Wednesday, July 29, 2020

500 விக்கெட் வீழ்த்தி ஸ்டூவர்ட் பிராட் சாதனை

மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான நேற்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், கிரேக் பிராத்வெய்ட்டின் (19 ஓட்டங்கள்) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். இது ஸ்டூவர்ட் பிராட்டின் 500-வது டெஸ்ட் விக்கெட் (140-வது போட்டி) ஆகும். இதன் மூலம் இந்த இலக்கை கடந்த பந்து வீச்சாளர்களின் வரிசையில் 7-வது வீரராக ஸ்டூவர்ட் பிராட் இணைந்துள்ளார். மேலும் இந்த மைல்கல்லை குறைந்த வயதில் எட்டிய 2-வது பந்து வீச்சாளர்  என்ற பெருமையையும் பெற்றார். பிராட்டின் தற்போதைய வயது 34 ஆண்டு 32 நாட்கள். இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அவரை விட குறைந்த வயதில் (31 ஆண்டு 334 நாட்கள்) சாதித்த வீரர் ஆவார். 

டெஸ்ட் போட்டியில் பிராட்டின் பந்து வீச்சில் அதிக முறை வீழ்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் (12 முறை), மைக்கேல் கிளார்க்கும் (11 முறை) என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சாதனை நாயகன் பிராட்டை வெகுவாக பாராட்டியுள்ள சக வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன், அவர் தொடர்ந்து இதே போன்று பந்து வீசினால் தனது விக்கெட் எண்ணிக்கையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். டெஸ்ட் வரலாற்றில் 500 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் விவரம் வருமாறு:-

 

 முதலிடத்தில் இலங்கை வீரர் முரளிதரன் இருக்கிறார். 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகலை வீழத்தியுள்ளார். அவுஸ்திரேலிய வீரர் ஷேர்ன் வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுளார். 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் அனில் கும்ளே 619 விக்கெட்டுகளையும், 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இக்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் 589 விகெட்டுகளையும், 124 போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய வீரர் மெக்ராத்563 விக்கெட்டுகளையும்,132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மேற்கு இந்திய வீரர் வால்ஸ் 519 விக்கெட்டுகளையும், 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இக்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 501 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பிராட் என்றதுமே இந்திய ரசிகர்களுக்கு பிராடைவிட நினைவுக்கு வருபவர் யுவராஜ் சிங்தான். 2007 ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் பிராட்டின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்ஸர்களாக்கி சாதனை படைத்தார் யுவராஜ் சிங். ஒரு சர்வதேசப் போட்டியில், அதுவும் ஒரு உலகக்கிண்ணப் போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களைக் கொடுத்தவரின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? எவ்வளவு மன அழுத்தம் கூடியிருக்கும், அதுவும் 21 வயது இளைஞனுக்கு இந்த மரண அடிகளையெல்லாம் தாங்கும் வலிமை இருந்திருக்குமா, தூக்கத்தில் எல்லாம் யுவராஜ் அடித்த சிக்ஸர்கள்தானே ஞாபகத்தில் வந்திருக்கும். ஆனால், சிக்ஸர்களால் மிரட்டப்பட்டவன், பீஸ் பீஸாகக் கிழிக்கப்பட்டவன்தான் இன்று 500 விக்கெட்டுகளோடு நம்மைப் பார்த்து புன்னகைக்கிறான்.

 

இன்று 500 விக்கெட்டுகளைக் கடந்து வெற்றிகரமான  பந்துவீச்சாளராக மாறியிருப்பதற்குப் பின்னால் பிராடின் கடுமையான உழைப்பு இருக்கிறது. அதேபோல் இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் உதவியும் இருக்கிறது. 2007 செப்டம்பரில் ரி20 உலகக் கிண்ணப் போட்டியோடு ஸ்டூவர்ட் பிராடை கைவிடுடவில்லை இங்கிலாந்து அணி நிர்வாகம். அந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இலங்கைக்கு எதிரான தொடருக்கு பிராடை அழைத்துச்சென்றது இங்கிலாந்து. பிராடின் டெஸ்ட் அறிமுகம் இலங்கையில்தான் நடந்தது.

No comments: