Monday, May 24, 2010

ஜெயலலிதாவுக்கு எதிராககளமிறங்கும் குஷ்பு


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அடிக்கடி சென்று ஓய்வு எடுக்கும் சிறுதாவூர் பங்களாவை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் கே. பி. சிவசுப்பிரமணியம் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சிறுதாவூர் சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதனால் இந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்த முடியவில்லை.
தமிழக அரசியலைப் பற்றி அறிந்தவர்களுக்கு பரிச்சயமான பெயர் சிறுதாவூர். ஜெயலலிதா சென்னையில் இருப்பதை விட சிறுதாவூரில் ஓய்வு எடுப்பது அதிக நாட்கள். தமிழக அரசியலின் பல முக்கிய முடிவுகளை சிறுதாவூரில் இருந்து கொண்டே ஜெயலலிதா எடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிறுதாவூர் என்ற கிராமம் உள்ளது. சிறுதாவூரில் உள்ள பிரமாண்ட பங்களாவில் ஜெயலலிதாவும், அவரது உடன் பிறவா சகோதரி சசிகலாவும் அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பார்கள். இந்த பங்களா அமைந்துள்ள இடம் அங்குள்ள ஆதி திராவிடர்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டது. அரசாங்கத்தால் ஆதி திராவிடருக்கு வழங்கப்பட்ட நிலம் திட்டமிடப்பட்டு அபகரிக்கப்பட்டதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது.
ஜெயலலிதாவுக்கு எதிராக மார்க்ஸிஸ்ட் கட்சி மிக மும்முரமாக இருந்த காலகட்டம். சிறுதாவூர் நிலம் அபகரிக்கப்பட்டதா என்ற உண்மையை அறிவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது. சிறுதாவூர் நிலம் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் வேறு பல காரணங்களினாலும் நீதிபதி கே. பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான அறிக்கை வெளிவருவது காலதாமதமானது.
சிறுதாவூர் கிராமத்தில் உள்ள நிலமற்ற 20 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 2.50 ஏக்கர் வீதம் 1967 ஆம் ஆண்டு வருவாய்துறை வழங்கியது.
"இந்த நிலத்தை 25 வருடங்களுக்கு விற்பனை செய்ய முடியாது. ஆனால் 1983 ஆம் ஆண்டு இந்த நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது. நிலத்தை விற்பனை செய்ததும் வாங்கியதும் சட்டப்படி விரோதமானது, எனவே அந்த நிலத்தை சட்டப்படி அரசு கையகப்படுத்த வேண்டும். அதனை ஏழை ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். பணத்துக்காக சட்டத்தை மீறியவர்கள் மீது எதுவித கருணையும் காட்டக் கூடாது' என்றும் கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிசன் பரிந்துரை செய்துள்ளது.
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட சிறுதாவூரில் பிரமாண்டமான பங்களா கட்டியதற்காக ஜெயலலிதா மீதும், சசிகலா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. சிறுதாவூரிலும் சட்டவிரோதமாக வாங்கப்பட்ட நிலம் ஜெயலலிதா சசிகலா பெயரில் இல்லை. பரணி ரிசோர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரிலேயே சிறுதாவூர் பங்களா கட்டப்பட்ட நிலம் உள்ளது. பரணி ரிசேர்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.
சிறுதாவூர் நிலம் சட்ட விரோதமாக வாங்கப்பட்டது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு உண்மை என்பது கே. பி. சிவசுப்பிரமணியம் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. தமது குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டாடும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை முழு மூச்சாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி, இப்போது ஜெயலலிதாவின் பக்கம் சாய்ந்துள்ளது. தமிழகத்தில் எந்தக் கூட்டணியிலும் இல்லாத மார்க்சிஸ்ட் கட்சி அடுத்து வரும் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கும் மனநிலையில் உள்ளது. ஆகையினால் இதனைப் பெரிதுபடுத்துவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை.
நீதிபதி கே. பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிசன் வெளியிட்ட அறிக்கை பற்றி ஜெயலலிதா எதுவும் தெரிவிக்கவில்லை. இதேவேளை, சிறுதாவூர் பங்களாவை அரசாங்கம் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்கு சகல முயற்சிகளையும் ஜெயலலிதா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பிரபல நடிகையான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார் என்ற செய்தி கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார தொலைக்காட்சியான ஜெயா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார தொலைக்காட்சியான கலைஞர் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் என்ற செய்தி அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரிடமும் மதிப்பைப் பெற்ற குஷ்புவின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இருப்பவர் யார் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் திடுதிப்பென திரõவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார் குஷ்பு. குஷ்புவின் அரசியல் பிரவேசம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தால் ஜெயலலிதõ அமைதியாக இருந்திருப்பார். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் குஷ்பு சேர்ந்தது ஜெயலலிதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜாக்பாட் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஜாக்பாட் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
குஷ்பு நடிகையே தவிர, அரசியல்வாதி அல்ல. சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற அனைவரும் வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற பெண்களில் ஜெயலலிதா மட்டும்தான் செல்வாக்காக உள்ளார். ஏனையோர் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டனர். இன்னும் சிலர் கட்சியின் பிரசாரக் கூட்டங்களில் மட்டும் கலந்து கொள்கின்றனர்.
அரசியல் பின்னணி எதுவும் இல்லாத குஷ்புவினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அபரிமிதமாக உயரப் போவதில்லை. நடிகையாக உள்ள குஷ்புவின் பின்னால் ஏராளமான ரசிகர் பட்டாளமும் இல்லை. நடிகை குஷ்புவுக்கான ரசிகர் மன்றம் எதுவும் கிடையாது. ஆனால், தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடம் செல்வாக்குள்ளவராகத் திகழ்கிறார் குஷ்பு.
தமிழகத்தின் பெண் வாக்காளர்களில் ஜெயலலிதாவுக்கென்று தனி இடம் உள்ளது. ஜெயலலிதாவின் பின்னால் உள்ள பெண் வாக்காளர்களைக் கவர்வதற்காக குஷ்பு அரசியலில் இறக்கப்பட்டுள்ளார். அரசியலில் இணைந்த கையுடன் அதிரடியாக ஜெயலலிதாவை எதிர்த்து போர்க் கொடி தூக்கியுள்ளார் குஷ்பு.
ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார். ஜெயலலிதாவை எதிர்க்கக் கூடிய துணிச்சலுள்ள பெண் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் குஷ்புவை தன் பக்கம் ஈர்த்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் செல்வாக்கும் ஜெயலலிதாவைத் தோற்கடிக்கலாம் என்று குஷ்பு கருதுகிறார்.
குஷ்புவின் அரசியல் பிரவேசம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கற்பு, திருமணத்துக்கு முன்னைய உறவு போன்றவற்றினால் ஏற்பட்ட சர்ச்சை நீதிமன்றம் வரை குஷ்புவைக் கொண்டு போய் நிறுத்தியது. சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சில விடயங்களை குஷ்பு பேசும் போது அது கட்சியைப் பாதிக்கும் என்று ஒரு சிலர் கருதுகிறார்கள்.
ஜெயலலிதாவை எதிர்க்கத் துணிவுள்ள ஒரு பெண்ணை திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலில் இறக்கியுள்ளது. தமிழக சட்ட சபையில் ஏற்படுத்தப்பட இருக்கும் மேல் சபையில் குஷ்புவுக்கு இடம் கிடைக்கும் என்ற தகவல் பரவலாக உலாவியது. அப்போது அதுபற்றி குஷ்பு எதுவும் தெரிவிக்கவில்லை. குஷ்பு அதற்கு மறுப்புத் தெரிவிக்காமையினால் குஷ்புவின் அரசியல் பிரவேசம் உண்மை என்பது உறுதியாகியது.
குஷ்புவின் அரசியல் பிரவேசம் துரித கதியில் அவசர அவசரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்து ரசிகர்களிடம் அபிமானத்தைப் பெற்ற குஷ்பு அரசியலிலிலும் அபிமானத்தைப் பெறும் எண்ணத்தில் களமிறங்கி உள்ளார்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 23/05/10

No comments: