Monday, March 1, 2010

அ.தி.மு.க.வைப் பிரிக்கும்தி.மு.க.வின் முயற்சி


திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறியது.
எனினும் ஜெயலலிதாவின் தலைமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலமுள்ள கட்சியாக்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பலர் வெளியேறியபோதும் வெளியேற்றப்பட்டபோதும் கட்சியை நல்லபடி வழி நடத்தினார் ஜெயலலிதா.
கருணாநிதிக்கே சவால் விட்டு அரசியலில் முன்னேறிய ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றுக்கூடாக மாறி விட்டதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்÷னற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி இருக்காது என்று மு.க. அழகிரி முழங்கியபோது அழகிரியின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு என எள்ளி நகையாடியவர்கள் இன்று அதிர்ச்சியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்குகின்றனர்.
பலமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனமாக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தீட்டிய திட்டம் மெதுமெதுவாக அரங்கேறி வருகிறது. ஆளும் கட்சியை எதிர்த்து போராட வேண்டிய ஜெயலலிதா தனது கட்சியில் உள்ளவர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தனது கட்சிக்காரர்களை உளவு பார்க்க வேண்டிய நிலையில் ஜெயலலிதா உள்ளார். எஞ்சி இருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி தாவாமல் தடுக்கும் காரியத்தில் கண்ணாக உள்ளார்.
எஸ்.வி. சேகர், வக்கீல் ஜோதி, செல்வகணபதி போன்றவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியதும் உஷாரடைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிலரின் மீது சந்தேகப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாறப் போகிறார்கள் என்ற சந்தேகிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் இரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன.
நீலகிரியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு வளையத்திற்குட்பட்ட 16 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அங்கு நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் செல்வதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சந்தேகப் பட்டியலில் சில சட்ட சபை உறுப்பினர்களும் அடக்கம். கழகத் தலைவர் தங்களை இனங் கண்டு கொண்டதால்தான் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சந்தேகப் பட்டியலில் இருந்தவர்களில் அனிதா ராதா கிருஷ்ணனும் ஒருவர். தான் இனம் காணப்பட்டதை அறிந்த அனிதா ராதாகிருஷ்ணன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்த அனிதா ராதாகிருஷ்ணனின் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சந்தேகப் பட்டியலால் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பை தாமதமாக உணர்ந்து கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களை அரவணைத்துச் செல்ல முடிவு செய்தது. அதிருப்தியாளர்களை கொடநாட்டுக்கு அழைத்த கட்சித் தலைமை, அவர்களுக்கு விருந்தளித்து தனது நிலைமையை விளக்கியது. அதிருப்தியாளர்களை ஒதுக்கினால் அவர்கள் ஆளும் தரப்பில் ஐக்கியமாகி விடுவார்கள் என்ற கவலையில் இருந்த ஜெயலலிதா சற்று ஆறுதலடைந்தார்.
சந்தேகப்பட்டியலில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக உட் கட்சித் தேர்தலில் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு யாரும் மாறமாட்டார்கள் என்று ஜெயலலிதா திருப்தியடைந்த நிலையில் கோவில் பட்டி ராதாகிருஷ்ணனும் ஜெயங் கொண்டான் ராஜேந்திரனும் ஜெயலலிதாவின் கணிப்பைப் பொய்யாக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது சோனியாகாந்தி மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைவரான ராகுல் காந்திக்கு கருணாநிதி மீது நம்பிக்கை இல்லை. தமிழகத்துக்கு அவர் விஜயம் செய்தபோது முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. இதனை எல்லாம் புரிந்து கொண்ட கருணாநிதி காங்கிரஸ் கட்சிக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நெருக்கடி கொடுக்கும் திட்டத்தை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டார் என்ற தகவல் அண்மையில் கசிந்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்தால் அல்லது காங்கிரஸ் கட்சி நெருக்கடி கொடுக்கும் வகையில் பேரம் பேசினால் அதனை முறியடிப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 25 சட்டமன்ற உறுப்பினர்களை தன்வசம் இழுக்கும் ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் பூர்த்தியாக்கி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பவர்களை தடுத்துநிறுத்த வேண்டும். அல்லது அவர்களை விட செல்வாக்கு மிகுந்தவர்களை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வேண்டும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்பட்ட நெருக்கடியை ஜெயலலிதா எப்படித் தீர்க்கப் போகிறார் என்பதை அறிவதற்கு இந்திய அரசியல்வாதிகள் ஆவலாக உள்ளனர்.
இதேவேளை, கொடுமைகளைக் கண்டு பொங்கி எழுந்து வில்லன் கூட்டத்தை கூண்டோடு அழிக்கும் தமிழக கதாநாயகர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது என்று அஜித் கொளுத்திப் போட்ட வெடி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் விழாக்களில் கதாநாயகர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மிரட்டும் பாணியில் அழைப்பு விடுக்கப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வரின் முன்னிலையிலேயே அஜித் கூறியமை முதல்வருக்கு வக்காலத்து வாங்கும் சினிமாப் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழக முதல்வராக யார் இருந்தாலும் அவர்களைப் பாராட்டும் வைபவத்தில் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்பாக மிரட்டும் பாணியில் அழைப்பு விடுவது வழமையானது. தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் ஒன்றாகக் கலந்துள்ளது. அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்றவர் சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்தவர்கள்.
சரத்குமார், நெப்போலியன், ராதாரவி, விஜயகாந்த், ராதிகா, எஸ்.எஸ். சந்திரன் போன்றவர்கள் அரசியலில் தீவிரமாக ஈடுபாடு காட்டுகிறார்கள். ரஜினி, விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வரப் போவதாக பரபரப்புக் காட்டுகிறார்கள். கமல், அஜித் போன்றவர்கள் அரசியல் வேண்டாம் என்று சினிமாவுக்கு தம்மை அர்ப்பணித்துள்ளனர்.
அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சினிமா கலைஞர்களை அரசியல் மேடை களில் வலுக்கட்டாயமாக ஏற்றுவது தவறு என்பதை துணிவுடன் அஜித் தெரிவித் துள்ளார். அஜித்தின் கருத்துடன் ஒத்துப் போகும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அஜித் தின் துணிச்சலான முடிவால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முதல்வர் கருணாநிதி மீதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு நெருக்கடி கொடுக் கக்கூடாது என்பதை முதல்வர் கருணாநிதியை திருப்திப்படுத்த நினைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/02/10

No comments: