Thursday, November 20, 2008
நிறபேதத்தை துடைத்தெறிந்த ஒபாமாவின் வெற்றி
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹிலாரியும் ஒபாமாவும் அறிவிக்கப்பட்டபோதே ஒபாமாவுக்கு சோதனை ஆரம்பமானது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கிளிங்டனின் மனைவியான ஹிலாரி ஒபாமாவை விட கூடுதலான செல்வாக்குமிக்கவராகத் திகழ்ந்தார்.
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரியா, ஒபாமாவா என்ற கேள்வி எழுந்தபோது ஹிலாரி தான் என்று அனைவரும் ஒருமித்து கூறினார்கள். ஹிலாரியின் செல்வாக்குக்கு முன்னே ஒபாமாவின் செல்வாக்கு தவிடு பொடியானது.
ஹிலாரி, ஒபாமா இருவருமே சரித்திரத்தை திருப்பும் தகுதியுடையவர்கள். ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையடைவார். ஒபாமா வெற்றி பெற்றால் அமெரிக்காவை ஆட்சிசெய்யும் முதல் கறுப்பு இனத் தலைவர் என்ற பெருமை உண்டாகும்.
ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் ஹிலாரி முன்னணி வகித்தார். ஹிலாரியின் பிரசாரத்துக்கு அஞ்சாது எதிர்ப்பிரசாரம் செய்த ஒபாமா இறுதி நேரத்தில் ஹிலாரியை தோற்கடித்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஒபாமா அறிவிக்கப்பட்ட உடனேயே உலகம் அவரை நோக்கத் தொடங்கியது. சரிந்திருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மூக்கை நுழைத்து அங்கிருந்து வெளியேற முடியாது தவிக்கும் அமெரிக்க இராணுவம் ஆகிய இரண்டு முக்கியமானவற்றுக்கு அடுத்த ஜனாதிபதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று உலகம் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க மக்கள் ஈராக் போரை விரும்பவில்லை. பின்லேடனை ஒழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்காவின் தலைமையிலான பன்னாட்டு படை ஆப்கானிஸ்தானில் இருந்து பின்லேடனையும் தலிபான்களையும் கலைத்ததுடன் திருப்தியடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்றுவரை அமைதி திரும்பவில்லை.
பேரழிவு ஆயுதங்களை சதாம் பதுக்கி வைத்திருப்பதாக ஈராக்கினில் நுழைந்த அமெரிக்காவும் நேச நாடுகளும் சதாமைக் கொன்றொழித்ததைத் தவிர வேறு பேரழிவு ஆயுதங்களைக் கண்டு பிடிக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் செல்வாக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளது. ஆகையினால் குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜோன் மெக்கெயினின் பிரசாரக் கூட்டங்களில் கூட அமெரிக்க ஜனாதிபதி புஷ் கலந்து கொள்ளவில்லை. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஒபமாவின் வெற்றியை உறுதி செய்தன. அமெரிக்க செனட் சபையில் 538 உறுப்பினர்கள் உள்ளனர்.
அமெரிக்க மக்களின் வாக்கின் மூலம் ஒபாமாவுக்கு 310 உறுப்பினர்களின் ஆதரவும் மக்கெயினுக்கு 130 செனட் சபை உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கருத்து கணிப்பை விட அதிகப்படியான செனட்சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒபாமா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒபாமாவும் மெக்கெயினும் கடந்த ஒருவருடமாக பிரசாரம் செய்து வந்தனர். பிரசõரத்தின் போது ஒபாமாதான் முன்னணி வகித்தார். வெள்ளை இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அமெரிக்காவில் கறுப்பின இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது 21 ஆம் நூற்றாண்டின் புரட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமது மனதில் இன, மத, மொழி, கலாசார பேதம் இல்லை என அமெரிக்க மக்கள் உலகுக்கு எடுத்தியம்பி உள்ளனர். அமெரிக்கா மிக வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. உலகின் பல நாடுகளில் உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களைத் தனது நாட்டு மக்களாக அங்கீகரித்துள்ளது. வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று குடியேறிய மக்கள் அமெரிக்காவின் எண்ணப்படி வாக்களித்து கறுப்பு இனத் தலைவனை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க மக்களின் நிறம் மட்டும் வெள்ளை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலம் மட்டும் வெள்ளை இல்லை அமெரிக்க மக்களின் மனமும் வெள்ளைதான் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர் அமெரிக்க மக்கள்.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றின் அணுகுமுறையில் அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி உலகளாவியரீதியில் எழுந்துள்ளது. புஷ்ஷின் கொள்கைகளில் இருந்தும் அரசியல் அணுகுமுறைகளில் இருந்தும் பெரியளவில் மாற்றத்தை ஒபாமாவால் ஏற்படுத்த முடியாது.
ஈராக்கில் நிலை கொண்டுள்ள பன்னாட்டுப் படைகள் படிப்படியாக விலத்தப்படும் என்ற ஒபாமாவின் உறுதி மொழி நிறைவேறுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதற்கு இப்போதைக்கு விடை காண முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பையும் மீறித்தான் ஈராக் மீது புஷ் போர் தொடுத்தார். பன்னாட்டு படைகளால் சின்னாபின்னமாகி உள்ள ஈராக்குக்கு ஒபாமா என்ன செய்யப் போகிறார் என்பதை அறிவதற்கு உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
அமெரிக்காவை மட்டுமல்லாது உலகையே வழி நடத்தும் பொறுப்பு ஒபாமாவின் கைகளில் வழங்கப்பட்டுள்ளது. யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் தமது விடிவுக்கு ஒபாமா எப்படி உதவப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஒபாமாவின் கரங்களை வலுப்படுத்தப் போவதால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோன் மெக்கெயின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வளர்ச்சிக்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுவது என்றும் புதிதல்லவா தோல்வியை ஏற்றுக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்க்கட்சி தயாராகிவிட்டது.
அமெரிக்காவுக்கு இதுவரை ஏற்பட்ட மோசமான விமர்சனங்களைக் களைந்தெறிந்து புதிய அமெரிக்காவை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஆற்றல் ஒபாமாவுக்கு உண்டு என்று அமெரிக்க மக்கள் கருதுகின்றனர்.
ரமணி:
மெட்ரோ நியூஸ், 07.11.2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஒபாமாவின் தந்தை ஒரு முஸ்லீமாக இருந்த போதும், பெரும்பான்மை வெள்ளையினத்தவர்களை போல கிறிஸ்தவராக இருப்பது மட்டுமல்ல, யூத மதத் தலைவர்களுக்கும் ஆதரவாக நடந்து கொள்வதை சுட்டிக்காட்டும் ஸவாஹிரி, இதனால் ஒபாமா ஒரு துரோகியாக பார்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
புதிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, "பராக் ஹுசைன்" என்ற அரபு இஸ்லாமியப் பெயரை கொண்டிருப்பதும், தந்தை கென்யாவை சேர்ந்த இஸ்லாமியர் என்பதும், அவர் தெரிந்தெடுத்த முதன்மை ஆலோசகர் ராம் இமானுவேல், கடும் போக்கு சியோனிச யூத குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கில உப தலைப்புகளுடனான முழுமையான வீடியோ இத்துடன் இணைக்க பட்டுள்ளது.
http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_20.html
Post a Comment