன்ற போராட்டங்கள் ஏற்படும் என்ற அச்சத்தில் ஈரானை உன்னிப்பாகக் கவனிக்கின்றன. ஒரு நபர் ஆட்சிகள், தேர்தல் இல்லாமல் நடக்கும் ஆட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

ஷியா பெரும்பான்மை நாடுகளில் அரசியல் குழப்பம், தலைமைத்துவப் போட்டி இதனால் எழலாம். வெளிநாடுகளில் ஷியா அமைப்புகள் மீதான ஈரானின் மத செல்வாக்கு பலவீனமடையும். மத ஆட்சியை மக்கள் கவிழ்க்க முடியும் முடியும் என்ற எண்ணம், அரசியல் ரீதியாக பெரிய புரட்சிகளை, பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஈரான் ஆதரவுக் குழுக்களில் தாக்கம்  ஹிஸ்புல்லா, ஹவுதிகள், ஈராக்கிய போராளிக் குழுக்கள் போன்ற ஈரானின் ஆதரவுப் பிரிவுகள் நிதியும் , ஆயுதங்களும்   தொடர்ந்து  கிடைக்க முடியாத நிலை ஏற்படலாம். இந்த நிலையில் இஸ்ரேலின் கை ஓங்கலாம். இஸ்ரேலை எதிர்த்துப் போராடும் குழுக்கள் பலவீனமடையலாம். ஏமன், சிரியா, லெபனான், ஈராக் போன்ற நாடுகளின் நிலையில் மாற்றமடையலாம்.

 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் திங்கள்கிழமை முதல் மெல்ல மெல்ல குறைந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.  கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞர் எர்ஃபான் சோல்டானி-க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியான அறிக்கைகளை ஈரான் நீதித்துறை மறுத்துள்ளது. இதை ஈரான் நீதித்துறை இந்த மறுப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. போராட்டம் குறைய இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


  பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டாரில் உள்ள அல் உதெய்த் விமானப்படை தளத்தில் இருந்து சில  இராணுவப் பணியாளர்களை வெளியேற  அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு, ஈரானின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஈரானில் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா இராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவது ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளின் அமைதியை கெடுக்கும் விஷயமாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வளைகுடா நாடுகள் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகின்றன.  கடந்த வெள்ளிக்கிழமை சவூதி முக்கியமான அறிவிப்பு இன்றை வெளியிட்டுள்ளது.  ஈரான் நாட்டை தாக்க நினைத்தால் அமெரிக்க விமானங்களுக்கு சவூதி வான்பரப்பு, ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சவூதி அரேபியா தெளிவாகவும், திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளது. இதை சவுதி அரேபியா அரசு தரப்பில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமார தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.  ஈரானின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என கட்டாரும், ஓமானும்  இணைந்து வலியுறுத்தியுள்ளன. ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளன.

  இவற்றை எல்லாம்  மீறி ட்ரம்ப் என்ன செய்யப்போகிறார் என்பதை  அறிய உலகம் ஆவலாக உள்ளது.

 2010  ஆண்டுகளில்  துனிஷியா, சிரியா, எகிப்து என்று பல அரபு நாடுகள் வரிசையாக கவிழ்ந்தன‌. இதை அரபு புரட்சி என்பார்கள். அப்படித்தான் ஈரான் போராட்டத்தால் அரபு புரட்சி 2.0 என்று சொல்கிறார்கள். ஈரானில் அமைதி ஏற்பட்டால்தான்  உலக நாடுகளில் அமைதி ஏற்படும். 

வர்மா

18,1,26

  

No comments: