Saturday, May 22, 2010

உலகக்கிண்ணம்2010


ஸ்பெய்ன்1982
ஸ்பெயினில் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய இத்தாலி மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தைப் பெற்றது. ஆசியக் கண்டத்தில் இருந்தும் ஆபிரிக்க கண்டத்தில் இருந்தும் அதிகளவான நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதுவரை காலமும் 16 நாடுகளே உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றின. இந்த ஆண்டு முதல் 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றின.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் தகுதிகாண் போட்டிகளில் 109 நாடுகள் விளையாடின. அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை பெற்றன. 1978ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்தும் மெக்ஸிக்கோவும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட தகுதி பெறவில்லை.
அல்ஜீரியா, கெமரூன்,ஹொண்டூராஸ், குவைத், நியூஸிலாந்து ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து அல்ஜீரியா, கெமரூன், ஆசிய கண்டத்தில் இருந்து குவைத், ஓசியானிக் தீவுகளிலிருந்து நியூஸிலாந்து, ஐரோப்பா கண்டத்திலிருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, வட அயர்லாந்து, போலந்து, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், ஸ்பெயின், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து எல்சல்வடோர், ஹொண்டூராஸ், தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, பெரு ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் முதல் சுற்றில் விளையாடின. முதல் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இரண்டாவது சுற்றுக்குத் தெரிவான 12 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா மூன்று நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெறும் ஒரு நாடு அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெறும் வகையில் போட்டி அமைக்கப்பட்டது.
முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்றன. இரண்டாவது சுற்றுக்கு எந்த நாடு தெரிவாகும் என்பதை முன் கூட்டியே எதிர்வு கூற முடியாத நிலை ஏற்பட்டது. குழு 1இல் போலந்து, இத்தாலி, பெரு, கெமரூன் ஆகியன போட்டியிட்டன. பெருவுக்கு எதிரான போட்டியில் 51 என்ற கோல் கணக்கில் போலந்து வென்றது. ஏøனய ஐந்து போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தன. இத்தாலி, பெரு இத்தாலி, கெமரூன் ஆகியவற்றிற்கிடையேயான போட்டிகள் 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன. இத்தாலி, போலந்துபெரு, கமரூன் போலந்து, கமரூன் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 00 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன.
ஒரு வெற்றியைப் பெற்று இரண்டு போட்டிகளை சமநிலையில் முடித்த போலந்து நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. இத்தாலி, கமரூன் ஆகிய நாடுகள் விளையாடிய மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிந்ததால் தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. கூடிய கோல்கள் அடித்த இத்தாலி இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. ஜேர்மனி, ஒஸ்ரியா, அல்ஜீரியா, சிலி ஆகியன குழு 2இல் மோதின. மூன்று போட்டிகளிலும் சிலி தோல்வி அடைந்தது. ஜேர்மனி, ஒஸ்ரியா, அல்ஜீரியா ஆகியன தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியில் தோல்வி அடைந்தன. மூன்று நாடுகளும் தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் ஜேர்மனியும் ஒஸ்ரியாவும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா, ஹங்கேரி, எல்சல்வடோர் ஆகியன குழு 3இல் விளையாடின. தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. எல்சல்வடோருக்கெதிரான போட்டியில் 101 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி அதி கூடிய கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
குழு நான்கில் இருந்து மூன்று வெற்றிகளைப் பெற்ற இங்கிலாந்தும், ஒரு வெற்றியைப் பெற்ற பிரான்ஸும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு நான்கில் விளையாடிய வட அயர்லாந்து, ஸ்பெயின், யூகோஸ்லாவியா ஆகியன தலா ஒரு வெற்றியைப் பெற்றன. நான்கு புள்ளிகளைப் பெற்ற வட அயர்லாந்து இரண்டாவது சுற்றுக்கு எளிதாகத் தெரிவாகியது. ஸ்பெயின், யூகோஸ்லாவியா ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் ஸ்பெயின் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. குழு ஆறில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளைப் பெற்ற பிரேஸில் இரண்டாவது சுற்றை உறுதி செய்தது. சோவியத் யூனியன், ஸ்கொட்லாந்து ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் சோவியத் யூனியன் இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றது.
முதற் சுற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 12 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒரு குழுவில் தலா மூன்று நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெறும் நாடு அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. போலந்துக்கும் இத்தாலிக்கும் இடையே நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான போட்டி 33 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஆட்ட நேரம் முடிந்து மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்திலும் வெற்றி தோல்வி இன்றி போட்டி முடிவடைந்ததினால் பெனால்டி முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் முதலாவது பெனால்ட்டி முறையில் 54 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலன் திரைஸ் பெனால்டியை கோலாக்கிய முதலாவது வீரராவார்.
அரையிறுதியில் தோல்வியடைந்த போலந்திற்கும் பிரான்ஸுக்கும் இடையிலான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போலந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தோல்வியடைந்த பிரான்ஸ் நான்காவது இடத்தைப் பிடித்தது. ஜேர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.
பிரான்ஸ் 16 கோல்களும், பிரேசில் 15 கோல்களும், ஹங்கேரி, இத்தாலி, ஜேர்மனி ஆகியன தலா 12 கோல்களும் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த பேலோரோசி (இத்தாலி) 5 கோல்கள் அடித்த ரம்மரிஞ்சி (ஜேர்மனி), நான்கு கோல்களை அடித்த சிகோ(பிரேஸில்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரோசிக்கு கோல்டன் ஷூ வழங்கப்பட்டது. அடிடாஸ் கோல்டன் பந்துக்கான விருதுக்கு ரோசி (இத்தாலி), பல்கயோ (பிரேஸில்), ரம்பரிஞ்சி (பிரான்ஸ்) ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. கோல்டன் பந்தை ரோசி தட்டிச் சென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை ரொமோரோஸ் (பிரான்ஸ்) பெற்றார். முறைகேடின்றி நேர்மையாக விளையாடிய விருது பிரேஸிலுக்கு வழங்கப்பட்டது. 52 போட்டிகளில் 146 கோல்கள் அடிக்கப்பட்டன. 2,109,723 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்.
பிரான்ஸிற்கும் குவைத்திற்கும் இடையேயான போட்டியின் போது நடுவர் தவறான கோல் வழங்கியதால் குவைத் இளவரசர் மைதானத்துள் சென்று நடுவருடன் வாதிட்டார். தவறு செய்த நடுவர் இடைநிறுத்தப்பட்டார். குவைத் இளவரசருக்கு 14,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இத்தாலி அணித் தலைவர் டினோஸீஃப் சம்பியன் அணியை வழிநடத்திய வயது கூடியவர் என்ற பெருமையைப் பெற்றார். 40 வயதில் உலகக் கிண்ணத்தை தனது நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தார். வட அயர்லாந்து வீரரான நோர்மன் 17 வருடம் 42 நாட்களில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய வயது குறைந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரரான பிரைன் ரொட்ஸன் 27 வினாடிகளில் கோல் அடித்து ஆகக் குறைந்த நேரத்தில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

No comments: