குஜராத் சட்ட மன்ரத்தேர்தல் அடுத்தமாதம் நடைபெற உள்ளது. இது வரை காலமும் பாரதீய ஜனதாவுகும், காங்கிரஸுக்கும் இடையேதான் குஜராத்தில் போட்டி இருந்தது. இப்போது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் களத்தில் இறங்கியுள்ளது. புதிய திட்டங்களுடன் கெஜ்ரிவால் களம் இறங்கி உள்ளதால், குஜ்ராத் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது.
குஜராத்தில் ஆட்சிக்கு
எதிரான மனநிலை இருப்பதாக செய்திகள் கூறிவரும் நிலையில், முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி,
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரும் தேர்தலில் போட்டியிடவில்லை.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 1, 5 ஆகிய திகதிகளில்
இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்
நடைபெறவிருக்கும் சூழலில், குஜராத் சட்டமன்றத் தேர்தல் பா.ஜ.க-வுக்கு மிக முக்கியமான
தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக
கணிப்புகள் வந்தாலும், கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக பா.ஜ.க-வுக்கு ஆட்சி நடைபெற்றுவரும்
நிலையில், அங்கு ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது.
2014-ல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு ஆனந்தி பென் முதல்வரானார்.
இரண்டே ஆண்டுகளில், முதல்வர் பதவியை ஆனந்தி பென் ராஜினாமா செய்தார். பிறகு, விஜய் ரூபாய்
முதல்வரானார். இவரும் கடந்த ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இவரைத் தொடர்ந்து,
பூபேந்திர படேல் முதல்வரானார்.
2001-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுவரை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி தொடர்ச்சியாக ஆட்சி செய்தார். அவர் முதல்வராக இருந்தபோது, ‘வளர்ச்சி’ என்ற சொல்லே மாநிலம் முழுவதும் சொல்லப்பட்டது. ஆனால் மோடி பிரதமரான பிறகு, அடுத்த முதல்வர்களின் ஆட்சியில் பல்வேறு சிக்கல்களை பாஜக அரசு சந்தித்ததாக சொல்லப்பட்டது. அடுத்தடுத்து, முதல்வர்கள் பதவி விலகியதற்கு அதுதான் முக்கியக் காரணம். தற்போது, பல சவால்களை குஜராத் பா.ஜ.க அரசு எதிர்கொண்டுவருகிறது.
சிறு குறு தொழில்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அந்த மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வர்த்தகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பா.ஜ.க அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததன் காரணமாக, அரசுக்கு எதிரான மனநிலையை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த்
கெஜ்ரிவால் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்,
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3,000 உதவித்தொகை, பெண்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை,
அயோத்திக்கு இலவச ரயில் பயணம் உட்பட கெஜ்ரிவால் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் வாக்காளர்களிடம்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. மொத்தம் 182
சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் குஜராத்தில், சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வும்
காங்கிரஸும் பெற்ற வாக்குகளின் சதவிகித இடைவெளி மிகவும் குறைவுதான்.
ஆகவே, பல வகைகளில் இந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க பல சவால்களைச்
சந்தித்துவருகிறது. இந்த நிலையில்தான், குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து
விபத்து ஏற்பட்டதில் 140-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவும், ஆளும்
பா.ஜ.க-வுக்கு பெரும் சோதனையாக அமைந்திருக்கிறது. இந்தத் துயரச் சம்பவம்,வரும் சட்டமன்றத்
தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.
இப்படியான சூழலில்தான், வரும் தேர்தலில் 150 தொகுதிகளைப் பிடித்துவிடுவோம் என சில மாதங்களுக்கு முன்புவரை சொல்லிவந்த பா.ஜ.க தலைவர்கள், தற்போது 120 தொகுதிகளுக்கு மேல் பிடிப்போம் என்று கூறுகிறார்கள். இதிலிருந்தே அவர்களின் நிலைமை புரிகிறது. குஜராத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ‘வளர்ச்சி’ பற்றியெல்லாம் பெரிதாகப் பேசவில்லை.
மாறாக, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை சமீபகாலத்தில்
அவர் தொடங்கிவைத்திருக்கிறார். அதாவது, இனிமேல் தொடங்கப்படவிருக்கும் திட்டங்கள் பற்றிய
அறிவிப்புகள் அவை. அங்கு, பா.ஜ.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சில திட்டங்கள் பற்றி மோடி
குறிப்பிட்டுப் பேசினாலும்கூட, முன்பு சொல்லப்பட்ட ‘குஜராத் மாடல்’ என்ற பிரசாரத்துக்கு
கிடைத்த வரவேற்பு இந்த முறை கிடைத்ததாகத் தெரியவில்லை.
இத்தகைய சூழலில்தான், முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, முன்னாள்
அமைச்சர்கள் எனப் பலரும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பா.ஜ.க-வின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நவம்பர் 9-ம்திகதி நடைபெற்றது.
இந்த நேரத்தில்தான், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவை விஜய் ரூபாய் அறிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் கௌசிக் படேல், சௌரவ் படேல், ஆர்.சி.ஃபல்டு, பூபேந்திரசின் சுடஸ்சமா,
பிரதிப்சின் ஜடேஜா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை
என்று அறிவித்திருக்கிறார்கள்.
தேர்தலில் புதிய முகங்களை களமிறக்குவது என்று பா.ஜ.க முடிவுசெய்திருக்கிறது.
எனவே, விஜய் ரூபானிக்கும் பல முன்னாள் அமைச்சர்களுக்கும் தேர்தலில் போட்டியிட சீட்
வழங்கப்படாது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். மேலும், வேட்பாளர் பட்டியலில் அவர்களின்
பெயர்கள் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டதாக பா.ஜ.க வட்டாரங்களில் பேசப்பட்டது. தற்போது
சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் போட்டியிட
வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றுதான் செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதால், பா.ஜ.க மீதான அதிருப்தியும் ஆட்சிக்கு எதிரான மனநிலையும் மாறிவிடுமா? சௌரவ் படேல் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்ற காரணத்தால், பல ஆண்டுகளாக மின்துறை அமைச்சராக இருந்த அவர் மீது சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவார்களா என்பது போன்ற கேள்விகளை எதிர்க் கட்சிகள் எழுப்புகின்றன. மக்கள் முடிவு என்ன என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்!
No comments:
Post a Comment