Sunday, March 7, 2010

உலகக்கிண்ணம்2010


பிரான்ஸ்
உதைபந்தாட்ட உலகில் பலம் வாய்ந்த நாடான பிரான்ஸ் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக இரண்டாவது சுற்றுவரை காத்திருக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் குழு 7 இல் விளையாடிய பிரான்ஸ் 21 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது.
10 போட்டிகளில் விளையாடிய பிரான்ஸ் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தியது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. 18 கோல்கள் அடித்த பிரான்ஸுக்கு எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப்பட்டன. குழு 7 இல் முதல் 22 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சேர்பியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஒஸ்ரியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த பிரான்ஸ் இரண்டாவது போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஆறுதலடைந்தது. ரோமானியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் முறையே 2 2, 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன. பிரான்ஸுக்கு எதிராக நான்கு போட்டிகளில் எதிர்த்து விளையாடிய நாடுகள் கோல் அடிக்கவில்லை. பெரோஸ் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 5 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக இரண்டாவது சுற்றில் அயர்லாந்துக் குடியரசுடன் மோதியது பிரான்ஸ். குழு 8 இல் விளையாடிய அயர்லாந்து 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது. 10 போட்டிகளில் விளையாடிய அயர்லாந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளை சமப்படுத்தியது. 12 கோல்கள் அடித்த அயர்லாந்துக்கு எதிராக எட்டு கோல்கள் அடிக்கப்பட்டன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக பிரான்ஸும் அயர்லாந்தும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆட்ட நேர முடிவு வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. மேலதிக நேரத்தில் பிரான்ஸ் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. வெற்றி பெற வேண்டும் அல்லது போட்டியை சமநிலைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் பிரான்ஸ் விளையாடியது. அயர்லாந்து ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. பிரான்ஸின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அணித் தலைவர் தியோரி ஹென்றி பந்தைக் கையால் தட்டி கோல் அடிக்க உதவி புரிந்தார். இரண்டாவது போட்டி 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததனால் புள்ளி அடிப்படையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. அயர்லாந்தின் ஆட்சேபனைகள் எவையும் கணக்கில் எடுக்கப்படவில்லை. பிரான்ஸுக்கு எதிராக 13 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன. ஒருமுறை சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
அணித் தலைவர் தியோரி ஹென்றி வில்லியம் கல்பாஸ், ஜெரிம் துலவன், வல்கசனதினே, பிராங் ரிபெரி, நிக்கோலாஸ் ஆகியோர் எதிரணியை வீழ்த்த காத்துக் கொண்டிருக்கின்றனர். ரெகாட்ரை மொண்ட் பயிற்சியாளராக உள்ளார்.
தென்னாபிரிக்கா, மெக்ஸிகோ, உருகுவே ஆகிய நாடுகளுடன் குழு 4யில் உள்ளது பிரான்ஸ்.
தியோரி ஹென்றி, அண்ட பெரி ஜிகன்ஸ் ஆகியோர் தலா நான்கு கோல்கள் அடித்துள்ளனர்.

No comments: