Tuesday, May 18, 2010

சட்டசபைத் தேர்தலுக்குதயாராகிறது தமிழகம்


செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்கத் துரித கதியில் செயற்படும் தமிழக முதல்வர் கருணாநிதி உரிய காலத்துக்கு முன்னரே தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் உள்ளது. அறுதிப் பெரும்பான்மை இல்லாது காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்யும் முதல்வர் கருணாநிதி கூட்டணிக் கட்சியின் தயவு இன்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமைச்சர் மு. க. அழகிரியின் தயவு கண்டிப்பாகத் தேவை என்பதை முதல்வர் கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளார். ஆகையினால் மு. க. அழகிரியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் அழகிரியின் கை ஓங்கும் வகையில் அவருக்கு பொறுப்பான பதவி ஒன்று கொடுக்கப்படலாம்.
அமைச்சர் அந்தஸ்துடன் அரசியல் படிக்க டில்லி சென்ற அழகிரிக்கு டில்லி அரசியல் கசந்துவிட்டது. மீண்டும் தமிழகத்தில் கால் பதிக்க விரும்புகிறார். அழகிரியின் தமிழகப் பார்வை துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் ஸ்டாலினும் அழகிரியும் மோதினால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்பதனால் இருவரும் இணைந்து செயற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலையில் உள்ள இவ் வேளையில் தமிழக சட்ட சபைத் தேர்தலை நடத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து துணை முதல்வர் ஸ்டாலினை முதல்வராக்கி விட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் இன்றைய அரசியல் நிலைமை அவர் ஓய்வெடுப்பதைத் தள்ளிப் போட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான சூழ்நிலை இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தான் இணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொண்ட வைகோ, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருப்பதையே விரும்புகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கட்சியும் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெகு தூரம் தள்ளி நின்றனர். தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல்களின் போது ஜெயலலிதா வேண்டுகோள் விடுக்காமலே தமது ஆதரவைத் தெரிவித்தன இடதுசாரிகள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் இருக்கும் இடதுசாரிகள் தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவை ஆதரிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் இடதுசாரிகள், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் சூழ்நிலை ஏதுமில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி மிகவும் இறுக்கமாக இருப்பதனால் இடதுசாரிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கத்துக்கு சாய்ந்துள்ளன.
எந்தப் பக்கமும் சாராமல் அந்தரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை மிகப் பரிதாபகமாக உள்ளது. தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் திகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் தேடுவாரின்றி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தம்மால் சாதிக்க முடியும் என்பதை பென்னாகரம் இடைத் தேர்தலில் நிரூபித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
வன்னியர் சமூகம் அதிகளவில் வாழும் தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதை பென்னாகரம் இடைத் தேர்தல் வெளிக்காட்டி உள்ளது. ஆகையினால் பாட்டாளி மக்கள் கட்சியை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவதை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை. என்றாலும் முதல்வர் கருணாநிதி கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருந்த போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார் டாக்டர் ராமதாஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமானதும் தமிழக அரசு மீதான டாக்டர் ராமதாஸின் விமர்சனம் மிக மோசமாக இருந்தது. காடு வெட்டி குரு போன்றவர்களின் பேச்சு எல்லை மீறியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியதும் டாக்டர் ராமதாஸும் அவரது பரிவாரங்களும் அமைதியாகி விட்டனர். சட்டமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் எண்ணத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி சாதகமான சமிக்ஞை வரும் வரை அமைதியாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிக்க முடியாத வகையில் நெருக்கமாக உள் ளது. காங்கிரஸ் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிடிக்கா ஒரு சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப் போது திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அறிக்கை விடுவார்கள். அல்லது வீராவேசமாகப் பேசுவார்கள். இதையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் எப்படித்தான் எம்பிக் குதித்தாலும் இறுதியில் சோனியா காந்தியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று கூறி விட்டு அமைதியாகி விடுவார்கள்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. அதற்கு ஏதுவாகவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்க உள்ளார். தமக்கு அதிக தொகுதிகளைத் தருபவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம் என்று அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி கூறியுள்ளார். சிதம்பரம், ஜி. கே. வாசன், தங்கபாலு, இளங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி பற்றி எதுவும் பேசாத நிலையில் கூட்டணி அமைப்பது பற்றி கார்த்தி பேசியது திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தியுடன் கார்த்தி மிக நெருக்கமானவர் என்பதனால் ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் தான் கார்த்தி பேசி இருப்பார் என்று கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் செயற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரிக்கையுடன் அவதானித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பும் ராகுல் காந்தி திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை முறிக்க வேண்டும் என்று விரும்புகிறார். தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் அதரவு தேவை என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நன்கு புரிந்துள்ளனர். ஆகையினால் ராகுல் காந்தியின் எண்ணம் நிறைவேறுவதற்கான சூழ்நிலை இல்லை என்பது வெளிப்படை.
தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவிக் காலம் ஜூன் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அன்பு மணியின் பதவிக் காலம் ஜூன் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அன்பு மணியின் எதிர்காலம் முதல்வர் கருணாநிதியின் கையில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் அன்புமணியை ராஜ்யசபா உறுப்பினராக்கினால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு விடும்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 16/05/10

No comments: