Wednesday, November 3, 2010

தமிழககாங்கிரஸ்தலைவர்களால்திருமாவளவனுக்குகடும்நெருக்கடி


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவு நீடிக்குமா அல்லது இடையில் முறிந்து விடுமா என்ற பட்டி மன்றம் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, எமது உறவு உறுதியாக உள்ளது என்று இரண்டு கட்சித் தலைவர்களும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சங்கடப்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்று காங்கிரஸ் தலைமைப்பீடம் தமிழகத் தலைவர்களுக்கு உத்தரவிட்டும் இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் போன்ற ஒரு சிலர் எல்லை மீறிப் பேசி வருகின்றனர்.
தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தியின் பேச்சுக்குக் கட்டுப்படுபவர்கள் என்பதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் கருணாநிதி ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்குவதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் காங்கிரஸ் கட்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. தமிழக அரசு அமுல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையில் உதித்தவை என்று காங்கிரஸார் பிரசாரம் செய்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்துக்கு இளைஞர் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் இடையில் தடம் மாறி திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் பயணமாக மாறியது. இலவசத் தொலைக்காட்சியினால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்று இளைஞர் காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. இந்தப் பிரசாரத்தினால் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க முடியாது. தாங்களும் தருகிறார்கள் இல்லை. தருபவர்களையும் தடுக்கிறார்கள் என்ற ஆவேசம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழகக் காங்கிரஸின் கோஷ்டிப் பூசல் அரசியல் உலகில் மிகப் பிரபல்யமானது. ராகுல் காந்தியின் மேற்பார்வையிலேயே இளைஞர் காங்கிரஸ் வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழக இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் இல்லை என்று யாரும் கூற முடியாத நிலை உள்ளது. வாசன் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி என்று இளைஞர் காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சீண்டிப் பார்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திருமாவளவனைச் சீண்டத் தொடங்கி விட்டனர். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்திய அரசு நடந்து கொண்ட முறையை திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வருகிறார். கூட்டணிக்குள் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருமாவளவன் குற்றம் சாட்டுவதைத் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது திராவிட முன்னேற்றக் கழக அரசும் மெத்தனமாய் இருந்தது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதைப் பற்றி திருமாவளவன் வாயே திறப்பதில்லை. காங்கிரஸ் கட்சியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் திருமாவளவன் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குற்றம் சாட்டுவதில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. காங்கிரஸின் தயவு இல்லாமல் திருமாவளவன் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆகையால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் திருவாய் மலர்ந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவு இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை இரண்டு கட்சித் தலைவர்களும் மறந்து விட்டனர்.
தமிழகத்தில் உள்ள தலித்துக்களில் அதிக மானோர் திருமாவளவன் பின்னால் உள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி தலித்களிடமுள்ளது. அமைச்சர் சிதம்பரத்தின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த
விதமான செல்வாக்கும் இல்லாத கார்த்திக்கின் அண்மைக் காலக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வேறு ஒருவர் இருப்பதாகவே தோன்றுகிறது.
நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் மறைவு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல நடிகர்களும், நடிகைகளும் இருந்தாலும் எஸ். எஸ். சந்திரனின் பேச்சு எப்பவும் எதிர்க் கட்சிகளை மட்டம் தட்டுவதாகவே இருக்கும். எஸ்.எஸ்.சந்திரனின் இடத்தை நிரப்புவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய நடிகர் ராதாரவியை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார் ஜெய
லலிதா.
நடிகர் ராதாரவி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் அல்லது சரத்குமாரின் கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அரசியலை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த ராதாரவி மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியை ராதா ரவி கடந்த வாரம் சந்தித்தார். அப்போது காங்கிரஸில் ராதாரவி இணைகிறார் என்று பரபரப்பாகச் செய்தி வெளியானது. ராதா ரவி அதை மறுக்கவோ ஒப்புக் கொள்ளவோ இல்லை. இந்த நிலையில் திடீரென அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் புள்ளிகளில் பலர் அதிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏதோ ஒரு இலாபம் இல்லாமல்
ராதாரவி மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்க மாட்டார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு தொகுதியில் ராதாரவி தேர்தலில் போட்டியிடலாம் அல்லது காலியாகும் ராஜ் சபை உறுப்பினராகி நாடாளுமன்றம் செல்லலாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறுபவர்களை மீண் டும் கட்சிக்குள் இணைப்பதற்கு ஜெயலலிதா விரும்புகிறார். தமிழக தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் கட்சியில் பலம் குறையக் கூடாது என்பதில் ஜெயலலிதா கவனமாக உள்ளார்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு
31/10/10

No comments: