Sunday, June 6, 2010

உலகக்கிண்ணம்2010


தென் கொரியா/ஜப்பான்2002
தென் கொரியா/ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 17ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய பிரேஸில் சம்பியனானது. 1994ஆம் ஆண்டு சம்பியனான பிரேஸில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. 2002ஆம் ஆண்டு ஐந்தாவது தடவை சம்பியனாகி சாதனை படைத்தது. உலகக் கிண்ண உதைபந்தாட்டம் முதன் முதல் ஆசியக் கண்டத்தில் நடைபெற்றது. முதன் முதலாக இரண்டு நாடுகள் இணைந்து நடத்திய உலகக் கிண்ணப் போட்டி இதுவாகும். ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் சம்பியனான ஒரே ஒரு நாடு பிரேஸில்.
உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதி காண் போட்டியில் 199 நாடுகள் பங்குபற்றின. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 32 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தகுதியைப் பெற்றன. நெதர்லாந்து தகுதி பெறவில்லை. செனகல், தென்கொரியா, துருக்கி ஆகியன தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமரூன், நைஜீரியா, செனகல், தென் ஆபிரிக்கா, துனிஷியா, ஆசியக் கண்டத்தில் இருந்து சீனா, ஜப்பான், கொரியக் குடியரசு (தென்கொரியா), சவூதி அரேபியா, ஐரோப்பா கண்டத்தில் இருந்து பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், அயர்லாந்து குடியரசு, ரஷ்யா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், துருக்கி, வடமத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிக்கா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜன்ரீனா, பிரேஸில், ஈக்குவடோர், பரகுவே, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் ஜேர்மனி 80 என்ற கோல் கணக்கிலும் கொஸ்ரரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரேஸில் 52 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தின. 32 நாடுகளும் எட்டுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற தலா இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
இரண்டாவது சுற்றில் பரகுவேக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜேர்மனி, டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, சுவீடனுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செனகல், மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா, பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி, இத்தாலிக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தென் கொரியா ஆகியன காலிறுதியில் விளையாட தெரிவாகின. ஸ்பெயின், அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் பெனால்டி முறையில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய பிரேஸில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, செனகலுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி ஆகியன அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஸ்பெயின், தென்கொரியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் பெனால்டி மூலம் 53 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தென் கொரியா அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதிப் போட்டியில் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, துருக்கிக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த தென்கொரியா, துருக்கி ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி மூன்றாம் இடத்தையும் தோல்வியடைந்த தென்கொரியா நான்காம் இடத்தையும் பிடித்தன.
உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆறுமுறை விளையாடிய பிரேஸில் நான்கு முறை கிண்ணத்தை வென்றது. இரண்டு முறை தோல்வியடைந்தது. ஜேர்மனியும் ஆறு முறை உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடியது. ஜேர்மனி இரண்டு முறை கிண்ணத்தை வென்றது. நான்கு முறை தோல்வியடைந்தது.
பலம் வாய்ந்த பிரேஸில், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஐந்தாவது முறையும் சம்பியனானது. 64 போட்டிகளில் 161 கோல்கள் அடிக்கப்பட்டன. 2,705,197 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளை கண்டு ரசித்தனர். பிரேஸில் 18 கோல்களும், ஜேர்மனி 14 கோல்களும், ஸ்பெயின், துருக்கி ஆகியன தலா 10 கோல்களும் அடித்தன. அதிக தவறு செய்த நாடாக ஜேர்மனி விளங்குகிறது. இரண்டாவது இடத்தை தென் கொரியாவும் மூன்றாவது இடத்தை துருக்கியும் பிடித்தன. அதிக தவறு செய்த வீரராக பஸ்ரிக் (துருக்கி) முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை ஜிசுங் (தென்கொரியா), டவ் (அயர்லாந்துக் குடியரசு) ஆகியோர் பிடித்தனர்.
கோல்டன் ஷூ விருதுக்காக எட்டு கோல்கள் அடித்த ரொனால்டோ (பிரேஸில்), ஐந்து கோல்கள் அடித்த கொலோசி (ஜேர்மனி), ஐந்து கோல்கள் அடித்த ஹொங் மயுங்போ (தென் கொரியா) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. பிரேஸில் வீரர் ரொனால்டோ கோல்டன் ஷýவைப் பெற்றார். 1998ஆம் ஆண்டு கோல்டன் பந்து பெற்ற ரொனால்டோ இம்முறை கோல்டன் ஷýவைப் பெற்றார். கோல்டன் பந்து, கோல்டன் ஷý ஆகிய இரண்டையும் பெற்ற ஒரே ஒரு வீரர் ரொனால்டோ. கோல்டன் பந்து விருதுக்கு ஒலிவர்கான் (ஜேர்மனி), ரொனால்டோ (பிரேஸில்), ஹொங் மயுங்போ (தென்கொரியா) ஆகியோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டன. ஒலிவர்கானுக்கு கோல்டன் பந்து விருது வழங்கப்பட்டது. இளம் வீரருக்கான விருது டொனோ வன் (அமெரிக்கா) பெற்றார். சிறந்த கோல் காப்பாளராக ஜேர்மனி வீரர் ஒலிவர்கான் தெரிவு செய்யப்பட்டார். தவறு செய்யாது முறையாக விளையாடிய விருதை பெல்ஜியம் பெற்றுக் கொண்டது. ரசிகர்களை மகிழ்ச்சியளித்த நாடாக தென் கொரியா தெரிவானது.
ரொனால்டோவின் மகன் தொலைக்காட்சியில் ரொபேட்டோ கார்லோசைப் பார்த்து "டடி' என முத்தமிட்டதால் அரையிறுதிப்போட்டியின் பின்னர் ரொனால்டோ தனது தலை அலங்காரத்தை மாற்றி விட்டார். 2002ஆம் ஆண்டு ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியின் போது கைகளை மறைக்கும் பகுதி இல்லாத சீருடை அணிந்ததால் கமரூன் தடை செய்யப்பட்டது. போலந்துக்கு எதிரான போட்டியின்போது 20 செக்கன்களில் தென் கொரிய வீரர் காயமடைந்ததனால் சாடூரி எனும் வீரர் களமிறங்கினார். குறைந்த நேரத்தில் மாற்று வீரராக விளையாடிய பெருமை இவரைச் சாரும்.
பொரா மிலுடினொவிக் என்னும் பயிற்சியாளர் 1986ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையான உலகக் கிண்ணப் போட்டிகளின் போது மெக்ஸிக்கோ, கொஸ்ரரிக்கா, அமெரிக்கா, நைஜீரியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளுக்கும் பயிற்சியாளராக கடமையாற்றினார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

No comments: