இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வரும் வேளையில், கருத்துக்கணிப்புகளும் பல அதிர்ச்சியான முடிவுகளுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் கனவில் சில தலைவர்கள் திளைத்திருக்க பிரதமர் யார் என்பதை பொதுமக்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். டில்லியில் ஏபிபி நியூஸுக்காக ஏ.சி. நெல்சன் நிறுவனமும்,தமிழ்நாட்டில் ஜுனியர் விகடனும் கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளன.
மோடி பிரதமராவதையே டில்லியும், தமிழகமும் விரும்புவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. டில்லியில் இரண்டாவது இடத்தில் கெஜ்ரி வாலும், மூன்றாவது இடத்தில் ராகுலும் இருக்கிறார் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்றே அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தமிழகமக்கள் ஜெயலலிதாவை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளனர். டில்லிமக்கள் மோடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போன்று தான் தமிழக மக்களும் மோடியையும் அவரது கட்சியையும் ஆதரித்துள்ளனர். திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் சமமான விகிதா சாரத்தையே தமிழக மக்கள் வழங்கி உள்ளனர்.
பலமான கூட்டணி அமைத்தால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை அரசியல் கட்சிகளுக்கு மக்கள் உணர் த்தியுள்ளனர். இந்த உண்மையை உணர்ந்து கொண்டதனால் மிகப்பெரிய கூட்டணிக்கான கதவை கருணாநிதி திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதாவின் எண்ணம் வேறாக உள்ளது. தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பனர்களுடன் மத் தியஅரசில் நுழைந்து விடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா.
15ஆவது நாடாளுமன்றம் ஜுன் 3ஆம் திகதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் அல்லது மே யில் பொதுத்தேர்தல் நடைபெறவேண்டும் மோடியை முன்னிலைப்படுத்திய பாரதிய ஜனதாக்கட்சி தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து விட்டது. ஆட்சி அமைப்பதற்கு 272 உறுப்பினர்கள் தேவை. இதனை கருத்தில் கொண்டு இந்தியா 272 டொட்கொம்,மோடி 272 பிளஸ் என இலத்திரனியல் திட்டங்களை பாரதீயஜனதாக்கட்சி பிரசாரத்துக்காகப் பயன்படுத்துகிறது.
வாஜ்பாய்க்குப் பின்னர் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் இல்லாத பாரதீய ஜனதாக் கட்சியைக் கரைசேர்க்க மோடி கிடைத்துள்ளார். மோடியின் வளர்ச்சியும்,பாரதீயஜனதாக் கட்சியின் எழுச்சியும் காங்கிரஸை கிலிகொள்ள வைத்தது. வீழ்ந்தது காங்கிரஸ் என்ற வெற்றிப் பெருமிதத்துடன் இருந்த பாரதீய ஜனதாக் கட்சிக்கு வில்லனாக வந்தது ஆம் ஆத்மி அரவிந்த கெஜ்ரிவாலின் தலைமையில் முதன் முதலாக டெல்லி மாநிலத்தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸூக்கும், பாரதீய ஜனதாவுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து ஆம் ஆத்மி வியூகம் வகுத்தால் இரண்டுகட்சிகளும் பாதிக்கப்படும்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. ஊழல் பற்றிய புகா ரைத் தெரிவிக்க விஷேட தொலைபேசி இலக்கம். ஊழல் செய்த அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் அரச ஊழியர்களின் பிள்ளைகள் அரசாங்கப் பாடசாலையில் தான் படிக்க வேண்டும் இப்படிப்பட்ட திட்டங்கள் தமது மாநிலத்திலும் நடைபெறவேண்டும் என்றே அதிக மானவர்கள் விரும்புகிறார்கள். மத்தியில் ஒரு கட்சி அமைந்தால் எப்படி இருக்கும் என்று இந்திய மக்கள் சிந்தித்தால் மோடியின் எதிர்பார்ப்பும் கனவாகவே போய்விடும்.
மோடிக்கு நிகரான தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. தலைமை பொறுப்பை ஏற்பதற்கு யாருமே முன்வரவில்லை அடுத்த தலைவர் ராகுல்தான் என்று அறிக்கை விடுகிறார்கள். இது காங்கிரஸில் தன்னம்பிக்கைக்கு சவாலாக உள்ளது. இத்தனை காலமும் கண்ணாமூச்சி விளையாடிய ராகுல் எந்தப் பொறுப்பையும் ஏற்கத்தயார் என்று அறிவித்துள்ளனர். ஆகையினால் காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கும் கனிமொழிக்கு எதிரான 2 ஜி ஊழல் வழக்கும் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் முன்னிலை வகிக்கும். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக தீர்ப்பு வரவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் கூறுகிறார்கள். ஸ்பெகிரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைதுசெய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால் அவரது பிரதமர் கனவு தவிடு பொடியாகவிடும். கனிமொழி மீண்டும் கைது செய்யப்படால் திராவிடமுன் னேற்றக்கழகத்துக்எதிரான பிரசாரமாக அது முன்னிலைபெறும். இரண்டு பெண் பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளினால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படலாம்.
அரசியல் தலைவர்களின் விருப்பமும் கருத்துக்கணிப்புகளும் செய்திகளாகவும் அறிக்கைகளாகவும் வெளிவருகின்றன. நாடாளு மன்றத்தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒன்றாகத் தமிழக மக்கள் கருதவில்லை. இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் வாக்களித்துள்ளனர்.
திராவிடமுன்னேற்றக்கழகம் 1967 ஆம் ஆண்டு ஆரம்பக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அதனுடைய கையே மேலோங்கி இருந்தது. எம்.ஜீ. ஆர் கட்சியிலிருந்து. வெளியேறிய போது வீழ்ச்சியடைந்தது பின்னர் தனது செல்வாக்கை உயர்த்தியது. வைகோ பிரிந்து போனபோது எவ்விததாக்கமும் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். சுகவீன முற்றிருந்த போதும், இந்திரா, ராஜீவ் ஆகியோர் கொல்லப்பட்டபோதும் நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக்கழகம் படுதோல்வியடைந்தது. பின்னர் பழைய நிலைக்கு உயர்ந்தது.
நாடாளுமன்றத் தேர்தல்களில் 50 சதவீதமான வெற்றியை திராவிட முன்னேற்றக்கழகம் பெற்றுள்ளது. மத்தியில் தொடர்ந்து மூன்று முறை அரசமைக்க உதவியது இட ஒதுக்கீடு மெட்ரோ ரயில் திட்டம், வேலைவாய்ப்பு போன்ற திராவிடமுன்னேற்றக்கழக அமைச்சர்களின் செயல்பாடு வெற்றியைத் தேடித்தரும் என கருணாநிதி நம்புகிறார். 1998ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு ஆதரவு வழங்கிய ஜெயலலிதா ஒரே வருடத்தில் தேநீர் விருந்து வைத்து ஆட்சியைக் கவிழ்த்தார். அதன் பின்னர் மத்திய அரசில் அவர் சேருவதற்கான வாய்ப்பை தமிழகமக்கள் வழங்கவில்லை. மக்களின் மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டால் தான் தேர்தல் வெற்றி பெற முடியும் என்பதை சில அரசியல் தலைவர்கள் இன்னமும் உணரவில்லை.
வானதி
சுடர் ஒளி 19/01/14
No comments:
Post a Comment