Friday, March 7, 2014

இரும்புக் கதவுக்குள் இருந்து....

சிறைத்தண்டனை  அனுபவிக்கும் அனைவருமே குற்றவாளிகள் அல்லர். சந்தர்ப்ப சாட்சியங்களால் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பலர் உலகெங்கும்  சிறைகளில் வாடுகின்றனர். உலகத்தலைவர்களில் பலர் சிறைக்குள் இருந்தே பல சிந்தனை களை வெளிக்கொணர்ந்தனர். அவற்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் மிகப் பிரபல்ய மானவை. 

இரும்புக் கதவுக்குள் இருந்து.... எனும் கவிதைத் தொகுப்பைத் தந்துள்ள விவேகானந்தனூர் சதீஷ் அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவிக்கிறார்.  சிறைத்தண்டனை  அனுபவிக்கும்போது கூட சற்றும் தளர்வு பெறாது கவிதைகள் மூலம் தன் கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்கிறார். பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும்  பிரசுரமான கவிதைகளை இரும்புக் கதவுக்குள் இருந்து.... எனும் தலைப்பில் தந்துள்ளார்.

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் உணர்வுகளைப் பிழிந்து பிரசவமாகியுள்ளன. மனிதம், இரக்கம், ஏக்கம், எதிர்பார்ப்பு, விடுதலை, சுதந்திரம், தியாகம், பரிவு, துயரம், அலைச்சல் என்பவற்றைத் தனக்கே உரிய நெகிழ்ச்சியுடன் தந்துள்ளார். இத் தொகுப்பில் 66 கவிதைகள்  உள்ளன. செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், க.சத்தியசீலன், பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆகியோரின் ஆசியுரை, வாழ்த்துரை, அணிந் துரையுடன் சக கைதியான  மாநகர சபை உறுப்பனர் மு.கோமகன் படைப்புலகில் பார்போற்ற என கவிதையால் வாழ்த்தியுள்ளார்.இறைவணக்கமாக  காத்தருள்வாய் கிளிநகர் கந்தா என முருகனை விழித்து கவிதைகளை ஆரம்பக்கிறார். முதலாவது கவிதை விடிவு என்ற தலைப்பில் உள்ளது.

என்தன் அம்மாவுக்கு
சின்ன மகன் வரையும் - சில
சிந்தனை சிதறல்கள் என ஆரம்பித்து
எந்தத் துன்பமும்
முடியாமல் போனதில்லை
எந்த வெள்ளமும் 
வடியாமல் நின்றதில்லை
சதிராடிய நம் வாழ்வில்
சிறைவாழ்வு குறுக்கிட்டு
திசை மாறிய புயலொரு நாள்
நிச்சயம் தணியுமம்மா
கிழக்கு மொருநாள்
சிவக்குமம்மா
எனக்குமொரு நான்  விடிவு
கிடைக்குமம்மா

என தாய்க்கு ஆறுதல்  கூறுவது போல் முடித்துள்ளார். சிறையில் இருப்பவர்களுக்குத்தான் வெளியில்  உள்ளவர்கள் ஆறுதல் கூறுவார்கள். இங்கே சிறையிலிருக்கும் சின்ன மகன் தாய்க்கு ஆறுதல் கூறுகிறான்.
அனல் மழை என்ற தலைப்பிலான கவிதையில் ,

நேற்று எரித்துப் போன
ஆயிரமாயிரம் அனல் குண்டுகளில்
அகோரத்தினத்தில்
உற்சாகம் மறைவதற்குள்
ஆழப் பொழியும் அடை மழையே
நில்

என்று ஆணையிடுகிறார். குண்டுகள் அனைத்தையும் அனல் குண்டுகள் என அதன் தாக்கத்தை உணர்த்துகிறார்.
உணர்வூட்டிய வன்னி மண் எனும் கவிதையின் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார் விவேகானந்தனூர் சதீஷ். தான் பிறந்து வளர்ந்த ஊர்,  அடைக்கலம் தந்த ஊர்,  மனைவியைத் தந்த  கிராமம்,  மகள் பற்றிய விவரங்களை கவிதையாய் வடித்துள்ளார்.

வெள்ளை உடைதரித்து
வேதனையில் வாழ்கிறேன்
சோதனைகள் வந்தபோதும்
சோராத எந்தன் மனம்
என்னினத்தின்
கலாசாரம், பண்பாடு
கலையப்பட்டதைக் கண்டபோது
வெளிவராத கண்ணீருடன்
வெந்து போனது

சிறைக்குள் இருந்தபோதும் வெளியே நடக்கும் கலாசாரச் சீரழிவை வேதனை என்ற கவிதையின் மூலம் வேதனையுடன் வெளிப்படுத்துகிறார்.
துப்பாக்கி என்ற தலைப்புடன் ஒரு கவிதை எதிர்பார்ப்புடன் சென்றபோது இளைஞர்களுக்கு  அறிவூட்டும் அருமையான ஒரு கவிதை என்பது புலனாகிறது. 

துப்பாக்கியால்
துயரப்பட்டு
துர்ப்பாக்கிய நிலையில்
தமிழனெதிர்காலம்
இளையதளபதியின்
துப்பாக்கியால்  இன்று
குடாநாட்டு இளசுகள்
கொண்டாட்டம்
பெற்றோர் வீட்டில்
திண்டாட்டம்
மூத்த தளபதி
முளைத்த
ஊரில்
இளைய தளபதிக்கு
இளைஞர் சங்கம்
என்ற அக்கவிதை பல

 அசிங்கங்களை புட்டு வைக்கிறது.  கட்அவுட் பாலாபிஷேகம் என்பவற்றையும் கவிஞர் விட்டு வைக்கவில்லை.
கையடக்கக்காதல் சிக்கென மனதில்  ஒட்டிக்கொள்ளும் தலைப்புடனான கவிதையின் மூலம் கைத்தொலைபேசிக் காதலைக் தருதுகிறார்.

வார இதழில்
நல்ல வரன்தேடி
மணமகன் பதவிக்கு
விளம்பரமிட்டான்
அவளோ
கட்டிய வாழ்வுக்கு 
கட்டுண்டு
இளைஞனொருவன் மனைவியாய்
இல்லறம் புரிகிறாள்.

என அற்புதமாக முடிக்கிறார்.
சிறைக்குள் சென்று நீண்ட நாட்களாகி விட்டது. உற்றார், உறவினர், நண்பர்கள்  ஆர்வமாக விசாரிப்பார்கள். இவர்களைத் தவிர,  என்னை வேறு யார் விசாரிப்பார்கள் என சிந்தித்த கவிஞரின் மனதில்  பிறந்த கவிதையை கேட்கவில்லையா? என்ற தலைப்பல் தந்துள்ளார். 

கால் நீட்டியமர்ந்து- கொஞ்சம்
சத்தமாய் கொட்டாவி விட்டு
சோம்பல் முறித்த - என்
சொந்த வீடு கேட்கவில்லையா?
நான் எங்கே என்று?
கட்டுடைத்த கட்டுக்கிணறு, 
சிறுநீர் கழிக்கப்போகும் கிழுவைவேலியோரம், 
வீட்டுக்கோடியுமே
 என்னைக் கேட்க வில்லையா 
என ஏக்கத்துடன் கேட்ட கவிஞர்.
அயல் வீட்டு 
உதயா, வசந்தி, சாந்தி
அன்ரியவையும்
உண்மையா கேட்கவில்லையா?
ஓ...
மறுக்கப்பட்ட உரிமைபோல்
இவையளும் - என்னை
மறந்துவிட்டனரா

என முத்தாப்பு வைக்கிறார். விவேகானந் தனூர் சதீஷ்.

ஆண்டுகள் பல கடந்தன
அரசுகள்  சில மாறின . ஆனால்
மாறவில்லை இன அழிப்பு மட்டும்
  பேச்சுக்கள் பல மேசைகளில்
வட்ட மேசை சந்திப்பு
நீட்டுமேசை மாநாடு
ஆகியதொன்று மில்லை, ஆனால்
கடலுணவு பொரியலும்
போத்தல் தண்ணீரும்
தீர்ந்ததுதான் மிச்சம்


 சமாதானப்பேச்சு  எப்படி நடந்து முடிந்தது என்பதை பேச்சு என்ற இக்கவிதை  துலாம் பரமாக வெளிப்படுத்துகிறது.
புது+இன+பத்திரிகை தலைப்பே வித்தியாசமாக உள்ளது. பத்திரிகைகளின் திகிடு தத்தங்களை வருத்தத்துடன் வெளிப் படுத்துகிறார்.   பாதிப் பக்கததில் பாலியல் வல்லுறவு, இரண்டாம் பக்கத்தில் அரசியல் அரியண்டங் கள், மூன்றாம் பக்கத்தில்  முடிந்துபோன முள்ளிவாய்க்காலின் எச்சங்கள், நான்காம் பக்கத்தில் இலங்கையில் ஈழத்தமிழரும் நீண்ட கட்டுரையும், ஐந்தாம் பக்கத்தில்  கடத்தல், ஆறாம் பக்கம் விபத்து, ஏழாம் பக்கம் சினிமா, எட்டாம் பக்கம் குட்டிக்கதை, குடும்பத்தகராறு, ஒன்பதாம் பக்கம் விளம் பரம், பத்தாம் பக்கம் விளையாட்டு என ஒரு பத்திரிகையில் வரும் செய்திகள் அனைத்தை யும் பட்டியலிட்டுள்ளார்.

நான்கு வழக்குகளுக்காக சிறையில் இருப்பவனுக்கு ஐந்தாவது வழக்காக மனைவியிடமிருந்து விவாகரத்து வருகின்ற தென்பதை நேசிப்பு என்ற கவிதை சொல்கிறது.  இடம்பெயர்வு என்ற கவிதையின் மூலம் வன்னி மக்கள் இறுதி யுத்தத்தில் பட்ட அவஸ்தையையும் மெனிக்பாம் முகாம் முடக்கத்தையும் விவரித்துள்ளார்.
காதலர் தினம், கிறிஸ்மஸ், தைத்திரு நாள் அனைத்துலக  பெண்கள் தினம், கிளிநொச்சி வைத்தியசாலை, வடஇந்து மகளிர்  கல்லூரி, உலக உணவு தினம், போதைப்பொருள் பாவனை, புகைத்தல், ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி, மருத்து வர் த.சத்தியமூர்த்தி போன்ற சிறப்புக் கவிதைகள் பலவற்றை தனது புதுமை ன பாணியில் தந்துள்ளார்.
புகை வேண்டாம், காதலர் தினம் ஆகியன பரிசுபெற்ற கவிதைகள். இறைவ னின் கொடை (உலகமாற்றுத் திறனாளி கள் தினம்) சிறையிலிருந்து அம்மாவுக்கு (கிறிஸ்மஸ் தின கவிதைப் போட்டி) ஆகியன சிறப்புச்சான்றிதழ் பெற்ற கவிதைகள்.

இனங்கள் இணைந்து
மனங்கள் மகிழ
கைகோப்போம்
சமயங்கள் மதிப்போம்
ஒற்றுமை, சமத்துவம்
ஓங்கிடச் செய்வோம் 
இனபேதம்
இல்லா தொழிப்போம் 
சாக்கடை அரசியலில்
சீர்கெட்டு நிற்கும்
தாயகத்தை மீட்போம்.
கைகோப்போம் 
என்ற தலைப்பிலான கவிதையுடன் நிறைவடைகிறது இக் கவிதைத் தொகுப்பு.
இத்தொகுதியிலுள்ள கவிதைகள் அனைத்தும் வலியுடன் எழுதப்பட்டவை. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கமுடியாத ஒரு சிறைக்கைதியின் மனவடுக்கள் இவை. இந்தப் புறா வெளியே வந்தால் இலக்கிய உலகம் உவகையுறும்.

சூரன்

சுடர் ஒளி 02/03/14

No comments: