Monday, July 22, 2019

கெளரவப் பிரச்சினையான வேலூர் தேர்தல்


இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. திரவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். துரைமுருகனின் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது கணக்கில் வராத பணமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது வேலூர் தொகுதியின் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் முடிந்துவிட்டது.

வாக்காளருக்குப் பணம் கொடுப்பதற்காக கதிர் ஆனந்த், பணத்தைப் பதுக்கி வைத்ததாகப் புகார் செய்யப்பட்டதால் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது கதிர் ஆனந்தின் மீதான புகார் நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்பது தெரியாமல் அவரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்,கே.நகர் இடைத்தேர்தலின்போதும் இதேபோன்றுதான் பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் நடைபெற்று தினகரன் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமியும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். கமலின் கட்சியும் தினகரனின் கட்சியும் வேலூரில் போட்டியிடவில்லை. வேலூரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் அங்கு கதிர் ஆனந்துக்கும் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையில்தான் போட்டி நடைபெறும்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலூரில் தேர்தல் நடைபெற்றிருந்தால் கதிர் ஆனந்த் வெற்ரி பெற்றிருப்பார். இடைத் தேர்தல் போன்று வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதால், யார் வெற்றி பெறுவார் என்பதைக் கணிக்க முடியாதுள்ளது. தமிழக அரசு இயந்திரத்தின் பலம்  தேர்தலில் முக்கிய பங்கை வகிக்கப்போறது. தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்வார்கள். இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி  பெறுவதில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றியின் பின்னால் உள்ள காரணம் பணம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த  ரகசியம்.

வேலூரில் துரைமுருகனின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது. அவரது மகன் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.  துரைமுருகன் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை அவரைப் பிடிக்காத திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்தான் போட்டுக்கொடுத்தார் என்ற சந்தேகம் கதிர் ஆனந்தின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. துரைமுருகனின் அரசியல் பலம், பணபலம் என்பன கதிர் ஆனந்தின்  பின்னால் உள்ளன. அவருடைய அரசியல் பலத்தில் எந்த சந்தேகமும்  இல்லை. பணத்தை வெளியில் எடுக்க முடியாத நிலை உள்ளது. துரைமுருகனின் மீதும் அவருக்கு வேண்டியவர்கள் மீதும்  கண்காணிப்பு அதிகரித்துள்ளது. கை நிறையப் பணம் இருந்தும் துரைமுருகனால் அதனை வெளியில் எடுக்க முடியாத நிலை உள்ளது.

தமிழகத்தின் 37 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழ்கமும் அதன் கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெற்றதால் வேலூரிலும் வெற்றி பெற வேண்டும் என ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார். ஆளும் கட்சி செய்யும் தில்லுமுல்லுகளுக்கு தகுத பதிலடி கொடுக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் எதிர்பார்ப்பு. தமிழக சட்ட ம்ன்ற இடைத்தேர்தலில் திராவிட   முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாததற்கு உட்கட்சிக் கசப்புணர்வே காரணம். இந்த உண்மை ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகையினால், உட்கட்சிப் பிரச்சினை தலை தூக்கக்கூடாது என்பதே ஸ்டாலினின் விருப்பம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான வேலூரில் வெற்ரி பெறுவேன் என்ற நம்பிக்கையில் ஏ.சி.சண்முகம் களம் இறங்கியுள்ளார். துரைமுருகன் தரப்புக்கு இணையான பணபலம் உள்ளவர் சண்முகம். வேலூர் மக்களுக்கு மிகவும் பரிட்சயமானவர். வேலூரில் அவருக்கு ஒரு கல்லூரி உள்ளது.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றால் அடிமட்ட மக்களின் மனதைக் கவர்ந்தவர்  சண்முகம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி  இரண்டாவது இடத்தைப் பிடித்தவர். கதிர் ஆனந்துக்கு சரியான போட்டியாளர் ஏ.சி.சண்முகம்.

சமூக நீதிக் கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் இருப்பதனால்,  அவரின் செல்வாக்குக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வன்னியரான சண்முகத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு வழங்கும். அன்புமணியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்பியாக்கியதால் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் விஜயகாந்தின் கட்சி இல்லை. அதனால் எந்த பாதிப்பும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பாரதீய ஜனதாதான் காரணம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது.  தமிழகத்தில் தமது கட்சி தோல்வியடைந்ததற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் காரணம் என பாரதீய ஜனதாக் கட்சியினர் கருதுகின்றனர். பாரதீய ஜனதாக் கட்சியைத் தவிர்த்து தேர்தல்  பரப்புரையை செய்வதற்கு  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. தேர்தல் கூட்டத்தில்  மோடியை மேடையேற்றுவதற்கு ஏ.சி.சண்முகம் விரும்புகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் வாழ்க என்றபோது பாரதீய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டது, ஹிந்தியைத் திணிக்க முயற்சி செய்வது, தபால் துறையின் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது, நீட் தேர்வை அகற்ற முடியாது என அறிவித்தமை போன்றவை ஏ.சி.சண்முகத்துக்கு எதிராக உள்ளன. ஸ்டாலினுக்கும் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்துக்கும் வேலூர் தேர்தல் வெற்றி மிக முக்கியமானது.

No comments: