Tuesday, June 5, 2012

மத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க.


இந்திய மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. பெற்றோல், டீசல் ஆகியவற்றின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருளின் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் பங்காளியான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் போராட்டம் நடத்தியுள்ளது.
இதேவேளை தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம், பஸ் கட்டணம் என்பன உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது. மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
எரிபொருளின் விலை உலகச் சந்தையில் அதிகரித்துள்ளது. அதனால் தான் இந்த விலை உயர்வு என்று மத்திய அரசு காரணம் கூறினாலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எரிபொருள் விலை அதிகம் என்று ஸ்டாலின் ஆதாரங்களுடன் புட்டு வைக்கிறõர். மத்திய அரசுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு அதற்கு தகுந்த காரணமாக அமைந்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எரிபொருள் விலை உயர்வால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. மத்திய அரசின் ஆலோசனையின்படி வற் வரியை நீக்கியதால் எரிபொருள் விலை உயர்வினால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் பாதிப்பு எதுவும் இல்லை.
எரிபொருளுக்கான வற் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசு மாநில அரசைக் கேட்டது. மத்திய அரசில் குற்றங் காண சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் தமிழக அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்ற மாயையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மக்களின் மீதான சுமையைக் குறைப்பதற்குத் தமிழக அரசு விரும்பினால் வற் வரியைக் குறைத்து எரிபொருளின் விலையைச் சீராக்கலாம். அப்படிச் செய்தால் மத்திய அரசின் மீது தமிழக மக்கள் குற்றம் சுமத்தமாட்டார்கள் என்று தமிழக அரசுக்கு நன்கு தெரியும்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் ஜெயலலிதாவுக்கு எரிபொருள் விலை உயர்வு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது. மக்கள் மீது மத்திய அரசு விதித்த பெரும் சுமையாக எரிபொருள் விøல உயர்வு புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பிரதான பாத்திரத்தை வகிக்கப் போகிறது. புதுக்கோட்டை இடைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாக முன்னரே வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பணியை ஆரம்பித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தின் அரச பலத்தின் முன்னால் இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளன. படுதோல்வியானாலும் பரவாயில்லை ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஒரே ஒரு குறிக்கோள் என்ற எண்ணத்துடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலைச் சந்திக்கிறார் விஜயகாந்த். தமிழக அரச‌யந்திரம் அனைத்தும் புதுக்கோட்டையில் குவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இடைத் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. அதன் விருப்பத்துக்கு மதிப்பளிக்காது தனது கட்சி வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த். விஜயகாந்தின் வாதத்தினால் பொது வேட்பாளர் என்ற நிலை இல்லாமல் போய்விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் கண் அசைத்தால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் சூடு பிடிக்கும். விஜயகாந்தின் வேட்பாளருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளித்தால் இடைத் தேர்தல் பரபரப்பாக இருக்கும். வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட தேர்தலாகவே புதுக்கோட்டை இடைத் தேர்தல் நடைபெறப் போகிறது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சங்மாவின் பெயரை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரதான கட்சிகள் எவையும் சங்மாவை ஆதரிப்பதாக அறிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக சங்மா அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு இந்தியத் தேசியக் கட்சிகளை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புவதாகச் செய்தி கசிந்துள்ளது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வல்லமை உடைய காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் தடுமாறிக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் கருத்துகள் டில்லி அரசியலில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி விரும்பினாலும் அவரை ஜனாதிபதியாக்குவதற்கு காங்கிரஸ்கட்சி ஒத்துக் கொள்ளாது. ஆகையினால் கருணாநிதிக்கு எதிரானவர்களினால் பரப்பப்பட்ட வதந்தியாகவே இது உள்ளது.
இந்திய மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கருணாநிதிக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். மத்திய அரசு தவறு விடும்போது தட்டிக் கேட்பேன். மத்திய அரசில் இருந்து இப்போதைக்கு வெளியேறமாட்டேன் என்ற உத்தரவாதத்துடனேயே கருணõநிதி போராட்டம் நடத்துகிறார். இந்தப் போராட்டத்தின் காரணமாக மத்திய அரசு இறங்கி வரப் போவதில்லை. மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள எரிபொருள் விலை உயர்வு புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வெற்றியைக் கொடுக்கப்போகிறது.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு03/06/12

No comments: