Saturday, May 15, 2010

அழகிரியினால் நெருக்கடியைஎதிர்நோக்கும் கருணாநிதி


தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய ரயில், பஸ் மறியல் போராட்டம் பிசுபிசுத்து விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகம் முழுவதும் பஸ், ரயில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. விலைவாசி உயர்வினால் தமிழக மக்கள் பலத்த இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் விடுத்த போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களில் மனதைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. விலைவாசி உயர்வு தமிழக மக்கள் மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விலைவாசி உயர்வினால் மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. விலைவாசி மக்களை பாடாய்ப்படுத்தும் அதேவேளை மின் தடை தமிழகத்தில் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின் தடை எதிர்காலத்தில் இருக்காது என்று அமைச்சர் பலமுறை உறுதி கூறியும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. விலை ஏற்றம், மின் வெட்டு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. பஸ், ரயில் மறியல் போராட்டம் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தது போன்று பெரிய அளவில் நடைபெறவில்லை.
தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் பெயரளவில் அறிவித்தமை தவிர முழு அளவில் போராட்டம் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை. தமிழக அரசுக்கு எதிராக நடைபெற அறிவிக்கப்பட்ட பஸ், ரயில் மறியல் போராட்டத்தின் மூலம் மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டு அதன் காரணமாக மக்கள் தம் மீது குற்றம் சுமத்தி விடுவார்களோ என்ற பயமும் எதிர்க்கட்சிகளிடம் இருந்தது.
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதை சரிவர ஆராயாமல் திட்டமிடப்பட்ட மறியல் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. முறையாகத் திட்டமிடாமலும் மக்களின் ஆதரவு இல்லாமலும் நடத்தப்பட்ட மறியல் போராட்டம் பிசுபிசுத்ததினால் தமிழக அரசு மகிழ்ச்சியில் உள்ளது. இதேவேளை அம்பேத்கர் சிலை திறப்பு விவகாரத்தினால் தமிழக அரசு கடும் சீற்றத்துடன் உள்ளது.
சென்னை நீதிமன்றத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ளக் கூடாது. அதையும் மீறி கலந்து கொண்டால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று சட்டத்தரணிகள் எச்சரிக்கை விடுத்தனர். நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் மறியல் செய்த போது அதனைக் கலைப்பதற்கு பொலிஸார் முயற்சி செய்தனர். பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி நடத்தப்பட்ட போராட்டத்தை பொலிஸார் கலைத்த போது பொலிஸாருக்கும், சட்டத்தரணிகளுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப் போவதாக சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.
சட்டத்தரணிகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டார்கள். கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்ட போதும் முதல்வர் கருணாநிதி தனது பேச்சை நிறுத்தாது தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்கு முதல்வர் தடையாக இருந்தால் நீதிமன்றத்தின் உதவியுடனேயே அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று நடுநிலையான சட்டத்தரணிகள் கருத்துக் கூறி உள்ளனர். அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ததை நடு நிலையாளர்கள் விரும்பவில்லை.
இதேவேளை, மத்திய அமைச்சர் அழகிரியின் விவகாரம் முதல்வருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் கேள்வி நேரங்களில் அதற்குரிய பதிலை அமைச்சர் கொடுக்க வேண்டியது அமைச்சரின் முக்கிய பொறுப்பு. அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அமைச்சர் அழகிரி பற்றி பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அழகிரியின் நடவடிக்கையினால் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சரளமாக உரையாட முடியாமையினால் வாய்மூல வினாக்களுக்கு அமைச்சர் அழகிரி நாடாளுமன்றத்தில் பதிலளிப்பதைத் தவிர்த்து வருகிறார். அமைச்சர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதிலளிக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியாத அழகிரி தமிழில் பதிலளிக்க அனுமதி கோரினார். அழகிரிக்காக நாடாளுமன்ற வழமையை மாற்ற முடியாது அஎன்று பதிலளிக்கப்பட்டதனால் துணை அமைச்சர் வாய்மூலக் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். ஆனால் தாம் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சரிடம் இருந்தே பதில் வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அமைச்சர் அழகிரியின் பலவீனத்தைத் தெரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றன.
நாடாளுமன்றத்தில் அழகிரியை பற்றி சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கையில் அவர் வெளிநாட்டில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் அழகிரியின் பிரச்சினையைப் பற்றி பேசி முடிவு காண்பதற்காக சபாநாயகர் பலமுறை அழைப்பு விடுத்தும் சபாநாயகரை அமைச்சர் அழகிரி சந்திக்கவில்லை.
மத்திய அரசில் அழகிரிக்கு விருப்பம் இல்லை. தமிழகத்தில் தனது பிடியை பலமாக்க அழகிரி விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது அடிக்கடி சுமத்தப்படுகிறது. அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்று அழகிரி கூறி வருகிறார். ஆனால் அவரது நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்கும் போது தமிழகத்தில் தனது கை ஓங்க வேண்டும் என்று விரும்புவது புலனாகின்றது.
கருணாநிதியைத் தவிர வேறு எவரையும் தலைவராக ஏற்க மாட்டேன். தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவேன் என்பன போன்ற அதிரடிப் பேட்டிகளினால் தமிழகத்தில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்கு அழகிரி விரும்புகின்றார் என்பது புலனாகின்றது. தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவேன். அவர் விரும்பினால் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவேன் என்றெல்லாம் பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர் அழகிரி, துணை முதலமைச்சர் ஸ்டாலினைத் தலைவராக ஏற்கமாட்டார் என்பது வெளிப்படையானது.
கட்சியையும் தமிழகத்தையும் தனது அரசியல்வாரிசான ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் முதல்வர் கருணாநிதியின் விருப்பத்துக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர். ஸ்டாலின் தலைவராவதையும் முதல்வராவதையும் விரும்பாதவர்களும் முதல்வரின் விருப்பத்துக்கு தலையாட்டினர். ஸ்டாலினை விரும்பாதவர்களுக்கு அழகிரியின் அதிரடி அறிக்கைகள் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
அழகிரி அமைச்சரான போது அவருக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் சரளமாகத் தெரியாது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது பல சவால்களை முறியடித்த அழகிரி ஆங்கிலமும் ஹிந்தியும் கற்று சவாலை முறியடிப்பார் என்று கூறப்பட்டது. ஆங்கிலமும் ஹிந்தியும் கற்பது பெரிய விடயமல்ல. அவற்றைக் கற்றுத் தேர்ந்து விட்டால் தமிழக அரசியலில் செல்வாக்குக் காட்ட முடியாது, அதனால்தான் அழகிரி ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் படிப்பதில் அக்கறை காட்டவில்லை என்ற கருத்தும் தமிழகத்தில் உள்ளது.
எத்தனையோ அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வெற்றி பெற்ற முதல்வர் கருணாநிதி, அழகிரியின் விவகாரத்தையும் சரியான முறையில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை கட்சித் தொண்டர்களிடம் உண்டு.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 02/05/10

No comments: