Monday, December 24, 2018

சென்னையில் ஸ்டாலின் கொழுத்திப்போட்டதிரி டில்லியில் வெடிக்கிறது.


தமிழக அரசியலில் மட்டுமன்றி இந்திய அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர் கருணாநிதி.  கருணாநிதி இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டி எழுப்பும் திறமை ஸ்டாலினிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் அவரை எதிர்க்கும் அரசியல் தலைவர்களிடன் இருக்கிறது. அந்தச் சந்தேகத்துக்கு கருணாநிதியின் சிலை திறப்புவிழாவில் விடையளித்துள்ளார் ஸ்டாலின். காங்கிரஸின் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுலை வழிமொழிகிறேன். ஏனைய தலவர்களும் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் உரையால் டில்லி அரசியல் அதிர்கிறது.  பாரதீய ஜனதாக் கட்சியின்  பிரதமராக  மோடி முன்நிறுத்தப்படுகிறார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமராக ராகுலை முன்னிறுத்துவீர்களா என்ற கேள்விக்கு ஸ்டாலின் விடையளித்துள்ளார்.

பாரதீய ஜனதாவை எதிர்க்கும் மமதா  பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார் போன்ற தலைவர்களின் மனதில் பிரதமராகும் ஆசை இருக்கிறது. தேர்தலின் பின்னர்  பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என்பது அவர்களின் விருப்பம். ஆகையினால்  பிரதமர்  வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்திக்க அவர்கள் விடும்புகின்றனர். காங்கிரஸை விட கூடுதலான தொகுதிகளில் வெற்ரி பெற்றால் தான் பிரதமராகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள்  இருக்கிறார்கள். தங்கள் கூட்டணியின் பிரதமராக ராகுல்காந்தியை ஸ்டாலின் வழிமொழிந்ததை அவர்கள் ரசிக்கவில்லை.

ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வாரிசுகளாக அரசியலில் கால் பதித்தவர்கள். அரசியலில் அவர்களால் பிரகாசிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அண்மையில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சியிடம் இருந்த மூன்று மாநிலங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதால் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. கருணாநிதியின் நிழலில் வளர்ந்தவர் ஸ்டாலின். கருணாநிதி நோய் வாய்ப்பட்டிருந்தபோது செயல் தலைவராக ஸ்டாலின்,சிறப்பாகப் பணியாற்றினார்.தமிழக அரசியலில் மட்டும் பேசப்பட்ட ஸ்டாலின் இப்போது டில்லி அரசியலாலும் நோக்கப்படும் தலைவராக உயர்ந்துள்ளார்.

இந்திய அரசியலில் இந்திரா காந்தி ஓரம் கட்டப்பட்டபோது 1980 ஆம் ஆண்டு “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருகஎன  இந்திரா காந்தியை தமிழகத்துக்கு அழைத்துஅவரின் ஆழுமையை வெளிப்படுத்ஹ்டியவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சிக்கு சோனியா  காந்தி தலைமை ஏற்ற போது வெளிநாட்டைச் சேர்ந்தவர் என அரசியல் எதிரிகள் அவரை ஒதுக்கினார்கள். 2009  ஆம் ஆண்டு சோனியாவைத் தமிழகத்துக்கு அழைத்து அவரின் அரசியல் பயணத்துக்கு உற்சாகமூட்டியவர் கருணாநிதி. ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்பதா இல்லையா என காங்கிரஸுடன் கூட்டணி சேர் இருக்கும் கட்சிகள் தயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கருணாநிதியைப் போன்று ராகுலை அடையாள காட்டியுள்ளார் ஸ்டாலின்.

ராகுல் காந்திக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிடிக்காது. தமிழ்கத்துக்கு அவர் விஜயம் செய்யும் போது மரியாதை நிமித்தமாக  கருணாநிதியைச் சந்திப்பதில்லை. ஸ்டாலினுக்கும் ராகுல் காந்திக்கும் ஒத்துவராது. ராகுல் மீது ஸ்டாலின் கோபமாக இருக்கிறார் போன்ற செய்திகள் கடந்த காலங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டன். அவை எல்லாவற்றுக்கும் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சியைத் தோற்கடிக்கச்செய்வதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர ஆர்வமாக இருக்கும் கட்சித் தலைவர்கள் ஸ்டாலினின் பேச்சை ரசிக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னர்தான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என அவர்கள் கண்டிப்பான தொனியில் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பம்  என ஸ்டாலின் மீண்டும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் பேச்சு அரசியல் அரங்கை அதிரச்செய்துள்ளது.  தனது கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தான் ஸ்டாலின் அதனை வெளிப்படையாக அறிவித்திருப்பார்.  

ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழியபோகும் தகவலை காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் முன்பே தெரியப்படுத்தி இருக்கும். கூட்டணிக் கட்சித் தலைவர்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் சந்தர்ப்பமாக காங்கிரஸ் கட்சி இதனை எதிர் நோக்குகின்றது. கூட்டணித் தலைவர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக   திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பம் அது என்று சொல்லி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது  காங்கிரஸ் கட்சி.  மாம்தா பான்ர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத் பவார் போன்றவர்களுக்கு ஒருசில மாநிலங்களில் தான் செல்வாக்குள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நாடு பூராகவும் தொண்டர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி அடுத்த தேர்தலில் அதிகளவான தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டது விஷேடமாக நோக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியையும், பாரதீஜ ஜனதாக் கட்சி ஆட்சியையும் கங்கிரஸ், பாரதீய ஜனதாக்  கட்சிகள் இல்லாத ஆட்சியையும் மத்தியில் அமைத்த பெருமைக்குரியவர் கருணாநிதி. கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின்  பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வதில் ஸ்டாலினின் பங்கு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
சூரன்.ஏ.ரவிவர்மா. 

No comments: