Sunday, October 26, 2008
தமிழக அரசின் எச்சரிக்கையால் ஆட்டம் காணுமா மத்திய அரசு?
இலங்கைப் பிரச்சினையில் இதுவரை காலமும் ஒவ்வொரு கோணத்தில் நின்று கருத்துக் கூறி வந்த தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஓரணியில் நின்று தமது முடிவை உறுதியாகத் தெரிவித்துள்ளன.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கு இரண்டு வார கெடுவை விதித்துள்ளது தமிழக அரசு.
இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு உறுதியான ஒரு முடிவை எடுக்காவிட்டால் தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ராஜ்யசபை உறுப்பினர்களும இராஜினாமாச் செய்வார்கள் என்ற எச்சரிக்கையை தமிழகம் விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை இந்திய அரசு இலங்கைக்கு விடுத்த எச்சரிக்கையாகவே கருத வேண்டி உள்ளது. விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற போர்வையில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்திய அடக்குமுறைகளை அவ்வப்போது கண்டித்து வந்த தமிழக அரசு இலங்கை அரசுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்துள்ளது.
வைகோ, பழ. நெடுமாறன், திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வேறு வேறு அணிகளில் இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் தமது கருத்தை ஒன்றாகக் கூறுவதற்கு என்றுமே பின் நின்றதில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் விஜயகாந்த் உணர்வு பூர்வமாகத் தனது கருத்தை வெளிப்படுத்தி வந்தார். அரசியல்வாதியான விஜயகாந்த் மிக அவதானமாக இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர் அணியில் இருந்தாலும் இலங்கைப் பிரச்சினை என்பது புலிகளின் பிரச்சினை என்ற கொள்கையையே கொண்டுள்ளன. புலிகளை அழித்து விட்டால் இலங்கைப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்ற கருத்திலே இந்த இரண்டு கட்சிகளும் உள்ளன.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதை தெரிந்து கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் தமது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள் ஆகியன நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்தக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியேறி விட்டன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் தலைமையிலான சர்வகட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்காமலே அக்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்வார்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வரை விமர்சித்துவரும் வைகோவும் டாக்டர் ராமதாஸும் முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
விடுதலைப் புலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களின்போது விடுதலைப் புலிகளின் செல்வாக்கும் தலைகாட்டத் தவறுவதில்லை.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடைபெறும் போதும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும் கொல்லப்படும்போதும் கண்டன அறிக்கைகளும், கடிதங்களும், கவிதைகளும், தந்திகளும் அனுப்பிய தமிழக முதல்வர் கருணாநிதி, முடிவைக் காணும் படிகளில் கெடு விதித்தது மத்திய அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்திய அரசின் ஆதரவும் ஆசீர்வாதமும் தனக்கு இருப்பதாக இறுமாப்பிலிருந்த இலங்கை அரசு இதுவரை காலமும் தான் நினைத்ததைச் சாதித்து வந்துள்ளது. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான ஒரு சில நாட்களில் தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கையின் மூலம் இலங்கை அரசை தனது வழிக்கு இழுக்க இந்தியா முயல்கிறது என்ற உண்மை புலப்படுகிறது.
இந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்திருப்பது மத்திய அரசில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. ""பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு'' என்ற வசனம் எழுதிய முதல்வர் இன்று பொறுமையை இழந்து பொங்கி எழுந்துள்ளார்.
தமிழக அரசு மீது இதுவரை இருந்த விமர்சனங்கள் இப்போது திசை மாறிவிட்டன. மின்வெட்டுக் காரணமாக தமிழக அரசுக்கு எதிராக ஆங்காங்கு எழுந்த ஆர்ப்பாட்டங்கள் அடியோடு இல்லாமல் போயுள்ளன. இலங்கை அரசுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெறுகின்றன.
தமிழக அரசின் எச்சரிக்கைக்கு மத்திய அரசு பதில் கூறுவதற்கு முன்னரே முதல்வரின் மகளான கனிமொழி தனது ராஜ்யசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை அரசுக்கு சார்பாக செயற்படும் இந்திய அரசுக்கு ஆதரவு கொடுப்பதை உடனடியாக முதல்வர் வாபஸ் பெற வேண்டும். வாரிசு அரசியலை முதல்வர் ஊக்கப்படுத்துகிறார் என்று குரல் கொடுத்தவர்கள் வாய் மூடிமௌனிகளாக உள்ளனர்.
சரிந்திருந்த தமிழக அரசின் செல்வாக்கு கொஞ்சம் உயர்ந்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தது என்ற கேள்விக்கு கனிமொழியின் இராஜினாமா பதிலாக உள்ளது. கனிமொழியின் இராஜினாமா வைகோவுக்கும், டாக்டர் ராமதாஸுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யாமல் மத்திய அரசை திருப்திப்படுத்தி ஆட்சியைத் தக்கவைத்துள்ளார் முதல்வர் என்ற விமர்சனத்துக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
வைகோவின் கட்சியிலிருந்தும், டாக்டர் ராமதாஸின் கட்சியிலிருந்தும் யாராவது இராஜினாமா செய்யாவிட்டால் முதல்வர் கருணாநிதியின் செல்வாக்கு உயர்ந்து விடும்.
விருப்பம் இல்லாது பெற்ற நடாளுமன்ற உறுப்பினர் பதவியை விருப்பத்துடன் ராஜினாமாச் செய்துள்ளார் கனிமொழி. ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையேயான போட்டியில் கனிமொழி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். இராஜினாமாவின் மூலம் மீண்டும் சுதந்திரப் பறவையாக மாறிவிட்டார் கனிமொழி.
இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசு விடுத்திருக்கும் காலக்கெடு மிகவும் குறுகியது. சுமார் 30 வருடகாலப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு கண்டு விட முடியாது. கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கு இலங்கை அரசு நாள் குறித்திருக்கும் வேளையில் யுத்தம் நிறுத்தப்பட்டால் சிங்கள மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை விவகாரத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது, இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.
வர்மா
18.10.2008 வீரகேசரி வாரவெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment