Sunday, October 26, 2008
ரஜனியைத் சீண்டிய ரசிகர்கள்
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இலங்கைப் பிரச்சினையில் தமது கவனத்தை திருப்பி இருக்கும் வேளையில் ரஜினியை அரசியல் களத்துக்கு இழுத்துவரும் முயற்சியை ரஜினி ரசிகர்கள் செய்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்திருந்த கோவை ரஜினி ரசிகர்கள் தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத்தின் மத்தியில் நட்சத்திரத்தினுள் ரஜினியின் படம் கட்சிக் கொடியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சிக்கான சின்னம் தெரிவு செய்யப்படவில்லை. விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு அங்கத்தவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
ரஜினியின் குரலுக்கு தமிழகத்தில் மதிப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜி.கே. மூப்பனார் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து கருணாநிதியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். அப்போது ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார் ரஜினிகாந்த்.
ஜெயலலிதாவுக்கு எதிராக அலையும் மூப்பனார் கருணாநிதி கூட்டணியின் பலரும், ரஜினிகாந்தின் குரலும், சேர்ந்து ஜெயலலிதாவை தோல்வியடையச் செய்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அரசியல் களத்தில் குதித்தனர்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக குரல் கொடுத்த ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சிக்காக குரல் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் தனது அரசியல் நடவடிக்øகயை அப்படியே மூட்டை கட்டி வைத்து விட்டு சினிமாவில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தமது கதிரைக்கு ஆபத்து ஒன்று வரும் எனப் பயந்த அரசியல் வாதிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் இடையிலான பிரச்சி மீண்டும் அரசியல் பக்கம் ரஜினியை இழுத்து வந்தது. ரஜினி நடித்த பாபா திரைப்படத்தை திரையிடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ரஜினி ரசிகர்கள் அதனை எதிரத்து போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த தேர்தலில் தனது ரசிகர்களைத் தாக்கிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக ரஜினிகாந்த் குரல் கொடுத்தார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளருக்கு ரஜினி வாக்களித்தார். அன்று நடந்த தேர்தலில் ரஜினி வாக்களித்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தோல்வியடைந்தது.
தமிழகத் தேர்தலின் போது ரஜினியின் குரல் ஒரு முறை வெற்றியைத் தேடிக்கொடுத்தது. ஒருமுறை தோல்வியடைந்தது. அரசியலில் இறங்கினால், இப்போது உள்ள நல்ல பெயர் நிலைக்காது என்பது ரஜினிக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர் சினிமாவிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறõர்.
ஆனால்,ரஜினி ரசிகர்களின் கருத்து வேறு மாதிரி உள்ளது. ரஜினி அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அக்கட்சியின் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது ரஜினி ரசிகர்களின் விருப்பம்.
மக்களுக்கு நன்மை செய்வதற்கு அரசியல் கட்சி முக்கியமல்ல. கமலஹாசன் நற்பணி மன்றம் பல நல்ல காரியங்களை முன்னின்று செய்கிறது. அரசியலுக்கு அப்பால், கமல் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்துக்கும் அவரது நற்பணி மன்றம் பக்க பலமாக உள்ளது.
தனது ரசிகர்களுக்கு அரசியல் சாயம் பூசாது இருப்பதனால் அவரால் நிம்மதியாக இருக்க முடிகிறது. ரஜினி நிலை அப்படி அல்ல. அவரது படங்களில் அவர் பேசும் வசனங்கள் அரசியலில் ரஜினி குதிக்கப்போகிறார் என்ற மாயையை உருவாக்கியது. அரசியலுக்கும் தனக்கும் வெகு தூரம் என்பதை குசேலன் படத்தின் மூலம் ரஜினி வெளிப்படுத்தினார்.
ரஜினிக்கு எதிரான சில பத்திரிகைகள் அதனை விமர்சித்து பக்கம் பக்கமாக எழுதின. அரசியலில் இருந்து ரஜினி நழுவுகிறார் என்ற அந்த விமர்சனங்களினால் குசேலன் படத்தின் வசனங்கள் நீக்கப்பட்டன. விமர்சனங்களுக்குப் பயப்படும் ரஜினியால் அரசியலில் நிலைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரஜினியின் செல்வாக்கு சரிந்துள்ளது என்பது லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. சினிமா இது மிக மிக ஆபத்தான முன்மாதிரி ரஜினியை மிரட்டும் இவர்கள் உண்மையில் ரஜினி ரசிகர்கள் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரஜினியை அரசியல் கைதியாக்க ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள்.
ரஜினியின் செல்வாக்கும் அவரிடம் இருக்கும் பண பலமும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போதுமானது. அதேவேளை அவர் இதுவரை கட்டிக்காத்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதும் வெளிப்படை.
ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யப்போகிறாரா? அரசியலை மறந்து விடும்படி ரசிகர்களுக்கு கட்டளையிடப் போகிறாரா என்பதை அறிய தென் இந்தியா காத்திருக்கிறது.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் காவிரிப் பிரச்சினைக்கு எப்படிப்பட்ட முடிவை அவர் எடுப்பார் என்ற முதலாவது கேள்விக்கு விளக்கமான பதிலை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசின் வேண்டுகோளுக்கும் நீதிமன்றத்தீர்ப்புக்கும் தலை வணங்காத கர்நாடக அரசு ரஜினியின் குரலுக்கு இசைந்து கொடுக்காது என்பது திண்ணம்.
ஒகனேக்கல் குடி நீர்த்திட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினிகாந்த் கர்நாடகத்தில் தனது படம் திரையிடப்படுவதற்காக மன்னிப்புப் கேட்டதை தமிழகத்தில் உள்ள ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ரஜினிக்கு எதிராகவே இருப்பார்கள்.
ரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டு தலைமை ஏற்க வரும்படி ரஜினியை அழைக்கிறார்கள்.
நடிகர்களில்
செல்வாக்கானவர் யார் என்ற கேள்விக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான் என்பது கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. அரசியலில் தோற்றாலும், சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக இருந்த சிவாஜி இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை காலமும் மூன்றாம் இடத்தில் இருந்த ரஜினியை முந்திக்கொண்டு விஜய் மூன்றாம் இடத்தைப் பிடித்து ரஜினியை நான்காம் இடத்துக்கு தள்ளிவிட்டார். இந்தக் கருத்துக்கணிப்பு ரஜினி ரசிகர்களை உசுப்பி விட்டது. ரஜினியை முதலமைச்சராக்குவோம் என்று அவர்கள் சபதம் எடுத்துள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்ததை அறிந்தும் ரஜினி வழமைபோல் மௌனம் காக்கிறார்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 12.10.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment