Tuesday, May 25, 2010

உலகக்கிண்ணம்2010


இத்தாலி 1990
இத்தாலியில் நடைபெற்ற 14 ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்று மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. மேற்கு ஜேர்மனி மூன்றாவது தடவையாக தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடியது. 1982 ஆம் ஆண்டு இத்தாலியிடமும் 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடமும் தோல்வியடைந்தது. 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்த மேற்கு ஜேர்மனி 1990 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக 116 நாடுகள் தகுதிகாண் போட்டிகளில் விளையாடின. அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. டென்மார்க், பிரான்ஸ், போர்த்துக்கல் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை. கொஸ்ரரிகா, அயர்லாந்து குடியரசு, அமெரிக்கா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற 24 நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற நாடுகள் இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமருன், எகிப்து, ஆசியக் கண்டத்தில் இருந்து கொரியக் குடியரசு (தென் கொரியா), ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், செக்கஸ்லோவியா, இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, அயர்லாந்து குடியரசு, ரொமானியா, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன் (ரஷ்யா), ஸ்பெய்ன், சுவீடன், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிகா, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
குழு "ஏ' யிலிருந்து இத்தாலி, செக்கஸ்லோவாகிய ஆகிய நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செக்கஸ்லோவாகியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. குழு "பீ' யிலிருந்து கமரூன், ரொமானியா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. ரொமானியா, ஆர்ஜென்ரீனா ஆகியவற்றை வீழ்த்திய கமரூனை 4 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சோவியத் யூனியன் அதிர்ச்சியளித்தது. ரொமானியா ஆர்ஜென்ரீனா ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு "சீ' யில் இருந்து பிரேஸில், கொஸ்ரரிகா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு "டி' யில் இருந்து மேற்கு ஜேர்மனி, யூகோஸ்லாவியா, கொலம்பியா ஆகியனவும் குழு "ஈ' யிலிருந்து ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே ஆகியனவும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு "எஃ' பில் இங்கிலாந்து, அயர்லாந்து குடியரசு, நெதர்லாந்து, எகிப்து ஆகியன போட்டியிட்டன. எகிப்துடனான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஏனைய இரண்டு போட்டிகளையும் சமநிலையில் முடித்ததில் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது. அயர்லாந்து குடியரசு, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தலா மூன்று போட்டிகளில் விளையாடின. மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நிலையில் இரு நாடுகளும் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகின.
இரண்டாவது சுற்றில் விளையாடிய யூகோஸ்லாவியா பெனால்டி மூலம் 2 3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வி அடைந்தது. அயர்லாந்துக் குடியரசுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. செக்கஸ்லோவியாவுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது. கமரூன், இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 2 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மேலதிக நேரத்தில் இங்கிலாந்து ஒரு கோல் அடித்ததனால் 3 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இத்தாலி, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெனால்டி மூலம் 4 3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதியில் 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்டி மூலம் 4 3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இத்தாலி, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி மூன்றாம் இடத்தையும் தோல்வி அடைந்த இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன.
மேற்கு ஜேர்மன், ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கோல் அடிக்காது தோல்வி அடைந்த முதலாவது நாடு ஆர்ஜென்ரீனா.
ஜேர்மனி 15 கோல்களையும், இத்தாலி, செக்கஸ்லோவாகிய ஆகியன தலா 10 கோல்களையும் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த ஸ்கிலாஸ்கி (இத்தாலி), ஐந்து கோல்கள் அடித்த ஸ்குரி (செக்கஸ்லோவாகியா), நான்கு கோல்கள் அடித்த மில்லா கமரூன் ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஸ்கிலாஸ்கிக்கு கோல்ட்ஷீ வழங்கப்பட்டது.
ஸ்கிலாஸ்கி (இத்தாலி), மத்தியூஸ் (ஜேர்மனி), மரடோனா (ஆர்ஜென்ரீனா) ஆகியோர் கோல்டன் பந்துக்காக பரிந்துரைக்கப்பட்டனர். ஸ்கிலாஸ்கிக்கு கோல்டன் பந்து வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக ரொபேட் புரொஸ்ங்கி தெரிவானார். முறை தவறாத அணியாக இங்கிலாந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. 52 போட்டிகளில் 116 கோல்கள் அடிக்கப்பட்டன. 2516348 பேர் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்.
இத்தாலி, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆட்டம் இடை நிறுத்தப்பட்ட எட்டு நிமிடத்தைக் கணக்கில் சேர்க்காது மத்தியஸ்தர் ஆட்டத்தை நிறுத்தி விட்டார்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதன் முதலில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரர் ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த பெற்றோமன்ஸின், நைஜீரியா, அங்கோலா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற தகுதிகாண் போட்டியின் போது 23 வயதான நைஜீரிய வீரர் சாமுவேல் எக்காவாஜி மாரடைப்பால் மரணமானார்.
20 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் வயது கூடிய வீரர்கள் விளையாட அனுமதித்தபடியால் மெக்ஸிக்கோவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டாவது முறையாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய நாடு என்ற பெருமையைப் பெற்றது. அயர்லாந்துக் குடியரசு கடைசியாக விளையாடிய எட்டுப் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இதேவேளை இரண்டு கோல்கள் அடித்தது. அக்கோல்களும் பெனால்டி மூலம் அடிக்கப்பட்டன.
1974 ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனி உலகக் கிண்ணத்தை வென்ற போது அணித் தலைவராக இருந்த பிரான்ஸ் பெக்கன் பௌச்சர் 1990 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் பயிற்சியாளராவார்.
கமரூனைச் சேர்ந்த ரொஜர்மில்லா (38 வயது 20 நாட்கள்) கூடிய வயதில் கோல் அடித்த வீரராவார். இரண்டாவது சுற்றில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் இச்சாதனையைச் செய்தார். நான்கு வருடங்களின் பின்னர் இச்சாதனையை இவரே முறியடித்தார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

No comments: