Wednesday, March 15, 2017

விஷப்பரீட்சைக்குத் தயாராகும் ஆர்.கே நகர்


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெயலலிதாவை இரண்டுமுறை முதலமைச்சராக்கிய ஆர்.கே நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஜெயலலிதா மரணமானதால்  அத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 12    ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14  ஆம்திகதி வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.   ஏப்ரல் மாதம் 15  ஆம் திகதி  தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்பதால் தமிழக மக்களின் அரசியல் அபிலாஷை என்னவென்று அன்று தெரிந்துவிடும்.


எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க  முடியாத இரும்புக்கோட்டையாகக் கட்டி எழுப்பியவர் ஜெயலலிதா.ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிரிந்துள்ளது.சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்துக்கு கும்பிடுபோடும் அணி. ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை  கேட்கும் பன்னீர் தலைமையிலான அணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகி உள்ளது. சசிகலாவின் தலைமையை பன்னீர்ச்செல்வம் ஏற்றபோது கடுப்பாகிய ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை ஆதரித்தனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் சசிகலாவின் பின்னால் நிற்கின்றனர். 11சட்டமன்ற உறுப்பினர்களும்   12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பன்னீரை ஆதரிக்கின்றனர். எடப்பாடியை முதலமைச்சராக்குவதற்கு ஆதரவளித்தவர்கள் தொகுதிப்பக்கம் போகமுடியாது தவிக்கின்றனர் .ஜெயலலிதாவால்  விரட்டப்பட்ட தினகரனை மன்னித்த சசிகலா அவருக்கு துணைப் பொருளாளர் பதவியைக்கொடுத்துள்ளர். ஜெயலலிதா மன்னிக்காதவரை சசிகலா எப்படி மன்னிக்க முடியும் என்ற தொண்டர்களின் கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை.ஜெயலலிதாவுடன் இருந்தபடியால் சசிகலாவை ஆதரித்தவர்கள்  தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் மூன்றாகப் பிரிந்துள்ளன.. இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தனி ஒருவராகப் பரிணமித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பாதையில் பயணம் செய்யப்போவதாக மூன்று அணிகளும் பரப்புரைசெய்கின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிக்கும் தீபாவால் வெற்றி பெறமுடியாது. சசிகலாவின் அணிக்கும் பன்னீரின் தலைமையிலான அணிக்கும் இடையிலான  போட்டியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்து விட்டனர்.


அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எம்.ஜி.ஆர் இறந்த போது ஜானகி தலைமையிலும் ஜெயலலிதாவின் தலைமையிலும்  கட்சி இரண்டானபோது இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. அதே போன்ற ஒரு நிலைமை  ஜெயலலிதா இறந்த பின்னரும் ஏற்பட்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என பன்னீரின்  தலைமையிலான அணி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளது. அப்புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவிலேதான் இரட்டை இலையின் எதிர்காலம் தங்கி உள்ளது.

மூன்று வருடங்களில் மூன்றாவது தேர்தலுக்கு முகம் கொடுக்க உள்ள ஆர்.கே நகர்  ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக இருந்தது. பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக மாறியது.,2015 ஆம் ஆண்டு இத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா  160000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  2016  ஆம் ஆண்டு 97218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அத் தொகுதியில் குறைந்துள்ளதையே இது காட்டுகின்றது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பு இன்று குலைந்துள்ளதால் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

ஆர். கே நகரில் வெற்றி பெற்று தனது  தலைமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் திராவிட முன்னேற்றக்கழக செயல் தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பு அலையை தனக்கு சாதகமாகக்கும் வகையில் காய்களை நகர்த்தி வெற்றி பெற்றால்தான் அவருடைய தலைமையின் மதிப்பு உயரும். ஜெயலலிதா இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக்  கழக ஆட்சியின் அலங்கோலம், விவசாயிகளின் பிரச்சினை,குடிநீர் தட்டுப்பாடு,ரேசன் கடையில்  பொருட்கள் இல்லாமை, எரிபொருள் விலை அதிகரிப்பு குடிநீர் தட்டுப்பாடு போன்ற பல அஸ்திரங்கள் ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக உள்ளன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி தகுதியான வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும். காங்கிரஸ்,இந்தியமுஸ்லீம் லீக், கொங்கு மக்கள் பேரவை ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

சீமான், ராமதாஸ் ஆகியோர் தமது கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளனர். பாரதீய ஜனதா, மக்கள் நலக் கூட்டணி ஆகியனவும் களத்தில்  இறங்கத் தயாராக இருக்கின்றன. விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டார். இடைத் தேர்தலில் நம்பிக்கை இல்லை என ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்துள்ளார்..  ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சார்பாகக் குரல் கொடுத்த வைகோ அமைதியாக இருக்கிறார். சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆலோசனையின் படி இயங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசை தமிழக மக்கள் விரும்பவில்லை. இதனை உணர்ந்த தமிழக அரசியல்வாதிகள் பொது வேட்பாளரைக் களத்தில் நிறுத்தி தமது ஒட்டு மொத்த எதிர்ப்பை வெளியிட வேண்டும்.ஆனால்,,அப்படிஒரு  நிலைமை அங்கே இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளைச் சிதறடிப்பதற்கு  சகல கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. ..

ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்கும் ஒற்றைவரிக் கோரிக்கையுடன் பன்னீர்ச்செல்வத்தின் அணி களத்தில் இறங்க உள்ளது. சசிகலாவின் குடும்ப ஆதிக்கம், கூவத்தூர் கூத்து, தினகரனின் அடாவடி போன்றவை பன்னீரின் அணிக்கு பக்க பலமாக  உள்ளன.

ஆர்.கே  நகரில்  262721   வாக்காளர்கள் உள்ளனர்.   134307   பெண்  128305 ஆண்   109 முன்றாம் பாலின வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமாக  உள்ளனர். பெண்களின் ஆதரவினால் தான் ஜெயலலிதாவை அசைத்துப் பார்க்க முடியாதிருந்தது. பெண்களைக் குறிவைத்து அவர் அறிவித்த திட்டங்கள் இலவசங்கள்  போன்றவற்றால் வசதி இல்லாத பெண்களின் மனதில் ஜெயலலிதா இருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண் வாக்காளர்கள் பன்னீரையா சசிகலாவையா ஆதரிப்பார்கள் என்பதை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.தீபாவின் உருவத்தில் ஜெயலலிதாவை காண்பவர்கள் இருப்பதனால்  தீபாவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இடைத் தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு ஆதரவான தேர்தல் என்பது எழுதப்படத விதி. சுமார் பன்னிரண்டு வருடங்களின் பின்னர் ஆளும் கட்சிக்கு சவால் விடும் தேர்தலாக ஆர்.கே .நகர் இடைத் தேர்தல் அமைய உள்ளது.   வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்கு பல  முன்னேற்படுகளைச் செய்தாலும் முற்று முழுதாக அதைத் தடுக்க முடியாதுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது திருமங்கல இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியை திருமங்கலம் பார்முலா என்பார்கள். திருமங்கல வெற்றிக்குப் பின்னர்  அழகிரியின் பெயர் பிரபலமானது. அழகிரியால் ஒரேஒரு சட்டமன்ற உறுப்பினரைத்தான் பெற முடிந்தது.  சசிகலா தனது கைப்பிடிக்குள் 122  சட்ட மன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்.

ஆர்.கே. நகரில் தோல்வியடைந்தாலும் அதிக வாக்குகள் பெற வேண்டிய கட்டாயத்தில் பன்னீரின் அணியும் சசிகலாவின் அணியும் இருக்கின்றன.  ஜனநாயகத்தின் பண்புகள் அனைத்தும் உடைக்கப்பட்டு பணநாயகம் தலை எடுத்துள்ள  நிலையில் ஆர்.கே. நகர் வாக்களர்களின் முடிவிலே தான்  தமிழக அரசியலின் எதிர்காலம் தங்கி உள்ளது.
வர்மா

No comments: