Monday, March 26, 2012

தலை நிமிர்ந்தார் ஜெயலலிதா தனித்துவம் இழந்தார் கப்டன்




சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதிர்பார்த்தது போன்றே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது. ஆனால், இப்படி ஒரு பிரமாண்டமான வெற்றி கிடைக்கும் என்று ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்கமாட்டார். எரிபொருள் விலை உயர்வு, மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பனவற்றினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவை விட்டுப் பிரிந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே இருக்கும் என்ற கணிப்பு தவறிவிட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு அமைச்சரான கருப்பசாமி 72,297 வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் உமா மகேஸ்வரி 61.902 வாக்குகளைப் பெற்றார். கருப்பசாமி 22.680 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார். இப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் முத்துச்செல்வி 94,977 வாக்குகளைப் பெற்றார். மறைந்த அமைச்சர் கருப்பசாமி பெற்றதைவிட 22,680 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் ஜவஹர்சூரிய குமார் 26, 220 வாக்குகளைப் பெற்றார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் உமா மகேஸ்வரியை விட 44,682 வாக்குகள் குறைவாகப் பெற்றார். 68,757 அதிகப்படியான வாக்குகளால் முத்துச்செல்வி வெற்றி பெற்றதனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறும் சந்தர்ப்பம் மிகவும் குறைவானது. அதிகாரபலம் அனைத்தும் கைவசம் உள்ள ஆளுங் கட்சிக்கு எதிராக நிராயுதபாணியான எதிர்க்கட்சிகள் வெற்றி பெறமுடியாது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டே போட்டியிடுகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் நினைத்ததைச் சாதித்து விட்டார். எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தின் விலாசத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற சபதத்தை நிறைவேற்றியுள்ளார். விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் முத்துக்குமார் 12,144 வாக்குகளை மட்டும் பெற்று நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இரண்டாவது இடம் எனக்குத்தான் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு மோசமான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து இரண்டாவது இடத்தைப் பிடிக்கலாம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணத்தில் பலத்த அடிவிழுந்துள்ளது. தமிழக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை எதுவும் இல்லாமையினால் அதன் வெற்றிப் பயணத்தைத் தடுக்கும் வல்லமையை எதிர்க்கட்சிகள் இழந்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் படுதோல்விக்கு வேட்பாளர் ஜவஹர்சூரிய குமார் காரணம் என்று கருதப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான ஜவஹர் சூரியகுமார் மீது நில மோசடிப் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சங்கரன்கோவில் தொகுதியில் அவருக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. ஸ்டாலினின் அணியைச் சேர்ந்தவர் என்ற ஒரு தகுதியினாலேயேதான் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து பிரசாரம் செய்தார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முழு வீச்சுடன் பிரசாரப் பணிகளை மேற்கொண்டார்கள். அப்படி இருந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளருக்கு எதுவித நெருக்கடியும் ஏற்படவில்லை.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தான். ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக்கழகம் தான் என்பதை சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது. வைகோவை முந்தவேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியதும் உள்ளூர திருப்திப்பட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
இரண்டாவது இடத்துக்காக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தினார் வைகோ. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். வைகோ நிறுத்திய வேட்பாளர் கௌரவமான தோல்வியைப் பெற்றார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக போட்டியாளர் சதன் திருமலைகுமார் 20,678 வாக்குகள் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை விட 5,642 வாக்குகளை அதிகமாக பெற்றார். ஆளுங்கட்சியின் அரச அலையின் முன்னால் பிரதான எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மூழ்கியுள்ள நிலையில் வைகோவின் வேட்பாளர் ஓரளவு தலை நிமிர்ந்துள்ளõர்.
1999ஆம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சுமார் 30,000 வாக்குகளை பெற்றது. இன்று அதனை விட குறைவான வாக்குகளைப் பெற்றாலும் விஜயகாந்த் நிறுத்திய வேட்பாளரை விட 8534 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நம்பிக்கையுடன் உள்ளார் சதன் திருமலை குமார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் விஜயகாந்திற்கு மரண அடியாகஉள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தேசிய திராவிட முன்னேற்றக்கட்சியின் வேட்பாளர் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஜெயலலிதாவை அச்சுறுத்தியவர் விஜயகாந்த். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடம் சரணடைந்த பின்னர் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளார். ஜெயலலிதாவின் இன்றைய எதிரி கருணாநிதியோ, வைகோவோ அல்ல விஜயகாந்த் என்றே அவர் தேர்தல் பிரசாரத்தின் போது பலமுறை சுட்டிக்காட்டினார்.
வர்மா



சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு25/03/12

No comments: