Friday, December 14, 2018

முடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை


மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,சத்தீஸ்கர்,மிசோராம்,தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மோடி அலையை முடக்கியுள்ளது. மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி பெரு வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத போதிலும் மோடி, அமித் ஷா ஆகியோரின் வியூகத்தால் பாரதீய ஜனதா சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் மோடியின் கனவை ராகுல் சிதறடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைவராகப் பொறுப்பேற்ற ஒரு வருடத்தின் பின்னர் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற  தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிடியில் இருந்த மூன்று மாநிலங்களின் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ராகுலுக்கும் மோடிக்குமிடையிலான போட்டியில் ராகுல் முந்தியுள்ளார். மோடி தோல்வியடைந்துள்ளார்.

மத்தியப்பிரதேசம்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மூன்று முறை 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. மிசோராமில் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மிசோ தேசிய முன்னணியிடம் ஆட்சியை இழந்துள்ளது. மிசோராம் தோல்வியை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வடகிழக்கு இந்தியா காங்கிரஸின் கையை விட்டுப் போயுள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அதனைச் சரிசெய்யலாம் என காங்கிரஸ் நினைக்கிறது.

தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாவும் தென் மாநிலங்களில் கோலோச்ச முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. சந்திரபாபு நாயுடுவுடன் மெகா கூட்டணி அமைத்தும் காங்கிரஸால் வெற்றி பெறமுடியவில்லை. தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கையில் முன்கூட்டியே ஆட்சியைக் கலைத்த சந்திரசேகரராவ் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிபீடமேறியுள்ளார். கடந்த தேர்தலில் 63 தொகுதிகளில் வெற்றி பெற்ற சந்திரசேகரராவின் கட்சி  இம்முறை 88 தொகுதிகளில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இம்முறை மெகா கூட்டணி அமைத்தும் 21  இடங்களில் தான் வெற்றி பெற்றது.

மிசோராமில் 2013 ஆம் ஆண்டி நடந்த தேர்தலில் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் மிசோ தேசிய முன்னணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.  இப்போது நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகளிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா இம்முறை ஒரு தொகுதியில் வெற்றி பெறவில்லை

ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் மிக இலகுவாக வெற்றி பெற்ற காங்கிரஸ் ராஜஸ்தானில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 200 தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் வேட்பாளர் ஒருவர் மரணமானதால் 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு குறைவாக இருந்தமையால் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற மமதா பானர்ஜி ஆதரவுக் கடிதம் கொடுத்தமையினால் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாரதீஜ ஜனதாக் கட்சி 163 தொகுதிகளிலும் காங்கிரஸ் 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இம்முறை  காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும் பாரதீஜ ஜனதா 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

மத்தியப் பிரதேசத்திலும்  ராஜஸ்தானிலும் பாரதீய ஜனதா கடிமையான  போட்டியைக் கொடுத்தது. அதிக மான தொகுதிகளில்  நூற்றுக்  கணக்கான வாக்கு வித்தியாசத்தில் பாரதீய ஜனதா தோல்வியடைந்தது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை விட அதிகமான வாக்குகளைப் பெற்றும் குறைந்த தொகுதிகளிலேயே பாரதீஜ ஜனதா வெற்றி பெற்றது. முன்னாள் முதலமைச்சரும் 12 அமைச்சர்களும் தோல்வியடைந்தது பாரதீய ஜனதாவுக்குப் பின்னடைவே. மத்தியப் பிரதேசத்தில் ஒரு சதவீத வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியும்  காங்கிரஸ்  கட்சியும் பெற்ற வாக்குகளைவிட குறைந்த வாக்குகளையே இந்தத் தேர்தலில் பெற்றுள்ளன. வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கும் பிரிந்து சென்றுள்ளன. சுயேட்சைகள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.
பண மதீப்பீட்டு இழப்பு, ஜி எஸ்.டி வரி, விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமை, ஆளும் கட்சிகளுக்கு எதிரான மனநிலை, வறுமை, வேலையின்மை நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறவேற்றாமை ஆகியவற்றைத் தேர்தலின் முடிவு உணர்த்தியுள்ளது.

ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.  மோடிக்கு எதிராக ராஜீவால் நிற்க முடியுமா என்ற கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா


No comments: