ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு
அரசியல் கட்சிகள் தயாராகிய வேளையில்
சுயேட்சை வேட்பாளராக நடிகர் விஷால் குதித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. தமிழக அரசியலில் இருந்து
சினிமாவைப் பிரிக்க முடியாது. தமிழக அரசியலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த
முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
,ஜெயலலிதா ஆகிய நால்வரும் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
சினிமாவுடன் தொடர்புடைய பலர் அரசியல்வாதியாகவும் இருக்கின்றனர்.
அரசியல்வாதிகள் சிலர் சினிமாத் தயாரிப்பாளர்களாகவும் விநியோகஸ்தர்களாகவும்
செயற்படுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள்
விரும்புகின்றனர். தீவீர அரசியலில்
இறங்கப் போவதாக பந்தா காட்டிவிட்டு ரஜினி அமைதியாகிவிடுவார். விஜயிடமும்
அரசியல் ஆசை இருக்கிறது. அவருடைய தகப்பன் பலமுறை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
கமல் தனது அரசியல் கருத்துக்களை டிவிட்டரில் தெறிக்க விடுகிறார். கமலும் ரஜினியும்
அரசியலில் குதிக்க நாள் பார்த்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் யாரும்
எதிர்பார்க்காத நிலையில் திடீரென விஷால் அரசியல்வாதியானார்.
விஜயின் படம் வெளியாகும் போது பிரபல நடிகர்களின்
படங்கள் வெளியாவதில்லை.விஜயின் படம் வெளியாகும் அதே தினத்தில் தனது படத்தை அடம்
பிடித்து வெளியிடுபவர் விஷால்.இளைய தளபதி விஜய்க்குப் போட்டியாக புரட்சித் தளபதி
என தனது பெயருக்கு முன்னால் போட்டு அழகு பார்த்தவர் விஷால். எதிர்ப்பு
வலுவடைந்ததால் புரட்சித் தளபதியைக் கைவிட்டார்.
விஷாலுக்குப் பின்னால் இருபவரை அறிவதற்கு திரை
உலகமும் அரசியல் களமும் ஆர்வமாக இருந்தன. டுவிட்டரில் அரசியல் நடத்தும் கமலின்
பிரதிநிதியாக விஷால் களம் இறங்கியதாக கருதப்பட்டது. நடிகர் சங்கத்தில் தலைவராகவும்
செயலாளராகவும் இருந்த சரத்குமாரையும்
ராதாரவியையும் வெளியேற்றி புதிய நிர்வாகத்தை அமைத்ததில் விஷாலுக்கு முக்கிய பங்கு
உள்ளது. அப்போது விஷாலுக்கு ஆதரவாக கமல் இருந்தார். நடிகர் சங்கத்தைத் தொடர்ந்து
தயாரிப்பாளர் சங்கத்தையும் விஷாலுடைய குழு கைப்பற்றியது. நடிகர் சங்கம்
தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றதனால் ஆர்.கே.நகர்
இடைத்தேர்தலில் விஷால் குதித்ததாக ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டது.
கமல்,ரஜினி, விஜய் ஆகியோருக்கு இருப்பது போன்ற
தீவீர வெறிகொண்ட ரசிகர் பட்டாளம் விஷாலுக்கு இல்லை. எம்.ஜி ஆரை முதலமைச்சராக்கியது
அவரது ரசிகர்கள் தான். அதன் பின்னர்தான் ரசிகர்கள் தொண்டர்களாகினர். அதன் பின்னர்
அப்படி ஒரு நிலைமை எந்த ஒரு நடிகருக்கும் ஏற்படவில்லை. விஷாலின் அரசியல்
பிரவேசத்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பதறியது. தினகரனின் தூண்டுதலால்
அரசியலில் களம் புகுந்த விஷாலால் தமது
வாக்கு வங்கி சிதறிவிடும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அச்சம்
அடைந்தனர்.
ஜெயலலிதாவின் மரணத்தின் பிற்பாடு அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி சிதறிவிட்டது. பன்னீர் குழு ,எடப்பாடி குழு என
பிரிந்ததனால் தொண்டர்கள் திகைத்தனர். இப்போது அவர்கள் இணைந்தாலும் தினகரனின்
போராட்டம் அவர்களுக்கு பெரும் சோதனையாக இருக்கிறது. ஆர்.கே.நகரில் உள்ள மக்களில்
20 சத விகிதத்தினர் தெலுங்கு பேசும் மக்கள்.அவர்களில் அதிகமானோர் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள். அவர்களின் வாக்குகளைக் கவருவதற்காக தினகரனின்
திட்டத்தின் படி விஷால் அரசியல் அவதாரம் எடுத்ததாக அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தினர் குற்றம் சாட்டினர்.
சினிமா என்ற மாயை விஷாலை முன்னிலைப்படுத்தியது.
விஷால் தன்னை அரசியல்வாதியாகவே நினைத்துக் கொண்டார். கமராஜர்,அண்ணா,எம்.ஜி.ஆர்,
ஜெயலலிதா, சிவாஜி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செய்தபின்னர்
வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போதுதான் சினிமாவில் வரும் தேர்தலுக்கும் நிஜமான
தேர்த;லுக்கும் உள்ள வித்தியாசத்தை விஷால் அறிந்துகொண்டார். வரிசையில் நின்று
டோக்கன் வாங்கவேண்டும் என வேட்பு மனுத்
தாக்கல் செய்யக் காத்திருந்தவர்கள் தெரிவித்தார்கள். டோக்கன் வாங்கி 4௦ ஆவது ஆளாக தேர்தல் அதிகரிவிடம் தனது
வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் விஷால்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்பு
மனுவில் அந்தத் தொகுதியில் வசிக்கும் 10 பேர் முன் மொழிந்து கையெழுத்திட வேண்டும் என்பது விதி விஷாலை முன்
மொழிந்தவர்களில் சாந்தி, தீபன் ஆகிய இருவரும் அது தமது கையெழுத்து அல்ல எனத்
தெரிவித்ததால் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. நம்பிக்கையான 10 பேரைத்
தேடிக்கண்டு பிடிக்க முடியாதவர் என்று விஷாலின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அதிர்ச்சியடைந்த விஷால் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தார். அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தினர் மிரட்டியதால் தான்
அவர்கள் இருவரும் அப்படிச்சொன்னர்கள் என தொலைபேசி ஆதாரத்துடன் விளக்கமளித்தார்.
சாந்தி, தீபன் ஆகிய இருவரும் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள்.
.விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள்
கையெழுத்திட்டார்களா என்ற சந்தேகத்துக்கு
விடை தெரியவில்லை. தேர்தல் அதிகாரி
வேலுச்சாமியிடம் விஷால் கெஞ்சி
மன்றாடினார். இரவு 9 மணியளவில் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது. சந்தோஷமடைந்த விஷால் அனைவருக்கும் நன்றி தெரிவித்து
பத்திரிகையாளர்கள் முன் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துவிட்டு வீட்டுக்குச்சென்று
விட்டார். இரவு 11 மணிக்கு விஷாலின்
வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
விஷாலின் வேட்பு மனுவை நிரகரித்த தேர்தல்
அதிகாரி, விஷால் வேண்டியதால் அதனை ஏற்றுக்கொண்டார். பின்னர் அதனை ஏன்
நிராகரித்தார் என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது. முடிவெடுக்கும் முழு அதிகாரம்
தேர்தல் அதிகாரியிடம் உள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை விஷாலின் கோரிக்கைக்கு
இணங்க ஏற்றுக்கொண்டார். பின்னர் யருடைய நெருக்குதலால் விஷாலின் வேட்புமனுவை
நிராகரித்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது. தேர்தல் அதிகாரியின் நடவடிக்கையில்
அனைவருக்கும் சந்தேகம் உள்ளது
தமிழக தலமைத் தேர்தல் அதிகாரி லக்கானியிடம் விஷால் முறையிட்டார். கையெழுத்திடவில்லை என
தெரிவித்த இருவரும் நேரில் வந்து
விளக்கமளித்தால் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என கால அவகாசம் கொடுத்தார். தேர்தலில் தான் போட்டியிடுவதைவிட அவர்களின்
பாதுகாப்பு முக்கியம் என விஷால் தெரிவித்தார். சினிமாவில் ஏழைகளுக்கு உதவும்
கதாநாயகன் நிஜத்தில் பின்வாங்கிவிட்டார். ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி
வேலுச்சாமியின் நடவடிக்கை அநீதியானது
என்பதை உணர்ந்த தமிழகத் ,தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி அவரை நீக்கி விட்டு பிரவீன் நாயரை, ஆர்.கே. நகர்
தேர்தல் அதிகாரியாக நியமித்தார். எட்டு மாதங்களுக்கு முன்னர் இதே ஆர்.கே. நகரில்
தேர்தல் அதிகரியகக் கடமை புரிந்தவர் பிரவீன் நாயர். தொகுதியில் நடந்த பணப்
பட்டுவாடாவைத் தடுக்க முடியாததால் அன்றைய இடைத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டது.
விஷாலில் அரசியல் பிரவேசம் தயாரிப்பாளர் சங்கத்திலும்
நடிகர் சங்கத்திலும் பிரச்சினையை
உருவாக்கியது. தயாரிப்பாளர் சங்கம் அரசியல் சார்பானது அல்ல. இடைத்
தேர்தலில் போட்டியிடும் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை இராஜினாமாச்
செய்ய வேண்டும் என சேரன் போர்க்கொடி
தூக்கி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். விஷாலுக்கு எதிரானவர்கள் அனைவரும்
சேரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் இராஜினாமாச் செய்தார். நடிகர் சங்கத்தில்
அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சரத்குமார், ராதாரவி
ஆகியோரை வெளியேற்றி விட்டு நாம் பதவி
ஏற்றோம். நடிகர் சங்க செயலாளரான விஷால், தேர்தலில் போட்டியிடுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார். விஷாலின் வேட்புமனு
நிராகரிக்கப்பட்டதால் சேரனின் போராட்டம் கைவிடப்பட்டது. பொன்வண்ணன் தனது இராஜினாமாவை
வாபஸ் வாங்கி மீண்டும் பதவியில் தொடருவதாக
அறிவித்தார். இவை தற்காலிக முடிவா அல்லது நிரந்தரமான முடிவா என்பதை விஷாலின் அடுத்தகட்ட நடவடிக்கைதான்
முடிவு செய்யும்.
நான், அரசியல்வாதியாகத் தேர்தலில்
போட்டியிடவில்லை. மக்களுக்குச்சேவை செய்ய
சுயேட்சையாகப் போட்டியிடுகிறேன் என்ற விஷாலின் விளக்கம் குழப்பமாக இருக்கிறது.
கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர் அரசியல்வாதி. சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடுபவர்
அரசியல்வாதி இல்லை என்ற விஷாலின் கருத்தை அரசியலைப் பற்றித் தெரியாதவர்களும்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியலைப் பற்றிய தெளிவு எதுவும் இல்லாமலே விஷால்
அரசியலில் இறங்கியுள்ளார். அரசியல்வாதி ஒருவர்
வேட்புமனுவைத் தாக்கல்
செய்யும்போது அவருடைய கட்சியைச்சேர்ந்த இன்னொருவர் வேட்புமனுத் தாக்கல் செய்வார். அவருடைய
வேட்புமனு ஏற்கப்பட்டால் மற்றவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவார். மாறாக
நிராகரிக்கப்பட்டால், தனக்குப் பதிலாக வேட்புமனுத் தாக்கல் செய்தவரை அவர்
ஆதரிப்பார். இதனைத் தெரிந்து கொள்ளாத விஷால்,
வேட்புமனுத் தாக்கல் செய்வதிலே தோல்வியடைந்தார்.
ஆர்.கே. நகரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை
ஆதரிக்கப்போவதாக அறிவித்த விஷால் அதைப்பற்றிய விபரம் எதனையும் இதுவரை
வெளிப்படுத்தவில்லை. விஷாலின் அரசியல் களேபரத்தால் ஆர்.கே. நகற், நடிகர் சங்கம்,
தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் சுழன்றடித்த புயல் ஓய்ந்துவிட்டது. அது சுறாவளியாக மாறுமா அல்லது அமையுமா என்பதை
விஷால்தான் முடிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment