Monday, December 3, 2018

தமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்


தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பரம விரோதிகளாகச் செயற்பட்டு வருகின்றன. தமிழகத்தின் ஏனைய அரசியல் கட்சிகள்அனைத்தும் தேர்தல் காலத்தில் இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. அவையும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும்  கூட்டணி சேர்ந்தன.

எதிரணி அரசியல்  தலைவர்களின்  எதிர்பாராத சந்திப்பை தமிழக ஊடகங்கள்  மிகைப்படுத்தி ஊதிப்பெரிதாக்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் செய்தார். அப்போது  அதேபாதையால் சென்ற ஜெயலலிதா காரைவிட்டு இறங்கி வைகோவை நலம் விசாரித்தார்.  அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் வைகோ இணைவார் என ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன.  அது நிஜமாகாமலே ஜெயலலிதா இறந்துவிட்டார்.

காங்கிரஸ் தலவர் ராகுலை, திருமாவளவன் சந்தித்தபின் அடுத்த தேந்ர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தனது கட்சி போட்டியிடும்  என அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ராகுல் செக் வைத்துள்ளார் என ஊடகங்கள் தெரிவித்தன. கமலும் ராகுலும் சந்தித்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கழற்றிவிட,  காங்கிரஸ் தயாராகிவிட்டதாக ஊடகங்கள் கதை அளந்தன. ஸ்டாலினும் தினகரனும் ஹோட்டலில் தங்கியபோது இரகசியப் பேச்சு வார்த்தைஎன செய்தி வெளியாகியது.

மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் கடந்த தேர்தல்களின்போது ஒன்றாக இணைந்த வைகோவும் திருமாவளவனும் அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைய விருப்பம் கொண்டுள்ளனர். ஸ்டாலினை முதலமைச்சராக்குவேன் என வைகோ சபதமிட்டுள்ளார். கஜா புயலில் கோரத்தாண்டவத்தின் பிற்பாடு   அமைச்சர்கள் செயற்படவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், வைகோ புகழந்து தள்ளியுள்ளார். இயற்கை அனர்த்தத்தின் போது போது ஜெயலலிதாவைவிட சிறப்பாக தமிழக அரசு  செயற்படுகிறது என வைகோ கருத்துத் தெரிவித்தார். ஸ்டாலினை கைவிட்டு எடப்பாடியுடன் கைகோர்க்க வைகோ தயாராகிவிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


அரசியல்வாதிகள் எதிர்பார்க்காத கோணத்தில் செய்திகளை வெளியிட்டு அவர்களைத் திக்கு முக்காடவைப்பதில் ஊடகங்கள் முனைப்புக் காட்டுகின்றன. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப்பார்த்து தொண்டர்கள் கலக்கமடைவார்கள். காலையில் வெளியான செய்தியைத் தலைப்பாக்கி இரவில் சுடச்சுட விவாதக்  களமாக்குவதில் தொலைக்காட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. நெறியாளராகச் செயற்படுபவர்கள் தாம் நினைக்கும் பிழையான பாதையில் விவாதிப்பபவர்களை அழைத்துச் செல்ல முயற்சிப்பர்கள். சிலர் அவர்களது வலையில் விழுந்துவிடுவார்கள். சிலர் சாமர்த்தியமாகத் தப்பிவிடுவார்கள்.
காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,  திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைய விரும்புகின்றன. திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் துரைமுருகனின் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்று வைகோவையும் திருமாவளவனையும் பதறவைத்துள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலைச் சிறுத்தைகளும் நட்பு கட்சிகள். காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியன ரெகுலர் கட்சிகள் என துரைமுருகன் பேட்டியில் தெரிவித்தார். அந்தப் பேட்டியின் சாராம்சத்தை அப்படியே மாற்றி கொழுத்திப் போட்டன ஊடகங்கள்.

வைகோவுக்கும் திருமாவளவனுக்கும் திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இடம் இல்லை என ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. இதனால் கலக்கமடைந்த வைகோ,ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என அறிவித்தார். திருமாவளவன் பதற்றப்படாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து கருத்துத் தெரிவித்தார். பரபரப்பாக செய்திகள் வெளியான சந்தர்ப்பத்தில் ஸ்டாலினைச் சந்தித்த வைகோவும்   திருமாவளவனும் தெளிவடைந்தனர்.


காவிரிக்குக் குறுக்கே  மேகதாது எனுமிடத்தில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது. அதனை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு எதிராக அரசியல் செய்யும்  திராவிட முன்னேற்றக் கழகம் டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த்,வாசன், கமல், தினகரன் ஆகியவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அடுத்த தேர்தலுக்கான கூட்டணிக் கூட்டமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

காங்கிரஸ்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,விடுதலைச் சிறுத்தைகள்,இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மாக்ஸிஸ் கட்சி, முஸ்லிம் லீக், மனித நேயக்கட்சி ஆகியன அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பிடிக்கும் கட்சிகள் என கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல கட்சிகள் பதியப்பட்டிருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம்,அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவைதான் தேர்தல்  திணைக்களத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட கட்சிகள். தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றதால் ஏனைய கட்சிகளின் அங்கீகாரம் நீக்கப்பட்டது. தேர்தல்  திணைக்களத்தின் அங்கீகாரத்தை இழந்த கட்சிகள் மீண்டும் அதனைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால்தான் இழந்த அங்கீகாரத்தைப் பெறலாம் என வைகோவும் திருமாவளவனும் நம்புகின்றனர்.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரத் துடிக்கும் கட்சிகளின் தலைவர்களும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையின்  பின்னர்தான் உள்ளே இருப்பது யார்? வெளியேறப் போவதுயார்? புதிதாக இடம் பிடிப்பது யார்?  போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

சூரன் ஏ. ரவிவர்மா.

No comments: