புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் வேட்பாளர் தோல்வியடைந்தார். புதுக்கோட்டை இடைத் தேர்தல் திகதி அறிவிக்க முன்னரே வேட்பாளரை அறிவித்து இடைத் தேர்தலுக்கு தயாரானார் ஜெயலலிதா. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் கட்டுப்பணம் இழந்ததனால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சியினர் தயங்கினர். கருணாநிதி வை.கோ, ராமதாஸ் ஆகியோர் புதுக்கோட்டை இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். பிரதான எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பையும் மீறி 73.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கருணாநிதி, வை.கோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் கட்டளைக்கு அடிபணியாது புதுக்கோட்டை வாக்காளர்கள் தமது தொகுதியில் உறுப்பினரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மூன்று தலைவர்களும் இணைந்தால் ஜெயலலிதாவினால் வெற்றி பெற முடியாது.
இந்நிலையில் இவர்கள் மூவரும் தனித் தனியாக விடுத்த அறிவிப்பை அவர்களது கட்சித் தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. தலைவர்களின் கட்டளைக்கு மதிப்பளிக்காது தொண்டர்கள் வாக்களித்துள்ளனர்.
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றிபெற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கட்டளை நிறைவேற்றப்படவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்கு எதிரான மக்கள் உள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது.
தமிழக அமைச்சர்கள் பெரும் எடுப்பில் புதுக்கோட்டையில் முகாமிட்டு இரவு பகலாகப் பிரசாரம் செய்தும் பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியவில்லை. விஜயகாந்தின் வேட்பாளர் தோல்வியடைந்தாலும் ஜெயலலிதா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் அமைச்சர்கள் கதிகலங்கிப் போயுள்ளனர். புதுக்கோட்டை இடைத்தேர்தல் தோல்வியிலிருந்து விஜயகாந்த் புதிய எழுச்சி பெற்றுள்ளார்.
இந்திய ஜனாதிபதித் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களின் பெயரை அறிவித்து வெற்றி பெறும் நிலையில் காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சியாலும் பாரதீய ஜனதாக் கட்சியாலும் வெற்றிபெற முடியாது. பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்பதற்கு கருணாநிதி போன்ற கூட்டணித் தலைவர்கள் தயாராக இருக்கின்றார்கள். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும், திரிணõமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பனர்ஜியும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிரதமர் மன்மோகன்சிங் மூத்த இடதுசாரி தலைவரும் முன்னாள் சபாநாயகருமான சோம்னாத் சட்டர்ஜி ஆகிய மூவரில் ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று முலாயம் சிங் யாதவும் மம்தா பானர்ஜியும் கூறியுள்ளனர். அப்துல் கலாமுக்கும் சோனியாகாந்திக்கும் எட்டாப் பொருத்தம் என்பது உலகறிந்த ரகசியம். இந்திய ஜனாதிபதிப் பதவிக்கு கௌரவமளித்த அப்துல் கலாமை இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக்க சோனியா காந்தி விரும்பவில்லை. ஆகையினால் உலகமே மதித்த சிறப்பான ஒரு ஜனாதிபதியை இந்தியா இழந்தது. அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கினார் அப்துல் கலாம்.
மன்மோகன் சிங் பிரதமராக இருப்பதை மம்தாவும் முலாயம் சிங்யாதவும் விரும்பவில்லைபோல் தெரிகிறது. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மன்மோகன் ஜனாதிபதியானால் அடுத்த பிரதமர் யார் என்ற சிக்கல் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுவிடும். முழு நம்பிக்கைக்குரிய பாத்திரமான மன்மோகனை ஜனாதிபதியாக்க சோனியா காந்தி விரும்பமாட்டார். மூத்த அரசியல்வாதியான சோம்நாத் சட்டர்ஜிக்கும் மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி தலைவரான பிரகாஷ் காரத்துக்கும் இடையேயான மோதலை அடுத்து சோம்நாத் சட்டர்ஜி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரை வேட்பாளராக்கினால் இடதுசாரிகளின் வாக்குக் கிடைக்காது. மம்தாவின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி அடி பணியாது தான் விரும்பிய பிரணாப் முகர்ஜியைஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துகிறது. காங்கிரஸ் வேட்பாளருக்கு பாரதீய ஜனதாக் கட்சி ஆதரவளித்தால் ஜெயலலிதாவின் பிரதமர் கனவும் இந்திய ஜனாதிபதித்தேர்தலால் நொருங்கிப்போய்விடும்
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு17/06/12
No comments:
Post a Comment