Wednesday, March 10, 2010

காங்கிரஸை கைவிடதயாராகிறது தி.மு.க.



பென்னாகரம் இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த இடைத் தேர்தல் தைப்பொங்கல் காரணமாகப் பிற்போடப்பட்டது. பின்னர் முறையற்ற வகையில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியதால் இடைத் தேர்தல் திகதி அறிவிப்பது ஒத்தி வைக்கப்பட்டது.
பென்னாகரம் தொகுதி தனது வேட்பாளரை அறிவித்து தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியர் என்ற பலத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. ஆளும் கட்சியின் ஆதரவும் எதிர்க் கட்சியின் சகவாசமும் இன்றி பாட்டாளி மக்கள் கட்சித் தேர்தலில் கலந்து கொள்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிடக் கழகம், கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் பரிதாபகரமாகத் தோல்வி அடைந்தது. தனியே நின்று வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் தனி வழி சென்றுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய புள்ளிகளில் பலர் கட்சி தாவி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்த்த நிலையில் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். பென்னாகரம் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பலத்த அடியாக இருக்கும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பலர் எமது கட்சிக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகம் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ள நிலையில் தனது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளார் ஜெயலலிதா.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவி உள்ளனர். கட்சிக்குள் உள்ள அவர்களது பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களை கட்சியில் இருந்து இன்னமும் நீக்கவில்லை. அவர்களை கட்சியில் இருந்து நீக்கினால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர்கள் இழந்து விடுவார்கள். அப்போது காலியாகும் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும். இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற உண்மையைத் தெளிவாகத் தெரிந்துள்ள ஜெயலலிதா அவர்களை கட்சியில் இருந்து நீக்கவில்லை.
வெற்றி பெற முடியாது என்று தெரிந்து கொண்டும் இடைத் தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளார் விஜயகாந்த். பலமான கட்சிகளின் துணையுடன் விஜயகாந்தை எதிர்த்த டாக்டர் ராமதாஸ் தனி ஆளாக விஜயகாந்துடன் மோதவுள்ளார். வன்னியர் சமூகத்தவர்கள் அதிகமாக வாழும் பென்னாகரத்தில் டாக்டர் ராமதாஸின் கட்சியை விட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கி உள்ளார் விஜயகாந்த்.
பென்னாகரத்தில் நான்கு முனைப் போட்டி என்றாலும் எதிர்க் கட்சிகள் பலவீனமாக இருப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கையுடன் உள்ளது. இடதுசாரிகள் வழமை போல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிகளின் ஆதரவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்குப் போதுமானதல்ல. இடதுசாரிகளுக்கு வட மாநிலங்களில் இருக்கும் செல்வாக்கு தமிழகத்தில் இல்லை.
பென்னாகரம் இடைத் தேர்தலில் காங்கிரஸின் துணையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் களமிறங்குகிறது. காங்கிரஸின் துணை இல்லாமலே வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்காளியான காங்கிரஸ் கட்சி பார்வையாளராகவே உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான பனிப் போர் இப்போது சற்றுத் தீவிரமாகி உள்ளது. இதுவரை காலமும் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளை விமர்சிக்காத திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகிரங்க அறிக்கைகளை விடத் தொடங்கி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் கட்சி ஒதுக்கத் தொடங்கியது. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாததே பூசலின் ஆரம்பமாக அமைந்தது.
காங்கிரஸ் கட்சியை கைவிடுவதற்காக சேது சமுத்திரத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை அழிக்கக் கூடாது என்று போர்க் கொடி தூக்கி உள்ளது பாரதீய ஜனதாக் கட்சி. ராமர் பாலத்தில் கை வைத்தால் வட மாநிலங்களில் உள்ள வாக்கு வங்கி சரிந்து விடும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்கு தெரியும்.
மாற்று வழி மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்று நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. இதனால் மாற்று வழி மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.
வட மாநில வாக்காளர்களைப் பகைக்க விரும்பாத காரணத்தினால் மாற்று வழி மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மத்திய அரசு. தமிழக மக்களின் வாக்குகளை தக்கவைப்பதற்காக சேது சமுத்திரத் திட்டத்தில் உறுதியாக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மத்திய அரசின் நடவடிக்கைகளை இதுவரை விமர்சிக்காமல் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் விமர்சிக்கும் அதேவேளை "கையை' கைவிட மாட்டேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார். நாங்கள் கைவிட மாட்டோம். எங்களை மதிக்காவிட்டால் வெளியேறி விடுவோம் என்று மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
காங்கிரஸ் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்தால் வை.கோவின் நிலை என்னாகும் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் படுமோசமாக விமர்சித்த வை.கோ, காங்கிரஸுடன் இணைந்து செயற்பட்டார். பல தோல்விகளுக்கு மத்தியிலும் ஜெயலலிதாவை விட்டுப் பிரியாத வை.கோ, காங்கிரஸும் ஜெயலலிதாவும் இணைந்ததும் ஜெயலலிதாவை விட்டுப் பிரிந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்தால் ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் வெளியேறி முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து விடுவார்கள். இது முதல்வர் கருணாநிதிக்கு சாதக மாக அமைந்து விடும்.

வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 08/03/10

2 comments:

Subu said...

பென்னாகரம் தேர்தல் முடிவுகள்

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html

Subu said...

பென்னாகரம் தேர்தல் முடிவுகள்

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html