திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இருந்த பனிப்போர் அமைச்சர் ராசாவின் இராஜினாமாவுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிகள் அனைத்தும் அதன் கூட்டணிக் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மதிப்புக் கொடுத்து வந்துள்ளன. கூட்டணி அமைத்த பின்னர் குடைச்சல் கொடுக்காது நல்ல பிள்ளையாக வலம் வரும் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசின் துணையுடன் தனது காரியங்கள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றி வந்தது.
மத்திய அரசு அமையும் போது எத்தனை அமைச்சர்கள், எந்தத் துறை அமைச்சர்கள் என்று பேரம் பேசி அமைச்சுப் பதவிகளைப் பெற்று வந்தது திராவிட முன்னேற்றக் கழகம். பெரும்பான்மை இன்றி தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தை இணைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. அமைச்சர் ராசாவின் பொறுப்பில் இருந்த ஸ்பெக்ரம் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அத்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து
விட்டன.
ஸ்பெக்ரம் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிய போது மத்திய அரசும் தமிழக அரசும் அதைப் பூசி மெழுகி மறைக்க முயன்றன. ஸ்பெக்ரம் ஏலம் எல்லாம் முறைப்படிதான் நடைபெற்றது. நீதிமன்றத்தில் எல்லாவற்றையும் ஒப்படைத்து குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன் என்று அமைச்சர் ராசா சவால் விட்டார். ஸ்பெக்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. பொறுப்பெடுத்து விசாரணை செய்து வருகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. அமைச்சர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பட்டும் படாமலும் கூறி வந்தது. எதற்கும் மசியாது ராசாவை அமைச்சராக அழகு பார்த்தார் தமிழக முதல்வர் கருணாநிதி. எதிர்க்கட்சிகளின் கேள்விகளை நாடாளுமன்ற இரு அவைகளின் முடக்கம் சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப பல முனைகளில் நெருக்குதல் ஏற்பட்ட போது ராசா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார்.
வருமானவரித் துறை, மத்திய அமுலாக்கப் பிரிவு என்பனவும் தமது விசாரணைகளை முடுக்கிவிட்டன. இவை தவிர நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பகிரங்கப்படுத்தப்பட்டன. ராசா இராஜினாமாச் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கும் என்பதை காலம் கடந்து கருணாநிதி உணர்ந்து கொண்டார்.
இந்தியாவின் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகளில், தொலைத்தொடர்பு அமைச்சும் ஒன்று. தயாநிதிமாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கருணாநிதி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது தயாநிதிமாறனிடம் இருந்த தொலைத் தொடர்புத் துறை பிடுங்கப்பட்டு ராசாவிடம் வழங்கப்பட்டது. குடும்பப் பிரச்சினை சுமுகமாகி மீண்டும் காங்கிரஸ் ஆட்சிபீடம் ஏறியபோது தொலைத் தொடர்புத் துறையை தயாநிதிமாறனிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவர் பதவி வகித்த போது ஏற்பட்ட முன்னேற்றம் ராசா அமைச்சரானதும் தேக்கமடைந்தது. ஆனால் அந்த அமைச்சுப் பதவி மீண்டும் ராசாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்குமிடையே ஏற்பட்ட பல முறுகல்களை சோனியாவும், மன்மோகன் சிங்கும் மிகவும் பக்குவமாகத் தீர்த்து வைத்தார்கள். ராசாவின் விவகாரம் அவர்களின் கையையும் மீறிச் சென்றுவிட்டது. பலமுறை விசாரணைகள் ராசாவை முடக்கியுள்ளன. ராசா தொடர்ந்தும் அமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்பிய திராவிட முன்னேற்றக் கழகம் இப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு மிகுந்த பிரயாசைப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போயின.
ஸ்பெக்ரம் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதனால் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது அரச தரப்பு வழக்கறிஞர் தடுமாறினார். ராசாவின் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முன்பு ராசா இராஜினாமாச் செய்து விட்டார். அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஊழல் விவகாரம் புதியதல்ல. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மிக பல ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டு அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. அவற்றை மாற்ற தலைவர்கள் தாம் கறைபடியாதவர்கள் போல் அறிக்கை விடுகின்றனர்.
சசிதரூ, அசோக் சவான், கல்பாடி ஆகியோர் அண்மையில் ஊழலில் சிக்கி பதவி துறந்தவர்கள். அவர்களை முன் உதாரணம் காட்டித்தான் ராசா இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சியின் நெருக்கடி காரணமாக ராசா இராஜினாமாச் செய்தார். தொலைத் தொடர்புத் துறை அமைச்சுப் பதவியில் இருந்து ராசா இராஜினாமாச் செய்தாலும் அந்த அமைச்சுப் பதவி தமது கட்சியில் உள்ள ஒருவருக்குத்தான் கிடைக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தது. ஆனால் கபில் சிபிலை காங்கிரஸை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக்கியது காங்கிரஸ் கட்சி. ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவரான கபில் சிபிலை அமைச்சராக்கி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது காங்கிரஸ்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை முறித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி சேரப் போகிறது என்ற தகவல் பரபரப்பாக வெளியான போது திராவிட முன்னேற்றக் கழகம் அதனை அசட்டை செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தரப் போவதாக ஜெயலலிதா அறிவித்த பின்னர் சுதாகரித்துக் கொண்ட கருணாநிதி ராசாவின் இராஜினாமாவுக்கு ஒப்புதலளித்தார்.
அமைச்சுப் பதவியில் இருந்து ராசா இராஜினாமா செய்ய மாட்டார் என்று உறுதியாகக் கூறி வந்த கருணாநிதி முக்கியமான ஒரு முடிவை எடுத்த பின்புதான் ராசாவின் இராஜினாமாவுக்கு ஒப்புதலளித்தார். ராசா தவறு செய்யவில்லை என்று கருணாநிதியும், கனிமொழியும் மட்டும்தான் குரல் கொடுத்து வருகின்றனர். ஏனையோர் அமைதி காக்கின்றனர். தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது புதிய கூட்டணிகள் உதயமாவதற்கான அறிகுறி இப்போதே தோன்றியுள்ளது. ராசாவின் விவகாரம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான விரிசலை அதிகரித்துள்ளது. தமிழக சட்ட சபைத் தொகுதிப் பங்கீட்டின் போது இரு கட்சிக்குமிடையேயான விரிசல் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
தமிழக ஆட்சியில் பங்கு பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் தொகுதிப் பங்கீட்டில் பேரம் பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தமிழக ஆட்சியில் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் தான் கூட்டணி என்ற முடிவில் உள்ளது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியை நம்பி கூட்டணி சேர்வதற்கு தமிழகக் கட்சிகள் எவையும் தயாராக இல்லை. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினாலும் பரவாயில்லை. அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேரக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/12/10
2 comments:
நல்ல கட்டுரை, விலா வாரியாக எழுதியுள்ளீர்கள். ஆனால் சு, சாமியின் பங்கு பற்றி குறிப்பிட மனம் இல்லை போல,,, நல்ல கட்டுரை நன்றி.
பித்தனின் வாக்கு said...
நல்ல கட்டுரை, விலா வாரியாக எழுதியுள்ளீர்கள். ஆனால் சு, சாமியின் பங்கு பற்றி குறிப்பிட மனம் இல்லை போல,,, நல்ல கட்டுரை நன்றி.
ஸ்பெக்ரம் ஊழல்பற்றி பலவருடங்களாகத்தொடர்ந்துஎழுதுகிறேன்.சு.சாமிபற்றிமுன்னமேஎழுதியதால் இப்போதுகுறிப்பிடவில்லை.தங்கள்கருத்துக்கு நன்றி.
அன்புடன்
வர்மா
Post a Comment