Monday, March 29, 2010

ஒரு ஆசனத்திற்காக முட்டிமோதும்தமிழக காங்கிரஸ் தலைவர்கள்

தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன், கே. மலைச்சாமி, எஸ். அன்பழகன், என்.ஆர்.
கோவிந்தராஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இ.எம். சுதர்சன நாச்சியப்பன், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து நான்கு பேரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து இரண்டு பேரும் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பம் உண்டு. திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் இருந்து ராஜ்யசபை எம்.பி. யாக டாக்டர் அன்புமணி தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜூன் மாதத்துடன் அவரது பதவிக் காலம் முடிவடைகிறது. பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லாத படியால் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவரும் நாடாளுமன்ற உறுப்பினராகும் சந்தர்ப்பம் இல்லை
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. அதேபோன்ற ஒரு நிலை பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட உள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக 18 உறுப்பினர்களும் சட்ட மன்றத்தில் உள்ளனர்.
ராஜ்ய சபைக்கு ஒரு உறுப்பினரை தெரிவுசெய்யும் பலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சி மாக்சிஸ்க்ஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன ஒன்றிணைந்தால் ராஜ்ய சபைக்கு இரண்டாவது உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பலம் கிடைக்கும்.
ராஜ்ய சபை உறுப்பினராக தமது கட்சியைச் சேர்ந்த ஒருவரை தேர்தலில் நிறுத்துவதற்கு இடதுசாரிகள் கோரிக்கை விட்டாலும் ஜெயலலிதா அதனை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமானதே. வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற விருப்பம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு உண்டு. ஆனால், ஜெயலலிதாவின் கடைக் கண் பார்வை கிட்டுமா என்பது சந்தேகமே.
காங்கிரஸ் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லாததனால் அன்பு மணிக்கு ஒதுக்கிய இடத்தை திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் சாத்தியம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்துக்காக காங்கிரஸ் கட்சியில் உள்ள பலர் போட்டியிடத் தயாராக உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த தங்க பாலு, இளங்கோவன், பிரபு ஆகியோர் ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
காங்கிரஸுக்குள் உள்ள கோஷ்டி சண்டை மீண்டும் தலை தூக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. ஒரே ஒரு உறுப்பினரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தைத் தமக்காக அல்லது தமது ஆதரவாளர்களைத் தெரிவு செய்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் முயற்சி செய்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையில் முறுகல் நிலை இருப்பதனால் தனக்கு சாதகமான ஒருவர் நாடாளுமன்றம் செல்வதையே திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
பெண்ணாகரம் இடைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் ஆகிய தலைவர்கள் நேரடியாகத் தேர்தல் பிரசாரங்களில் இறங்கியுள்ளனர். தேர்தல் விதி முறைகள் மீறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள போதிலும் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் அதையெல்லாம் கணக்கில் எடுக்காது தமது பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அன்பளிப்புகளும் பணமும் தாராளமாகப் புழங்குவதாக உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்
ளõர்.
இலஞ்சம் கொடுப்பதும் இலஞ்சம் வாங்குவதும் சட்டப்படி குற்றம். உங்கள் வாக்குகளை கவர்வதற்காக வேட்டி, சேலை, பணம் என்பனவற்றைத் தருவார்கள். அவற்றை மறுக்காமல் வாங்குங்கள். வாக்கை மட்டும் எங்கள் வேட்பாளருக்கு அளியுங்கள் என்று சில தலைவர்கள் பகிரங்கமாக பிரசாரம் செய்கின்றனர். இலஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் ஊக்குவிக்கும் இப்படிப்பட்ட பிரசாரங்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.
வேட்டி, சேலை போன்ற அன்பளிப்புப் பொருட்களுடன் பெண்ணாகரத்துக்குச் சென்ற வாகனங்களை சில கட்சித் தொண்டர்கள் வழி மறித்து அவற்றை பொலிஸாரிடம் கையளித்தனர். இதனால் பொலிஸாரின் வேலை இலகுவாகியது. பெண்ணாகரத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அன்பளிப்புப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்
துள்ளது.
பெண்ணாகரம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனவரி மாதத்தில் இருந்து டாக்டர் ராமதாஸ் அன்புமணி, ஜி.கே. மணி போன்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அங்கு முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். பெண்ணாகரத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பாட்டாளி மக்கள் கட்சியிடம் இருந்தது. முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் பெண்ணாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய களம் இறங்கியதால் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் உற்சாகமாகியுள்ளனர். இதனால் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர்.
பெண்ணாகரத்தின் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸின் வாகனம் சோதனை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக ஆளும் கட்சியின் அரசியல் பழிவாங்கல் என்று தொண்டர்கள் கோஷமிட்டனர் பாட்டாளி மக்கள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்புக் காட்டினார்கள். தனது வாகனம் சோதனை செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறவில்லை. ஆனால் துணை முதல்வர் ஸ்டாலினும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் இதற்கு எதிர்மாறாகச் செயற்பட்டனர்.முதல்வர் கருணாநிதியின் வாகனத்தையும் சோதனைச் சாவடியில் சோதனை செய்தனர். அவர் மறுப்பேதுமின்றி சோதிக்க அனுமதித்தார்.
துணை முதல்வர் ஸ்டாலினின் வாகனம் சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தபோது எதுவித மறுப்பும் தெரிவிக்காது சோதனை செய்ய அனுமதியளித்தார் துணை முதல்வர் ஸ்டாலின். ஜெயலலிதா சென்ற வாகனம் சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டபோது தாராளமாய் சோதனை செய்யலாம் என்று ஜெயலலிதா அனுமதியளித்தார்.
துணை முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஆகியோரிடம் உள்ள அரசியல் பக்குவம் டாக்டர் ராமதாஸிடம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களையும் பொலிஸாரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தார் டாக்டர் ராமதாஸ்.
தமிழகத்தில் கடைசியாக நடைபெற்ற 10 இடைத் தேர்தல்களிலும் பெரு வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கையுடன் உள்ளது.
வன்னியர் சமூகத்தை மட்டும் நம்பி உள்ள பாட்டாளி மக்கள் கட்சி இடைத் தேர்தலை கௌரவப் பிரச்சினையாகக் கருதுகிறது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு28/03/10

No comments: