Tuesday, February 2, 2010

உலகக்கிண்ணம்2010


நியூசிலாந்து
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஓசியானிக் தீவுகளில் இருந்து தெரிவான ஒரே ஒரு நாடு நியூசிலாந்து. உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதி காண் போட்டியில் ஓசியானிக் தீவுகளில் இருந்து நியூசிலாந்தைத் தவிர 10 நாடுகள் போட்டியிட்டன. ஏபி.என இரு குழுக்களாக போட்டியிட்டு முதலிடம் பிடித்த மூன்று நாடுகளும் நியூசிலாந்தும் இரண்டாவது சுற்றில் போட்டியிட் டன. இரண்டாவது சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்ற நியூசிலாந்து முதலிடம் பெற்றது. ஆறு போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து ஐந்து வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றது. 14 கோல்கள் அடித்த நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன.
முதல் ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நியூசிலாந்து ஆறாவது போட்டியில் தோல்வி அடைந்தது. பிஜி தீவுடனான முதலாவது போட்டியில் 2 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நியூசிலாந்து இரண்டாவது போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. வனுதுதீவுக்கு எதிராக 4 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.
ஓசியானிக் தீவுகளில் நியூசிலாந்து முதலிடம் பெற்றாலும் ஆசியாவில் ஐந்தாவது இடத்தைப் பெற்ற நாட்டுடனான போட்டியில் வெற்றி பெற்றால்தான் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற முடியும். தோல்வி அடைந்தால் ஐந்தாவது இடத்தைப் பெற்று நியூசிலாந்தை வென்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறும்.
அவுஸ்திரேலியா, தென் கொரியா, வட கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. ஐந்தாவது இடத்தைப் பிடிப்பதற்காக பஹ்ரேனும், சவூதி அரேபியாவும் மோதின. முதலாவது போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது போட்டியில் 2 2 கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது. இரண்டு போட்டிகளும் சம நிலையில் முடிந்ததால் புள்ளிகளின் அடிப்படையில் பஹ்ரேன் ஐந்தாவது இடததைப் பிடித்தது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக பஹ்ரேனும் நியூசிலாந்தும் மோதின. முதலாவது போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காமையினால் சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து ஒரு கோல் அடித்து வெற்றி பெற்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
1982 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் நியூசிலாந்து முதன் முதலில் விளையாடியது.
அணித் தலைவரான ரியான் நெல்சன், ரிவேர்ஸ், ஷேன் சிமெல்ட், கோல் கீப்பர் மார்க் பொஸ்ரன் ஆகியோர் நியூசிலாந்தின் வெற்றியில் பெரும் பங்காற்றியுள்ளனர். ரிக்கி ஹெபேட் நியூசிலாந்து உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
ஆறு தகுதி காண் போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது.
14 கோல்கள் அடித்த நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. ஆறு முறை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஒரு தடவை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு முறை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
ஷேன் சிமெல்ட் எட்டு கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
இத்தாலி, பரகுவே, சுலோவனியா ஆகிய நாடுகளுடன் எஃப் பிரிவில் நியூசிலாந்து உள்ளது.

No comments: