Sunday, May 30, 2010

நம்பிக்கை வைத்த வைகோவைபுறந்தள்ளினார் ஜெயலலிதா



இந்திய நாடாளுமன்ற மேல் சபையில் உள்ள தமிழகத்தின் ஆறு உறுப்பினர்களின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. காலி இடமாகும் ஆறு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜுன் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான மனுத் தாக்கல் ஜுன் 1 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்திய நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தலினால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.டி.பி. தினகரன், கே.மலைச்சாமி, எஸ். அன்பழகன், என்.ஆர். கோவிந்தராஜா, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாச்சியப்பன் ஆகிய நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர்கள் இம்மாதத்துடன் பதவி இழக்கின்றனர்.
தமிழக சட்ட சபை உறுப்பினர்களின் வாக்கு மூலமே நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது உறுதி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மூலம் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் துணையுடன் இரண்டாவது மேல் சபை உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.
வைகோ நாடாளுமன்றம் செல்வாரா என்ற விவாதம் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி தேர்தல்களில் படுதோல்வி அடைந்த போதும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள வைகோவுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இதேவேளை தமது உறுப்பினர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் இடதுசாரிகள் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாடாளுமன்ற, தமிழக சட்டமன்றத் தேர்தல்களின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்ததால் வெறுப்புற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் தோல்வி ஏற்பட்டாலும் ஜெயலலிதாவைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதியுடன் உள்ளார் வைகோ. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்களே ஜெயலலிதாவைக் கைவிட்டு தி.மு.க.வை பலப்படுத்தும் இவ்வேளையில் ஜெயலலிதாவைக் கைவிடாத வைகோவுக்கு ஜெயலலிதா கைம்மாறு செய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
நாடாளுமன்ற மேல் சபை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு ஆதரவு தரும்படி ஜெயலலிதா விடுத்த வேண்டுகோள் காரணமாக வைகோ, தா. பாண்டியன் ஆகியோரின் நாடாளுமன்றப் பிரவேசம் தடுக்கப்பட்டது. தமிழக அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதுவித மலர்ச்சியுமின்றி வாடிப் போய் நிற்கிறது.
திராவிட முன்னேற்றக் கூட்டணியில் வைகோ இருந்த போது, தான் விரும்பிய தொகுதி தனது கட்சிக்கு ஒதுக்கப்படாமையினால் ரோஷத்துடன் வெளியேறியவர் வைகோ. தேர்தல்களில் தோல்வி அடைந்ததனால் ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு ஒத்துப் போக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வைகோ நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் விருப்பம். வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பது அரசியல் தலைவர்களின் எதிர்பார்ப்பு. ஜெயலலிதாவின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெயலலிதாவைக் கைவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாக வேண்டும். ஆகையினால் வேறு மார்க்கம் இல்லாமையினாலேயே வைகோவும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கும் ஜெயலலிதாவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பது உறுதி. அதில் ஒன்றை வைகோவுக்கு விட்டுக் கொடுக்கும் தனது பெருந்தன்மையைக் காட்டி இருக்கலாம். வைகோ நாடாளுமன்றம் செல்வதை இடதுசாரிகளும் மனமொத்து விரும்பி இருப்பார்கள். ஜெயலலிதாவின் முடிவு எல்லா எதிர்பார்ப்புகளையும் புரட்டிப் போட்டு விட்டது.
ஜெயலலிதாவின் இந்த முடிவினால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலர் வெறுப்படைந்துள்ளனர். இத்தனை காலமும் நேர்மையான அரசியல் நடத்திய வைகோவை ஜெயலலிதா புறந்தள்ளியதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வைகோ அமைதியாக இருப்பதால் வைகோவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இரண்டு உறுப்பினர்கள் கூடுதலாகக் கிடைப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகம் உற்சாகத்தில் உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்று வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரை நிறுத்துவது என இன்னமும் முடிவு செய்யவில்லை. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகிய இருவரில் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமூச்சாக எதிர்க்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினராவதை திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை. ஆனால் இளங்கோவனுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி சார்பில் அன்புமணி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைவதற்கு காத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல்வர் கருணாநிதியின் கருணைக்காகக் காத்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் துடிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆகையினால் அன்புமணியை நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டிய நிலை உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கியான காடுவெட்டி குரு கருணாநிதியை மீண்டும் முதல்வராக்குவேன் என்று சபதமிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறுவதற்குப் பிரதான காரணியாக இருந்தார் காடுவெட்டி குரு. காடுவெட்டி குரு முதல்வர் கருணாநிதியைப் புகழ்ந்து பேசி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களிப்பவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதைத் தெரிந்து கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியைத் தன்னருகில் வைத்திருக்க விரும்புகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் மீண்டும் இணைக்க விரும்பும் முதல்வர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல கட்சிகள் இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் மட்டுமே பலமான கட்சிகள். தமிழக சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கேட்கக் கூடாது என்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் முதல்வர் கருணாநிதி.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். இவை இரண்டும் நடைபெறாது என்பது வெளிப்படை. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து தமிழகத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரிடம் உள்ளது.
மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சி போல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியில் அமைச்சரவைப் பொறுப்பை தமிழக காங்கிரஸுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமைக்கு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை காங்கிரஸ் கட்சி விடுத்தால் அதனை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொள்ள மாட்டார். ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் பட்சத்தில் ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு கொடுத்து ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்த முதல்வர் கருணாநிதி விரும்ப மாட்டார்.
நாடாளுமன்றத்துக்கு தமிழகத்தில் இருந்து மேல் சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இருக்கையில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜயகாந்த் அமைதியாக உள்ளார். அவருடைய ஒரே ஒரு வாக்கு எந்தக் கூட்டணிக்கும் தேவையற்ற ஒன்றாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்த் இன்று தேடுவாரின்றி இருக்கிறார்.
இதே நிலை நீடித்தால் விஜயகாந்த் மட்டும் அரசியலில் இருப்பார். அவருடைய கட்சி அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கப்பட்டு விடும்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 30/05.10

4 comments:

Robin said...

கூட்டணி வைப்பதற்கு முன்பு வை.கோ.விற்கு ஜெயலலிதாவை பற்றி ஒன்றும் தெரியாதா?

vijayan said...

வைகோவை டில்லிக்கு அனுப்பினால் ஆறு மணி நேரம் அர்த்தமில்லாமல் பேசுவார் என்று பயந்து தான் அம்மா அவரை அனுப்பவில்லை என்று போயஸ் தோட்டத்து பட்சி ஒன்று சொல்லுது.

வர்மா said...

Robin said...
கூட்டணி வைப்பதற்கு முன்பு வை.கோ.விற்கு ஜெயலலிதாவை பற்றி ஒன்றும் தெரியாதா

அரசியலில் இது சகஜமப்பா
அன்புடன்
வர்மா

வர்மா said...

vijayan said...
வைகோவை டில்லிக்கு அனுப்பினால் ஆறு மணி நேரம் அர்த்தமில்லாமல் பேசுவார் என்று பயந்து தான் அம்மா அவரை அனுப்பவில்லை என்று போயஸ் தோட்டத்து பட்சி ஒன்று சொல்லுது.

கட்சியைப்பற்றி அம்மாவுக்கு கவலையில்லை.
அன்புடன்
வர்மா