Thursday, March 4, 2010

அ.தி.மு.க. பக்கம் சாய்கிறது காங்கிரஸ்தனித்து ஆட்சி அமைக்க முயல்கிறது தி.மு.க


தமிழக அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்டுவதற்கு பெண்ணாகரம் இடைத் தேர்தல் ஒரு களமாக அமைய உள்ளது. பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தன்னால் முடியுமான அனைத்து வேலைகளையும் செய்து களைத்துப் போனது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.வழக்கமாக, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முந்திக் கொண்டு வேட்பாளரை அறிவிக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெண்ணாகரம் இடைத் தேர்தலை தடுப்பதிலேயே குறியாக இருந்தது. பெண்ணாகரம் இடைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடிப்பதற்காக பொது வேட்பாளராக தனது கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்தார். ஆனால், ராமதாஸின் அறிக்கையை எதிர்க் கட்சித் தலைவர்கள் எவருமே கவனத்தில் எடுக்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகமும் தனது வேட்பாளரை அறிவித்தது. இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டும் தயாரான போதிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியும் பின்னடித்தன.
பெண்ணாகரம் இடைத் தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத் தேர்தல் தலைமை அதிகாரியும் கூட்டாகச் சதி செய்வதாக திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியது. பெண்ணாகரம் இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளரை அறிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற அறிவிப்புடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்த், பெண்ணாகரம் இடைத் தேர்தல் பற்றி எதுவுமே கூறவில்லை. தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றுக் கட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் கட்சி சகல தேர்தல்களிலும் பலத்த அடிவாங்கியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்பை மாற்றி அமைத்த விஜயகாந்தின் கட்சி இடைத் தேர்தலில் கட்டுப்பணம் இழந்ததனால் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
பெண்ணாகரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுப்பது மிகவும் சிரமமானது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும்பான்மை வாக்கை குறைப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முயலுமே தவிர வெற்றி பெறுவது இயலாதது. அரச பலம், பண பலம், ஊடக பலம் என்பனவற்றுடன் திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது. எதிர்க் கட்சிகளிடம் ஊடகம் இருக்கிறது. ஆனால் அவை பலமானதாக இல்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்ததை திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை. தமிழக அரசியல் நிலைவரம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் விலை போனது பற்றி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்திருப்பார்கள் என்ற சந்தேகம் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பனிப் போர் நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கப் போவதாக பரவலாக செய்தி அடிபடும் இவ்வேளையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பதிலளிக்கும்முகமாகவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்களை வலை வீசிப் பிடிக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணையப் போகிறது என்ற செய்தி பரவி வரும் வேளையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது.
பலவீனமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்தை காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்ற செய்தி பரவலாக வெளிவரும் வேளையில் அரசியல் ரீதியான எச்சரிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியங்களில் ஒன்றான சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ராமர் பாலத்தை சிதைக்க வேண்டும். ராமர் பாலம் சிதைக்கப்பட்டால் பாரதீய ஜனதாக் கட்சி தனது பிரசாரத்துக்கு அதனைப் பயன்படுத்தும்.
ராமர் பாலத்தை சிதைக்காமல் மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆலோசனையை இந்திய உயர் நீதிமன்றம் வழங்கும்படி கூறியுள்ளது. சேது சமுத்திரத் திட்டம் உத்தியோக பூர்வமாக அறிவிக்காமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
""சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் சும்மா இருக்காது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று திராவிட முன்னேற்றக் கழக செயற் குழுக் கூட்டத்தில் சீறி உள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்தச் சீறல் காங்கிரஸ் கட்சிக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே உள்ளது. கூட்டணியை விட்டு வெளியேறினால் மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதனையும் இந்தச் சீற்றத்தின் மூலம் முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தி உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற் குழுக் கூட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பு இல்லாமல் அவர்கள் கலந்து கொண்டிருக்க முடியாது. ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
கோவில்பட்டி இராதாகிருஷ்ணன், ஜெயங் கொண்டான் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இத்தகைய கோரிக்கைகள் விடுக்கப்பட முன்னரே தவறு செய்பவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றும் ஜெயலலிதா முடிவு எடுக்க தாமதப்படுத்துகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மேலும் பலர் தமது பக்கம் வரப் போவதாக திராவிட முன்னேற்றக் கழகம் கொடி காட்டி உள்ளது. இந்நிலையில் எஞ்சி இருக்கும் தனது சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 28/02/10

No comments: