Tuesday, January 18, 2011

கருணாநிதிக்கு எதிராகதேர்தலில் குதிக்கிறார் சீமான்

விஜயகாந்த், சீமான் ஆகிய இருவரினாலும் தமிழக அரசியல் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பார் என்று அவரது மனைவி பிரேமலதா கூறியதால் இந்திய அரசியல் வாதிகளின் பார்வை அனைத்தும் சேலத்தை நோக்கியே இருந்தன. ஆளும் கட்சிப் பிரமுகர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் விஜயகாந்தின் அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கினர். தமிழக சட்ட சபைக்கான தேர்தல் கூட்டணி பற்றி எதுவும் கூறாத விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வழமையான பல்லவியையே பாடினார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் மிகவும் நெருங்கி விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணையப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். விஜயகாந்தின் கூட்டணி பற்றிய அறிவிப்பு தாமதமாவதால் பலமான கூட்டணியுடன் இணைவதற்கு ஆர்வமாக இருக்கும் சிறிய கட்சிகள் முடிவு எடுக்க முடியாது தவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத்தின் கணிசமான வாக்கு வங்கியைப் பங்கு போட்டுள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி அடைந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பெருமளவு சரிவடையவில்லை. விஜயகாந்துடன் இணைந்தால் வாக்கு வங்கி இன்னமும் அதிகரிக்கும் என்று அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகம் நினைக்கிறது.
சேலத்தில் கூடிய பிரமாண்டமான மக்கள் கூட்டத்தைக் கண்டு சகல தரப்பினரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
விஜயகாந்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கும் ஜெயலலிதாவும் இக் கூட்டத்தைப் பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்திருப்பார். தனித்துத் தனித்து நின்றால் கருணாநிதியைத் தோற்கடிக்க முடியாது என்பதைக் காலம் கடந்து ஜெயலலிதாவும் கருணாநிதியும் உணர்ந்து கொண்டுள்ளனர். விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை ஒன்று இதனை சூசகமாகத் தெரிவித்துள்ளது.
சேலம் மாநாட்டை வாழ்த்தியும், கருணாநிதியின் அரசியலைப் பழித்தும் பத்திரிகையில் விளம்பரங்கள் பிரசுரமாகின. ஒரே ஒரு விளம்பரம் மட்டும் கொடநாடு ராணியே என்று ஆரம்பித்து, கொட நாட்டுக்கு விரட்டியடிக்கும் வரை தூங்காது எங்கள் விழி என்று இருந்தது. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் நெருங்கி வருவதாக செய்திகள் கசியும் வேளையில் ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்தின் ஆதரவாளர் விளம்பரம் வெளியிட்டதைப் பார்த்த விஜயகாந்தின் கண்கள் மேலும் சிவந்தன. கட்சித் தலைமை விசாரணை செய்ததில் அந்தப் பெயரில் உள்ள எவரும் அந்த விளம்பரத்தைக் கொடுக்கவில்லை. விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைவதை விரும்பாத சிலரின் சமயோசித விளம்பரம் என்ற உண்மை வெளியானது.
கொட நாட்டுக்கு விரட்டுவோம் என்ற விளம்பரத்துக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்று விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் ஜெயலலிதாவுடன் தான் நெருங்குவதாகச் சூட்சுமமாகத் தெரிவித்துள்ள அதேவேளை காங்கிரஸ் கட்சிக்கும் தனது முடிவை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் விஜயகாந்த். தமிழகத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் வெளியே வந்து விடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு பலம் வாய்ந்த எதிர்க்கட்சி இல்லை. கலைஞர் கருணாநிதியை தேர்தலில் தோல்வியடையச் செய்யும் பலம் வாய்ந்த வேட்பாளரை எதிர்க்கட்சிகள் இதுவரை நிறுத்தவில்லை. அண்ணாதுரை, காமராஜர், ஜெயலலிதா, வைகோ போன்ற தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள். போட்டியிட்ட தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற ஒரே ஒரு கட்சித் தலைவராகத் திகழ்கிறார் கலைஞர் கருணாநிதி. அவரைத் தேர்தலில் தோல்வியடையச் செய்ய களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குனர் சீமான்.
கலைஞரின் பிரசாரம் தமிழகத்துக்கு ஒரு வரப்பிரசாதம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளிப் பிரசாரம் செய்வதில் வல்லவர். தனது தொகுதியைப் பற்றிக் கவலைப்படாது எதிர்க்கட்சிகளின் செல்வாக்குள்ள தொகுதிகளில் கூடுதல் பிரசாரம் செய்வார். அவரை எதிர்ப்பதற்குப் பலம் வாய்ந்த ஒருவரை நிறுத்தினால் அவர் தொகுதியை விட்டு வெளியே செல்லத் தயங்குவார் என்ற எண்ணத்தில் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் இயக்குனர் சீமானைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சீமானும் வைகோவும் கலந்து பேசி முடிவெடுத்து விட்டார்கள் போல் தெரிகிறது. வைகோவுடனான சந்திப்பின் பின்னர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் பொது வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். தனது இயக்கத்தின் சார்பிலேயே போட்டியிடப் போவதாக சீமான் அறிவித்துள்ளார். ஜெயலலிதா, வைகோ, இடதுசாரித் தலைவர்கள், இதற்குப் பூரண ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த பாரதீய ஜனதாக் கட்சி இதுபற்றி இன்னமும் வாய் திறக்கவில்லை. சீமானுக்கு ஆதரவாக கூட்டத்துடன் இணைந்து செயற்பட பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகமா அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா என்ற முடிவு எடுக்காது மறைந்திருக்கும் டாக்டர் ராமதாஸ் இப்போதைக்கு முடிவு எதனையும் கூற மாட்டார். விஜயகாந்துடனான இணைப்பு இல்லையென்றால் போக்கிடம் எதுவும் இல்லாது திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. யாராலும் அசைக்க முடியாத கருணாநிதியை அசைத்துப் பார்க்கப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அரசியல் ஜாம்பவான்கள் எல்லோரையும் வீழ்த்தி வெற்றி வீரனாய் பவனி வரும் வேளையில் அவரை எதிர்த்து களமிறங்குகிறார் சீமான்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 16/01/11

No comments: