Tuesday, November 16, 2010

காங்கிரஸுக்கு வலை விரிக்கும் ஜெயலலிதா



காங்கிரஸுக்கு வலை விரிக்கும் ஜெயலலிதா
தி.மு.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் காங்கிரஸ்

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று இரண்டு கட்சியின் தலைவர்களும் அடிக்கடி கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலின் போது புதிய கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். காங்கிரஸ் தலைமை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை விரும்புகிறது. ஆனால் ராகுல்காந்தியும் தமிழகத்தின் சில தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை விரும்பவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைய வேண்டும் என்று தமிழகத் தலைவர்கள் சிலர் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.
ஜெயலலிதாவும், விஜயகாந்தும் காங்கிரஸ் கட்சியை எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க வேண்டாம் என்று தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இச்செய்தியை ஜெயலலிதா மறுக்கவில்லை. இதபோல்தான் விஜயகாந்த் தன்பங்குக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான பிரச்சினை இல்லை என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக முயற்சி செய்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களைக் கவனத்தில் எடுக்காது டில்லித் தலைமைப் பீடத்தின் கருத்தையே திராவிட முன்னேற்றக் கழகம் கவனத்தில் எடுத்து வருகிறது.
தமிழக சட்டசபை ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிக நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதல்வர் கருணாநிதி அதற்கு சரியாக பிடிகொடாது பதிலளித்து வருகின்றார். ஸ்டாலினைத் துணை முதல்வராக்கியதைக் காங்கிரஸில் உள்ள சிலர் விரும்பவில்லை. தங்களுடைய ஆலோசனை இன்றி துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டதாக விசனப்படுகின்றனர். தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதற்கு தாம் உதவி செய்தபடியால் துணை முதல்வர் பதவி தமக்கு வேண்டும் என்று காங்கிரஸில் உள்ள சிலர் விரும்புகின்றனர்.
தமிழகத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் ஆட்சியில் பங்குபற்றுவதற்குரிய அமைச்சர்களின் எண்ணிக்கை துணை முதல்வர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் எண்ணம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்தால் தமிழக முதல்வராவதற்கு விஜயகாந்த் விரும்புகிறார். தான் ஆட்சியைப் பிடிப்பதற்காக அமைச்சரவையில் பங்கு போட்டு துணை முதல்வர் பதவியைத் தாரைவார்க்க விஜயகாந்த் ஒப்புக் கொண்டால் கூட்டணியில் மாற்றம் ஏற்படும். ஆட்சியில் பங்கு கொடுக்க விஜயகாந்தும் விரும்பாவிட்டால் காங்கிரஸின்பாடு திண்டாட்டமாகி விடும்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பு எதனையும் காங்கிரஸ் மேலிடம் வெளிப்படுத்தவில்லை. ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்தால் அது காங்கிரஸை விட ஜெயலலிதாவுக்குத்தான் அதிக இலாபத்தைக் கொடுக்கும். ஆகையினால்தான் காங்கிரஸுடன் கூட்டு சேர ஜெயலலிதா விரும்புகிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
கார்கில் போரில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கியதில் ஊழல் செய்த மும்பை முதல்வர் அசோக் சவான்கொமன் வெல்த்போட்டியில் தில்லுமுல்லு செய்த சுரேஷ் கல்மாடி ஆகியோரின் பதவிகளைப் பிடுங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. ஸ்பெக்ரம் ஊழலில் சிக்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட அமைச்சர் ராஜாவை திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தை மீறி நடவடிக்கை எடுக்க முடியாது தடுமாறுகிறது காங்கிரஸ் கட்சி.
ஊழல் செய்த முக்கிய புள்ளிகளை பதவியிலிருந்து விரட்டியது போன்று அமைச்சர் ராஜாவின் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஊழல்வாதிகள் அரசியலில் இருந்து ஓரம்கட்டப்பட வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்புகிறார். ராஜாவின் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ராகுல்காந்தி நம்பிக்கை இழந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைப் போன்று நேர்மையாக நடக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜாவுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கு முயற்சி செய்யும். இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவை இழக்க விரும்பாத காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் திரிசங்கு நிலையை நன்கு உணர்ந்துள்ள ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சிக்கு தெம்பூட்டும் விதமாகப் பேசி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் அதற்கு மாற்றீடாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கப் போவதாகக் கூறியுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வெற்றி பெற்ற ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
மேலதிகமாக ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜெயலலிதா எங்கிருந்து கொண்டு வருவார் என்பது தெரியவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறி வரும் நிலையில் வேறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு அவர் தமது அணியில் சேர்ப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை தரும் வகையில் ஜெயலலிதா உரையாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை விடும் வகையில் காங்கிரஸ் ஊழல் பேர்வழிகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களின் தாக்கம் அடுத்த வாரம் பகிரங்கத்துக்கு வந்து விடும்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 14/11/10

No comments: