Thursday, December 21, 2017

பாரதீய ஜனதாவின் இரும்புக்கோட்டையில் சவால் விட்ட காங்கிரஸ்

இமாசலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரண்டு சட்டசபைத் தேர்தல்களிலும்     பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸிடம் இருந்த இமாசலப் பிரதேசத்தை பாரதீய ஜனதா கைப்பற்றியுள்ளது. குஜராத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. வெற்றி பெற்றதை பாரதீய ஜனதாவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.  இமாசலப்பிரதேசம் பறிபோனதைப் பற்றி காங்கிரஸ் அதிகம் கவலைப்படவில்லை.குஜராத்தில்,  பாரதீய ஜனதா மயிரிழையில் தப்பியதை நம்பிக்கையுடன் நோக்குகிறது. பாரதீய ஜனதாவின் இமாசலப்பிரதேச முதல்வர் வேட்பாளர் பிரேம்குமார் துமல் தோல்வியடைந்தது அக்கட்சிக்கு பின்னடைவாக உள்ளது. முதல்வரைத்  தேடவேண்டிய நிலையில் பாரதீய ஜனதா இருக்கிறது. 

குஜராத்தில் முதல் கட்ட வாக்களிப்பில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் கட்ட வாக்களிப்பில் பாரதீய ஜனதா முன்னிலை பெற்றது. மோடி அமித்ஷா என்ற இரண்டு பெரும் ஆளுமைகளின் மாநிலமான குஜராத்தில் பெற்ற வெற்றி பாரதீய ஜனதாவுக்கு போதுமானதாக இல்லை. 2012 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்போடும்போது பாரதீய ஜனதாவின் வாக்கு வீதமும் உறுப்பினர் தொகையும் குறைவடைந்துள்ளது. கிராமப்புறங்களில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. நகரங்களில் பாரதீய ஜனதா செல்வாக்குடன் இருக்கிறது.
குஜராத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 22 வருட காலம்  குஜராத்தை ஆட்சி  செய்த பாரதீய ஜனதா அங்கு செய்த அபிவிருத்திகளை முன் நிறுத்தி வாக்குக் கேட்கவில்லை. ராகுல் இந்து இல்லை, மன்மோகன் பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்து சதி  செய்கிறார், குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் முஸ்லிம் முதலமைச்சராவார்  போன்ற கீழ்த்தரமாக மோடி, பிரசாரம் செய்தார்.

காங்கிரஸின் பிரசாரம் பாரதீய ஜனதாவின் கொள்கைகளால் இந்தியாவும் குஜராத்தும் சந்தித்த  பின்னடைவுகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டது. பணமதிப்பீட்டு இழப்பு ஜிஎஸ்ரி வரிவிதிப்பு என்பனவற்றைப் பற்றி காங்கிரஸ் விரிவாகப் பிரசாரம் செய்தது. என்றாலும் கடைசி நேர ஜிஎஸ்ரி வரியில் மத்திய அரசு மற்றம் செய்ததால் குஜராத் வாக்காளர்கள் மனம்  மாறிவிட்டனர்.  விவசாயிகளும் வர்த்தகர்களும் தமக்கு ஆதரவளிப்பார்கள்  என காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் இருந்தது. மோடியின் கடைசி நேர பிரசாரத்தால் வர்த்தகர்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர். மோடியின் மாநிலம் என்பதால் அவரது தந்திரம் குஜராத்தில் பலித்தது. கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மோடி என்ற பெயர் முன்னிலை பெற்று வெற்றியைத் தேடித்தந்தது. குஜராத் தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்த மோடி என்ற சொல் அடுத்த பொதுத் தேர்தலில் வலுவிழந்துவிடும்.

மோடியின் மாவட்டமான மேன்சலாவில்  ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் மட்டும் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. மோடியின்  தொகுதியிலும் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.இது பரதீய ஜனதாவுக்குப் பலத்த அடியாகும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் வெளியேறியதே தோல்வியின் பிரதான காரணியாகும். 2017, 2012  ஆம் ஆண்டுகளில் காங்கிரஸுடன் இணைந்து  தேர்தலைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் 2017,  ஆம் ஆண்டு மூன்று தொகுதிகளிலும் , 2012   ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தோல்வியடைந்ததால் 72  தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. . இதனால் காங்கிரஸுக்கு சேர வேண்டிய வாக்குகள் சிதறிவிட்டது.

குஜராத்தில் பல தொகுதிகளில் 200 முதல்  20௦௦ வாக்கு வித்தியாசத்தி தான் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 16 தொகுதிகளில் பாரதீய  ஜனதா வெற்றி பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 33 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸின் பக்கம் இருக்கின்றனர். குஜராத் மாநிலத்தில்  ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான போராட்டங்கள் எதிலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. குஜராத்தில் வலுவாகக் கால் ஊன்ற வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டுத் தேர்தலில்   115  தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய  ஜனதா இப்போது 99  தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு 61  தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இப்போது 77   .தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தின் முதல்வரான விஜய் ரூபவானிக்கு எதிராகக் களம் இறங்கிய ஜிக்னேஷ் மேத்வானி, ஹர்த்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர் ஆகிய மூவருடனும் இணைந்தது காங்கிரசுக்கு இராஜதந்திர ரீதியில் பலமாக உள்ளது. தவிர குஜராத்தில் இருக்கும்முக்கிய இளம் தலைவர்களையும் ராகுல் தனது பக்கம்  இழுத்துள்ளார். குஜராத்தில் செல்வாக்குச் செலுத்துபவர்களுடன் நெருக்கமாக இணைந்தால் அங்கு காங்கிரஸ் வலுவாகக் கால் ஊன்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். பாரதீய  ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் அண்மையில்  நடைபெற்ற ஆறு சட்ட மன்றத் தேர்தல்களில் வெற்றி  பெற்றது. கடந்த காலத்  தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் பாரதீய  ஜனதா பெற்ற வாக்குகளின் சத வீதம் குறைவடைந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு கர்நாடகா,மத்தியப்பிரதேசம்,சட்டீஸ்கர், ராஜஸ்தான், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து,மிசோராம் ஆகிய எட்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன, அங்கெல்லாம் காங்கிரஸ் மிகவும் பலமானதாக இருக்கிறது. பெரிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம்,சட்டீஸ்கர். ராஜஸ்தான் ஆகியவற்றில் பாரதீய ஜனதாவும் கர்நாடகத்தில் காங்கிரஸும் ஆட்சி செய்கின்றன. அங்கு ஆளும் கட்சிகள் மக்களின் எதிர்ப்பலைகளை எதிர் நோக்க வேண்டிய  நிலை உள்ளது.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை. விவசாயிகளின் பிரச்சினை, வேலை இல்லாத இளைஞர்களின் எதிர்பார்ப்பு  என்பன விஸ்வரூபமாக முன்னிற்கின்றன. இவர்களுக்கான சரியான தீர்வைக் கொடுப்பவர்கள்தான் அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.


No comments: