வள்ளிப்பிள்ளையால் நம்பமுடியவில்லை இப்படியும் நடக்குமா எனத்தனக்குள்திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டாள்.ஐம்பதுவயது அனுபவத்தில் அவள் எத்தனையோபேருக்கு ஆலோசனைகளும்,அறிவுரைகளும் கூறியிருக்கிறாள்.
இன்று அவள்மீது கேலிப்பார்வைகளும்.கிண்டல்பேச்சுக்களும் வரப்போவதை எண்ணி மனதுக்குள் வெதும்பினாள்.சின்னஞ்சிறிசுகளுக்குமுன் எப்படிநிற்கப்போகிறேன்எனப்பொருமினாள்.பேரப்பிள்ளைகளைக்காணவேண்டிய வயதில் இப்படிஒரு நிலையா எனத்துவண்டாள்.
வள்ளிப்பிள்ளையின் கணவன்பொன்னம்பலம் மூண்று நாட்களாக வீட்டுக்குச்செல்லவில்லை.பகலில் பல இடங்களுக்குச்செல்லும் அவர் இரவில் கோயில் மடத்தில் தங்கினார். தனிமையில் இருக்கும்போது தற்கொலை எண்ணம் அவர் மனதில் சிறகடித்தது.
எதைச்சொல்வது?எப்படிச்சொல்வது? அறுபது வயதில் அப்பாவாகப்போவதைச் சந்தோசமாகச்சொல்லமுடியுமா?ஊர்ப்பெரியவர்களின் அழுத்தத்தால் பொன்னம்பலம் வீட்டுக்குச்சென்றார்.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்றபழமொழிகளை மனதில் இருத்தியதால் வள்ளிப்பிள்ளை அவரை ஏற்றுக்கொண்டாள்.
கோயில் சந்தை கலியாணவீடு செத்தவீடு போன்றநிகழ்ச்சிகள் எதற்கும் வள்ளிப்பிள்ளைபோவதில்லை. பொன்னம்பலம்தான் எங்கும் செல்வார். எவருடனும் அதிக மாப் பேசமாட்டார். அதிக நேரத்தை வீட்டிலேயே கழிப்பார்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மகன் என்னசொல்வானோ எனத்தெரியாது இருவரும் கலக்கமடைந்தனர். ஆனால் இதைப்பற்றித்தெரிந்த அவன் ஒரு வரியும் எழுதாமல் வழமை போன்றே கடிதம் எழுதினான்.
பத்திரிகை படித்துக்கொண்டிருந்த பொன்னம்பலத்துக்கு எதிரே யாரோ நிற்பதைப்போன்ற உணர்வு உண்டானதும் பத்திரிகையை விலத்திப்பார்த்தார்.அறிமுகமில்லாத நான்குபேர் அவர்முன் நின்றனர்.பொன்னம்பலம் கதைக்கமுன்னர் அவர்களில் ஒருவர் கதையைத்தொடங்கினார்.
"ஐயா இங்கே பொனனம்பலம் என்கிறது நீங்கள்தானே.?"
ஆமாம் என்பதுபோல பொன்னம்பலம் தலையாட்டினார்.
" டொக்டர் வடிவேல் உங்களைப்பற்றிச்சொன்னவர். அதுதான் உங்களைச்சந்திக்க வந்தனாங்கள்."
" உதிலை இருங்கோ. நீங்கள் ஆர்? என்னவிசயமாக என்னைச்சந்திக்கவந்தனியள்?"
"சக்தி வைத்தியசாலையைப்பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறியளே.?"
"ஓமோம் கொழும்பிலை பெரியவைத்தியசாலை அது."
" நாங்கள் அங்கை இருந்துதான் வந்திருக்கிறம்."
பொன்னம்பலம் எதுவும் புரியாமல் அவர்கள் நால்வரின் முகத்தையும் மாறிமாறிப்பார்த்தார். வள்ளிப்பிள்ளை குசினி அலுவலை இடையில் விட்டுவிட்டு அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைக்கேட்க வாசலில் நின்றாள்.
"அடுத்த ஆண்டு மிலேனியம் ஆண்டு."
தெரியும் என்பதுபோல் பொன்னம்பலம் தலையாட்டினார்.
"மிலேனியம் குழந்தை எங்கே பிறக்கும் எண்டு சொல்லமுடியாது. மிலேனியம் குழந்தை எங்கள் வைத்தியசாலையில் பிறக்கவேன்டும் என எங்கள் வைத்தியசாலை நிர்வாகம் விரும்பியது. அதனால் மிலேனியம் குழந்தையைப்பற்றியவிபரங்களைச்சேகரித்தோம்.டொக்டர் வடிவேல் உங்கள் விலாசத்தைத்தந்து மிலேனியம் குழந்தைக்கு அப்பாவாகும் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருப்பதாகச்சொன்னார். அடுத்தவாரம் இங்குவரும் எங்கள்வைத்தியசாலக்குழுவினர் உங்கள் மனைவியைப்பரிசோதிப்பார்கள்.ஒவ்வொருமாதமும் இங்குவந்து பரிசோதனை செய்வார்கள். மிலேனியம் குழந்தைக்கு நீங்கள் அப்பாவானால் நாங்களும் சந்தோசப்படுவோம்." எனச்சொல்லிவிட்டு நால்வரும்சென்றார்கள்.
அதிர்ச்சியடைந்த பொன்னம்பலமும் வள்ளிப்பிள்ளையும் அவர்கள் போவதைப்பார்த்துக்கொண்டிருந்தனர்.
1999 ஆம் ஆண்டு மார்கழிமாதம் 31 ஆம் திகதி இ ரவு 10 மணி சக்தி வைத்தியசாலையில் தொலக்காட்சிப்படப்பிடிப்பாளர்களும் வா னொலி பத்திரிகை நிருபர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்தனர்.
மிலேனியம் அப்பாவாகப்போகும் ஒருசிலர் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர்.பொன்னம்பலமும் அவர்களில் ஒருவராக ஒருகதிரையில் அமைதியாக இருந்தார்.தனிமையில்யோசித்துக்கொண்டிருந்த பொன்னம்பலம் "அப்பா" என்றகுரல் கேட்டு நிமிர்ந்தார். எதிரே அவருடைய மகன் நின்றார்.
"சாப்பிட்டீங்களா?" எனமகன் கேட்டதும் தன்னையும் அறியாமல் எழுந்து மகனைத்தடவியபடி "சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை.அடிக்கடி வயித்தாலைபோகுது" என்றார்.அவரை இருக்கும்படி கூறிவிட்டு அப்பால் சென்றான் மகன்.
மிலேனியம் ஆண்டு பிறக்க இன்னமும் அரை மணித்தியாலம் இருக்கிறது.வைத்தியசாலை புதியகளை கட்டியது. வைத்தியர்களும் ஊழியர்களும் சரித்திர முக்கியத்துவம் பெறப்போகும் நிகழ்வுக்காகத்தம்மைத்தயார்ப்படுத்தினர்.
விடைபெறப்போகும் நூற்றாண்டைப்பற்றிக்கவலைப்படாதுமலரப்போகும் புத்தாண்டில் பிறக்கப்போகும் குழந்தையைப்பற்றியே அங்குள் ள அனைவரும் சிந்தித்தார்கள்
.
அந்த ஹோலிலுள்ள ம ணிக்கூ டு புதிய ஆண்டு பிறக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருப்பதாகக்காட்டியது. ஏதாவது குடிக்கவேண்டும் என பொன்னம்பலத்தின் மனது கூறியது. வெளியேபோய் வருவதற்கிடையில் மிலேனியம் ஆண்டும் குழந்தையும் பிறந்து விடுமோ என்றபயத்தில் வெ ளியே செல்லாமல் காத்திருந்தார்.
இன்னும் ஐந்து நிமிடம் இருக்கு என யாரோ சொல்ல பொன்னம்பலத்தின் இதயம் வேகமாக அடித்தது. திடீரன அவரின் வயிற்றினுள் விநோதமான சத்தங்கள் உண்டாயின.வயிற்றைத்தடவியபடி அவர் ஹோலைவிட்டு வெளியேறினார்.
வயிறு உபாதையை முடித்துக்கொண்டு பொன்னம்பலம்வெளியேவந்தபோது மிலேனியம் குழந்தை பிறந்துவிட்டது. அவசரஅவசரமாக அவர் ஹோலுக்குள் நுழைந்தபோது டொக்டரைச்சுற்றி எல்லோரும் நின்றார்கள். சனத்தைத்தாண்டி டொக்டரின் அருகில் செல்லமுடியாத பொன்னம்பலம் ஒரு கதிரையில் ஏறி நின்று பார்த்தார்.
தொலைக்காட்சிக்கமராக்கள் டொக்டரைமொய்த்தன. பொன்னம்பலத்தின் மகனும் டொக்டரின் அருகில் நின்றார்.கமராவெளிச்சங்கள் மின்னல் போல் எங்கும் ஒளியைச்சிந்தின. டொக்டர் சொல்வது பொன்னம்பலத்துக்குக் கேட்கவில்லை. மிலேனியம் அப்பா யாரென அறிவதற்காக கதிரையில் நின்றவாறே உயர்ந்து உயர்ந்து பார்த்தார்.
டொக்டரின் அருகில் நின்ற பொன்னம்பலத்தின் மகன் தகப்பனைக்காட்டி ஏதோ சொன்னார். உடனே அனைவரும் பொன்னம்பலத்தை நோக்கிச்சென்றனர்.சந்தோசத்தில் பொன்னம்பலத்தின் கை கால் எல்லாம் நடுங்கின. மிலேனியம் ஆண்டையும் மிலேனியம் குழந்தையையும் வரவேற்கும் வெடிச்சத்தங்கள் அவருடைய காதைச்செவிடாக்கின.
மிலேனியம் அப்பா என்றசந்தோசத்தில் என்ன குழந்தை? வள்ளிப்பிள்ளை சுகமாகஇருக்கிறாளா? என்பதை எல்லாம் மறந்து சந்தோசக்கனவுகளில் மிதந்தார் பொன்னம்பலம்.தொலைக்காட்சிக்கமராக்களின் வெளிச்சம் அவரின் உடலை நெருப்புப்போல் சுட்டன. புகைப்படக்கமராவெளிச்சங்கள் அவர் கண்களுக்குஒளிக்கோலம்காட்டின.டொக்டர்பொன்னம்பலத்தின்கையைப்பிடித்துக்குலுக்கினார்.கைகளைத்தலைக்கு மேலே உயர்த்திக் கும்பிட்டார் பொன்னம்பலம்.
தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பொன்னம்பலத்தின் அருகில் சென்று "உங்கள் மகன் மிலேனியம் அப்பாகிவிட்டார்.உங்களை மிலேனியம் தாத்தா என அழைக்கலாமா?" எனக்கேட்டார்.
திடீரெனபொன்னம்பலம் மயங்கிவிழ கிழவன் சந்தோசத்திலை மயங்கிட்டுது என யாரோ சொல்வது அவர் காதுகளில் அரை குறையாகக்கேட்டது.
சூரன்.ஏ.ரவிவர்மா
தினக்குரல் 01/01/2000
No comments:
Post a Comment