திறனாய்வாளர், எழுத்தாளர், ஒலிபரப்பாளர், பத்திரிகையாளர் எனபல துறைகளில் ஆழமாகக் கால்பதித்துள்ள கே.எஸ். சிவகுமாரன் எழுதி பத்திரிகை, சஞ்சிகை ஆகியவற்றில் பிரசுரமான கட்டுரைகள் அடங்கிய 'கலை இலக்கியப் பார்வைகள்' எனும் நூல் மீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கவிதை, இலக்கியம், சிறுகதைகள், இசை, ஈழத்து ஆங்கில இலக்கியம், நவீன குறுங்காவியம், உருவக்கதைகள், பெண்ணியமும் தேசியமும், சமூக முன்னேற்றத்துக்கான பத்திரிகைகளின் பங்களிப்பு, சிறுவர் இலக்கியம், இலங்கைக்கான புதிய சிந்தனை ஆகியவை பற்றிய கே.எஸ். சிவகுமாரனின் ஆழமான பார்வையுடனான கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன.
இலங்கையில் ஒரு காலத்தில் பொப் இசைப் பாடல்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. வானொலியில் பொப்பாடல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேடைகளிலும் பொப்பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பொப் என்பதன் அர்த்தம் தெரியாத நிலையில்தான் அதனை எல்லோரும் ரசித்தார்கள். "பொப்" என்றால் பொப்பியூலர் என்ற ஆங்கிலப் பதத்தின் சுருக்கம். அதன் அர்த்தம் தெரியாமல்தான் நம்மவர்கள் அப்பெயரைக் கொடுத்ததாக விளக்குகிறார்.
பொப்பியூலர் என்றால் மக்களிடம் பிரபல்யமானது என்று பொருள். சினமாப் பாடல்களையும் பொப் பாடல்கள் என அழைக்கலாம் என்கிறார்.
ஈழத்து ஆங்கில இலக்கியம் தமிழர்முஸ்லிம்கள் பங்களிப்பு என்ற கட்டுரையில் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார் எஸ்.கே.கே.க்ரௌதர் ராஜாப் ரொப்டர். அழகு சுப்பரமணியம், ஸி.வி.வேலுப்பிள்ளை, கவிஞர் தம்பிமுத்து, வின்ஸண்ட் துரைராஜ், ஈ.ஸி.டி. கந்தப்பா, ஜீன் அரச நாயகம் யாம், செல்லத்துரை, அ.சிவானந் தன், ஜெகதீஸ்வரி கனகநாயகம், சுரேஷ் கனகராஜா ஆகியோர் பற்றிய சிறுகுறிப்புகளைத் தந்துள்ளார்.
இப்பங்களிப்பைச் செய்தவர்களுள் பலர் கிறிஸ்தவர்களாகவும், முழுத்தமிழர் அல்லாத வர்களாகவும் (அதாவது இவர்கள் கலப்புத் திருமணம் காரணமாகப் பிறந்தவர்கள் எனலாம்) இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
புனைகதை இலக்கியத்தில் முக்கியமான வடிவமாக உருவகக்கதை உள்ளது. எம்.ஜி.எம். முஸம்மிலின் 'பரதிபலன்' என்ற உருவகக் கதைத் தொகுப்பு பற்றிய கே.எஸ். சிவகுமாரனின் பார்வையின் மூலம் உருவகக்கதை பற்றிய பல தகவல்கள் கிடைக்கின்றன. உருவகக்கதையின் மூலம் வாசகர்களின் மனதில் இடம்பிடித்த வி.எஸ்.காண்டேகர் சுவோ எஸ். பொ பற்றியும் தனது பார்வையைப் பதித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் சிவகுருநாதனைக் கௌரவித்து திருகோணமலையில் நடந்த விழாவில் கே.எஸ்.சிவகுமாரன் ஆற்றிய சிறப்புரை 'முன்னேற்றத்தில் பங்களிப்பு' எனும் தலைப்பல் தொகுக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை நிறுவனத்தின் பணிகளைப் பட்டியலிட்டு ஒரு செய்தி எத்தனைபேரின் மேற்பார்வையின் பின்னர் பரசுரமாகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பத்திரிகைகளின் பக்கச்சார்புத் தன்மைகளால் உண்மையான நிலைமையை வாசகர்கள் அறியமுடியாத நிலைமை உள்ளது. இது பக்கச்சார்பானது. சிங்கள, ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்தும் இதனையே தான் செய்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறார்.
சாந்தராஜ், நீர்கொழும்பு, ந.தருமலிங்கம், அகளங்கன், புலோலியூர், ந.இரத்தின வேலோன், சி.சிவாணி, சி.எஸ்.எம்.மன்ஸூர் அன்புமுகைதீன், தில்லைச்சிவன், ராஜேஸ்வரி பாலசுப்பரமணியம், எஸ் அகத்தியன், மாத்த ஹஸீனா, ஓ.கே.குணநாதன், அமரர் இரா.சிவலிங்கம், அமரர் சோம சுந்தரம் ஆகியோரைப் பற்றிய பதிவுகளும் இந்நூலில் உள்ளன.
சிந்தாமணி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற 'ஷாமிலாவின் இதயராகம்' பற்றிய விரிவான பார்வையைத் தந்துள்ளார்.
ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வை மேற்கொள்பவர்களுக்கு உதவும் பொக்கிஷமாகக் கலை இலக்கியப் பார்வைகள் எனும் நூல் உள்ளது.
நூல் :! கலை இலக்கியப் பார்வைகள்
ஆசிரியர் :! கே.எஸ். சிவகுமாரன்
வெளியீடு :! மீரா பதிப்பகம்
விலை:!ரூ. 250
சூரன்
சுடர் ஒளி 16/03/14
No comments:
Post a Comment