ஆர்.கே. நகர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. அங்கு
நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக்
கழகமும் காங்கிரஸும் வெற்றி வெற்றி பெற்றதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் மீதான எதிர்ப்பலையும், பலமான வேட்பாளரும் காரணமாக அமைந்தன. ஆர்.கே.
நகர் இடைத்தேர்தலில் தினகரன் என்ற
பிம்பத்துக்கு எதிராக அவரைப் போல ஜொலிக்கும் வேட்பாளரை இரண்டு திராவிடக் கட்சிகளும்
களம்இறக்கத் தவறி விட்டன. மதுசூதனனுக்காக அக் கட்சியின் தலைவர்கள் பேசினார்கள்.
மருதுகணேஷுக்காக அக்கட்சித் தலைவர்களும்
வைகோ, திருமாவளவன், இடதுசாரித் தலைவர்கள் ஆகியோரும் பேசினார்கள். தினகரனுக்காக
தினகரன் மட்டும் தான் பேசினார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி இரண்டாகப்
பிரிந்துள்ளது. பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாக இருந்தாலும் அவர்களுக்குள் பிரிவினை
இருக்கிறது. மதுசூதனனை
வேட்பாளராக்குவதற்கு எடப்பாடி அணி
முதலில் சம்மதிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி
அப்படியேதான் இருக்கிறது. விடுதலைச்சிறுத்தைகள்,காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள்,
இந்திய முஸ்லிம் லீக் ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்தபடியால் மருதுகணேஷின் வெற்றி
பிரகாசமாக இருந்தது. இந்தக் கூட்டல்
கழித்தல் எல்லாவற்றையும் பொய்யாக்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன்
வெற்றி பெற்றுவிட்டார்.
இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி தோற்பது பெரிய விஷயம் இல்லை. ஆளும்
கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்ததை ஆச்சரியத்துடன் பார்க்க
வேண்டி இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியில் அவர் வளர்த்த
கட்சியின் இரட்டை இலை தோல்வியடைந்ததுதான் ஆச்சரியமானது.
தினகரன் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மத்திய, மாநில
அரசுகள் மீதான கோபம். பாரதீய ஜனதாவின் கைப்பொம்மையாக அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் இருப்பது. தினகரன் மிக எளிமையாக பேட்டி கொடுப்பது. சிபிஐ ,வருமான
வரித்துறையின் சோதனை போன்ற நெருக்கடி என்பன தினகரனைப் பேசும் பொருளாக்கின. ஆர்.கே.
நகரில் நவீன முறையில் நடைபெற்ற பணப் பட்டுவாடா பிரதான காரணம் என எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு
பணவிநியோகமே காரணம். அந்த ஆதாரங்களின்
அடிப்படையில் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இம்முறையும் பணவிநியோகம் நடைபெற்றது. ஆதாரங்களுடன் பிடித்துக் கொடுத்ததும் மேலதிக நடவடிக்கை
எதுவும் எடுக்கப்படவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனம் என
எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. தமக்குப் போதிய அதிகாரம் இல்லை என தேர்தல்
ஆணையம் கூறுகிறது. இதே அதிகாரங்களை வைத்துக்கொண்டுதான் சேஷன்
அரசியல்வாதிகளை ஆட்டிப்படைத்தார். ஜெயலலிதாவின்
மறைவுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலின் போது எடப்பாடியும் தினகரனும்
ஒரு அணியில் இருந்தனர். அப்போது ஒரு
வாக்காளருக்கு 4௦௦௦ ஆயிரம் ரூபா கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இப்போது அவர்களுக்கு 6௦௦௦ ரூபா தினகரனின்
ஆட்களால் கொடுக்கப்பட்டது. மொத்தமாகப் 1௦௦௦௦ ரூபா என தினகரன் தரப்பினால் கொடுக்கப்பட்டது.
இரட்டை இலையையும் வைத்துக்கொண்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பணத்தை வரி
இறைத்தது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் வெற்றி தோல்வி இரண்டையும் ஸ்டாலின் ஒன்றாகத்தான் பார்க்கிறார். பணத்தை
வாரி இறைத்து ஒரு உறுப்பினரைப் பெறுவதில்
அவர் ஆர்வம் காட்டவில்லை. பணம் கொடுத்து பெறும் வெற்றியை விட தோற்பது மேல்
என்றார். அதுதான் நடந்துள்ளது. திமுக தோற்கவில்லை. தேர்தல் ஆணையம் தோல்வியடைந்து
விட்டது எனக் கூறினார். ஆனாலும் தனது கட்சியில் வாக்கு வங்கி எங்கே
போனது என்பதை அறிய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி கடந்த காலங்களைவிட அதிகளவான வாக்குகளைப்
பெற்றுள்ளது. பாரதீய ஜனதா மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நோட்டாவுக்கு அடுத்த இடத்தில் மத்தியில் ஆளும் தேசியக் கட்சி
இருக்கிறது. விஜயகாந்த், ராமதாஸ்,வாசன் ஆகியோரின் கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத்
தேர்தலைப் புறக்கணித்தன. திராவிட
முன்னேற்றக் கழகம், அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி, நாம்
தமிழர் ஆகிய கட்சிகள்பெற்ற வாக்குகளைவிட அதிகளவான வாக்குகளை தினகரன்
பெற்றுள்ளார். ஜெயலலிதாவை விட அதிகளவான
வாக்கு வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இடைத் தேர்தலில் இப்படி ஒரு முடிவு வருவதற்கு சாத்தியம்
உள்ளது. ஆனால், பொதுத் தேர்தலில் இதனை
எதிர்பார்க்க முடியாது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டார். இந்த
வெற்றி அவருக்கு நடைபெற உள்ள பல சோதனைகளின் ஆரம்பமே தவிர முடிவு அல்ல. அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் . சின்னத்தையும் கைப்பற்றுவேன், மூன்று மாதங்களில் தமிழக ஆட்சி கவுழும்
சிலிப்பர் செல்கள் வெளிவருவார்கள் என
சபதமிட்டுள்ளார். தினகரனின் பக்கம் இருந்துவிட்டு ஓடிப்போன நாடாளுமன்ற உறுப்பினர்
திரும்ப வந்துவிட்டார். ஜெயலலிதாவை எதிர்த்து தனி ஒருத்தியாக இருக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர் சசிகலா புஷ்பா தினகரனைச்சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை எதிர்த்த சசிகலாவை தினகரன் சந்தித்ததை ஜெயலலிதாவுக்கு விசுவாசமான
சசிகலாவின் குடும்பத்தால் ஜீரணிக்கமுடியவில்லை. மதில் மேல் பூனையாக அல்லாடும்
தமீம் அன்சாரி,,கருணாஸ்.தமிழரசு ஆகியோர் தினகரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தினகரன் வெற்றி பெற்றதும் முதல்
ஆளாக விஷால் வாழ்த்துத் தெரிவித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்
இருந்து ஒதுங்கி இருக்கும் ராதாரவி தினகரனை வாழ்த்தியுள்ளார். எடப்பாடி, பன்னீர்
ஆகியோரின் நடவடிக்கைகள் பிடிக்காது
ஒதுங்கி இருப்பவர்கள் தினகரனின் பக்கம்செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. முதலமைச்சரும்
துணைமுதலமைச்சரும் இணைந்து நடத்திய கூட்டத்துக்கு சில அமைச்சர்களும் சட்டமன்ற
உறுப்பினர்களும் செல்லவில்லை. அவர்களும் தினகரனின் ஆட்களோ என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
தினகரனின் வெற்றி தமிழகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.
பன்னீரை வெளியேற்றிவிட்டு முதலமைச்சராவதற்கு தினகரன் முயற்சிப்பார். தினகரனுக்கு
உள்ள செல்வாக்கினால் பாரதீய ஜனதாக் கட்சி தினகரனின் கையைப் பிடிக்க
முயற்சிக்கலாம். அதற்கு அவர் மறுத்தால், அவருக்கு எதிரான வழக்குகளைத்
துரிதப்படுத்தி தினகரனை சிறைக்கு
அனுப்பலாம். பதவியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பாரதீய ஜனதாவிடம் தினகரன் அடி
பணியலாம். இவை எல்லாம் தினகரனின் முடிவில்தான் தங்கி உள்ளது.
No comments:
Post a Comment