Saturday, July 13, 2019

உலகக்கிண்ணக்கு முதல் முத்தம் கொடுப்பது யார்?


உலகக்கிண்ண கிறிக்கெற் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரை இறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்தும், இந்தியாவுடனான போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்தும்  இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டியில் மோதப்போகும் இரண்டு அணிகளும் இதுவரை சம்பியனானதில்லை. உலகக்கிண்ணத்துக்கு முதலில் முத்தமிடப்போவது இங்கிலாந்து கப்டன் இயன் மோர்கனா, நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்ஸனா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.  உலகக்கிண்ணத்தை  உயரே தூக்கிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்பது வீரர்களின் கனவு. அந்தக் கனவு இன்று  நிஜமாகப்போகிறது.

உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டியில் ஆறு முறை தோல்வியடைந்த நியூஸிலாந்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடியது. கடந்த உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நியூஸிலாந்து இம்முறை அரை இறுதியில் வெற்றி பெற்று  இறுதிப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றுள்ளது. கடந்த உலகக்கிண்ணத் தொடரில் நழுவவிட்ட சம்பியன் கிண்னத்தை இந்த வருடம் கைப்பற்று ஆவலுடன் நியூஸிலாந்து காத்திருக்கிறது.

மூன்று உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மூன்று முறையும் தோல்வியடைந்து சம்பியனாகும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டது. 1979 ஆம் ஆண்டு மேற்கு, இந்தியத் தீவுகளிடமும், 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிடமும், 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமும் தோல்வியடைந்த இங்கிலாந்து, கிறிக்கெற்றின் தாயகத்துக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுத்தரும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். 27 வருடங்களின் பின்னர் உலகக்கிண்ன இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு  இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணப்  போட்டியை நடத்தும் நாடு சம்பியனாவதில்லை எனும் கருத்து நிலவியது. 1996 ஆம் ஆண்டு இந்தியா,பாகிஸ்தான், இலங்கை ஆகியன கூட்டாக உலகக்கிண்ணப் போட்டியை நடத்தின. பாகிஸ்தானில் நடைபெற்ற  இறுதிப் போட்டியில்  இலங்கை சம்பியனாகியது.  2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியை நடத்திய இந்தியா சம்பியனானது. 2015 ஆம் ஆண்டு  நியூஸிலாந்தும்அவுஸ்திரேலியாவும் உலகக்கிண்ணப்போட்டியை நடத்தி அவுஸ்திரேலியா சம்பியானாகியது. அந்த வரிசையில் இங்கிலாந்து சேருமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் லீக் போட்டியில் மோதியபோது 119 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 1966 ஆம் ஆண்டு உலகக்கிண்ண  உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் இங்கிலாந்து சம்பியனாகியது. அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் இங்கிலாந்து சம்பியனாகியதில்லை. பெக்கம், ரூனி போன்ற உதைபந்தாட்ட  ஜாம்பவான்களாலும் உதைபந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை முத்தமிட முடியவில்லை. 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து உலக ரக்பி சம்பியனானது.

இங்கிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதால் அடுத்து  களம் இறங்கும்  வீரகள் பதற்றமின்ரி விளையாடுகிறார்கள்.  நியூஸிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான மாட்டின் குப்தில்,ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் பலமான அத்திபாரத்தை இடவில்லை.  ஆகையால் அடுத்து துடுப்பெடுத்தாடும் வீரகள் பதற்றத்துடன் களமாடுகிறார்கள். இங்கிலாந்தின் மத்திய வரிசை வீரர்கள்  சிறப்பாகச் செயற்பட்கிறார்கள். இங்கிலாந்தின் களத்தடுப்பும் பந்துவீச்சும் நியூஸிலாந்தை விட  மேலோங்கி இருக்கிறது.
ஒன்பது போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து, ஆறு வெற்றி ஒரு தோல்வியுடன் 12  புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றது. எட்டு போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து ஐந்து வெற்றி,மூன்று தோல்விகளுடன் 11  புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. மழை காரணமாக இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டி கைவிடப்பட்டு  இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
 இங்கிலாந்து வீரர்களான ஜேசன் ராய், ஜானிபெர்ஸ்டோ, ஜோரூ ஆகியோர் துடுப்பாட்டத்திலும், ஆர்ச்சர், மாக் வுட் ஆகியோர் பந்து வீச்சிலும் முன்னணியில் இருக்கிறார்கள்.  நியூஸிலாந்தி வீரரான கேன் வில்லியன்சன் துடுப்பாட்டத்திலும், ஃபேர்கிசன், போல்ட் ஆகியோர் பந்து வீச்சிலும் முன்னணியில் இருக்கின்றனர். கிறிக்கெற்றைப் பொறுத்தவரை நானயச்சுழற்சி  முக்கியமானது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றால் முதலில் துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களை அடிக்க வேண்டும்.

No comments: