Sunday, March 9, 2014

வதைபடுகாலப் பிரகடனம்

அவஸ்தைகளின் உச்சம்
நிறைந்து போன
ஒரு கொடுங்காலத்தின்
விம்பத்தை
இனம் புரியாத ஒரு காற்றின்
உஷ்ணம் உணர்த்தத் தொடங்கியது .

யார் யாராலோ
எங்களுக்கென மாத்திரம்
பிரகடனப்படுத்தப் பட்ட
வதை படுகாலப் பிரகடனத்தில்
பிள்ளைகளை தொலைத்தவர்களின்
மூச்சுக் காற்று
சூறாவளியாய் வார்த்தைக்குள்
அடங்காமல் திமிறத் தொடங்கிற்று .

துயர் நிறை அரங்காடல்
நிறைந்து போன
சாட்சிய வெளியில்
கண்ணீரும் ,ஓலங்களும் மாத்திரமே
அஞ்சாத சாட்சியங்களாய்
விகாரமாய் எழுந்து நிற்கின்றன .

அந்தரத்தில் உலவும்
தொலைத்தலின் வலி
முற்றுபெறாத முடிவிலியாய்
ஊசலாடிக் கொண்டிருந்தது .

இழத்தலின் வலி
சாதாரணமாகிப் போன
எங்கள் நிலத்தில்
தொலைத்தலின் வலி
கொடிதிலும் கொடிதென
வதை படு காலப் பிரகடன
உச்ச வலி குறித்து
தலை அடித்து புலம்பிக் கொண்டிருந்தாள்
மூன்று பிள்ளைகளை தொலைத்த தாயொருத்தி .

மௌனங்களை மொழிபெயர்க்க
முடியாதவர்கள்
உண்மைக் கதறல்களை
மாறுதல்கலாய் மொழிபெயர்த்தார்கள் .

கண்ணீரினால் நனைந்து
அனல் காற்றாய் நிறைந்து
ஓலங்களின் வெளியே
உருப்பெறத் தொடங்கிற்று
இந்த
வதை படு காலப் பிரகடனம்

- வெற்றி துஷ்யந்தன்

சுடர் ஒளி 02/03/14

No comments: