Thursday, January 13, 2011

டிவிலியஸ், டுமினி அதிரடியில்வென்றது தென்னாபிரிக்க அணி

தென்னாபிரிக்காவுக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 11 என்ற வெற்றி அடிப்படையில் டெஸ்ட் தொடரைச் சமப்படுத்தியது. ரி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.
இந்தியா, தென்னாபிரிக்கா ஆகியவற்றுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை டேர்பனில் நடைபெற்றபோது டிவிலியர்ஸ் அம்லா ஆகியோரின் அதிரடித்துடுப்பாட்டத்தின் மூலம் தென் அபிரிக்க அணி 135 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
நாணயச் சூழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்மித்தும், அம்லாவும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். 11 ஓட்டங்கள் எடுத்த ஸ்மித் களத்தைவிட்டு வெளியேறினார். அடுத்து வந்த இக்ராம் ஐந்து ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அம்லாவுடன், டிவிலியர்ஸ் இணைந்தார்.
இந்த ஜோடியும் அதிகநேரம் நீடிக்கவில்லை. 36 பந்துகளில் எட்டு பவுன்டரிகள் அடங்கலாக 50 ஓவர்கள் எடுத்த அம்லா வெளியேறினார்.
மூன்று விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்கள் எடுத்திருந்தவேளை இணை ந்த டிவிலியஸ், டுமினி ஜோடி இந்தியப் பந்து வீச்சாளர்களைச் சோதித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 131 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
டிவிலியஸ் ஒரு நாள் அரங்கில் 25 ஆவது அரைச்சதம் அடித்தார்.அவருடன் இணைந்து அதிரடி காட்டிய டுமினி 10 ஆவது அரைச்சதத்தைக் கடந்தார். 76 ஓட்டங்களில் டிவிலியர்ஸ் ஆட்டமிழந்தார். 69 பந்துகளைச் சந்தித்த இவர் ஏழு பவுண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த மில்லர் ஒன்பது ஓட்டங்களை மட்டும் எடுத்தார். 89 பந்துக்களுக்கு முகம்கொடுத்து ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கலாக 73 ஓட்டங்கள் எடுத்து டுமினி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். போதா 23, ஸ்ரெயின் 7, பனெல் 21 ஓட்டங்கள் எடுத்தனர்.
தென்னாபிரிக்காவின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் ஏழு வீரர்கள் பந்து வீசினர். சஹிர்கான், முனாப்பட்டேல், ரோகித்சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
290 என்ற வெற்றி இலக்குடன் களமிளங்கிய இந்தியா 35.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
விஜய், டெண்டுல்கர் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா சர்ச்சையான தீர்ப்பினால் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த யுவராஜ் இரண்டு ஓட்டங்களை மட்டும் எடுத்தார். கோக்லி, டோனி ஜோடி நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடியது. 25 ஓட்டங்கள் எடுத்த டோனி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தபோது இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்தது. 54 ஓட்டங்கள் எடுத்த கோக்கிலியும் ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய ரெய்னா 32 ஓட்டங்களுடன் அடங்கினார்.
ஸ்ரெய்ன், மோர்கன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பன்னெல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 31 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிகோட்சபே ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் தென் ஆபிரிக்கா ஒரு வெற்றியைப் பெற்றது. இரண்டாவது போட்டி நாளை சனிக்கிழமை ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெறும்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 14/01/11

No comments: