Saturday, July 20, 2019

இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கப்போகும் வைகோவின் குரல்


கணீரென்றகுரல், கம்பீரமான உச்சரிப்பு, சவால்விடும் உடல் மொழி, ஆதாரங்களைப் புட்டு வைக்கும் லாவகம் ஆகியவற்றுடன் இந்திய நாடாளுமன்றத்தைக் கலக்கிய வைகோவின் குரல் இருபது வருடங்களுக்குப் பின்னர்  மீண்டும் ஓங்கி  ஒலிக்கப்போகிறது. கடந்த இருபது வருடங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தோல்வியடைந்தபோது அவரின் மீது மதிப்பு வைத்திருந்த தமிழக மக்களும் இலங்கைத் தழிர்களும் வருந்தினார்கள்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த வைகோவின் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஸ்டாலின் ஒதுக்கினார், கூடவே வைகோவை ராஜ்யசபா உறுப்பினராக்கி நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்தார் ஸ்டாலின். இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தின் 22 தொகுதிகளில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.தமிழகம்  முழுவதும் வைகோ,  பிரசாரம் செய்தார்.  ஸ்டாலினின் நாடாளுமன்றக்கணக்கு வெற்றி பெற்றது. தமிழக சட்டமன்றக் கணக்கு சறுக்கிவிட்டது.  திராவிட முன்னேற்றக் கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் சத்தியப்பிரமாணம் செய்தபோது நாடாளுமன்றம், அதிர்ந்தது. இவர்களுடன் வைகோவும் சேரும்போது நாடாளுமன்றத்தில் மேலும் பல அதிர்வலைகள் ஏற்படும்.

தமிழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதி முடிவடைகிறது. திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர் கனிமொழி,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுன்,வி.மைத்திரேயன். ஆர்.லட்சுமணன், டி. ரத்னவேல் சிபிஐ  உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் பதவி இழக்கிறார்கள். புதிய  உறுப்பினர்களைத் தெரிவு செய்தற்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துவிட்டது. ஒரு ராஜ்ய சபை உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு தேவை. இம்முறை திராவிட முன்னேற்றக் கழகம், அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தலா மூன்று உறுப்பினர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக சட்ட மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கூட்டணியின் உறுப்பினர்கள் அதிகமானதால்   இம்முறை இரண்டு உறுப்பினர்கள் அதிகரிக்கிறார்கள்.

ஸ்டாலின் வாக்குறுதியளித்ததுபோல வைகோவுக்கு ஒன்று ஒதுக்கப்பட்டது. தொழிற் சங்கப்பொதுச்செயலாளர் சண்முகம்,வழக்கறிஞர் வில்சன் ஆகிய இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜ்யசபை உறுப்பினராகிறார்கள். திழிர்சங்கவாது சன்முகத்தை ராஜ்யசபா உறுப்பினராக்கப்போவதாக  கருணாநிதி உயிரோடு இருந்தபோது அறிவித்தார்.  ஸ்டாலினதனை செயற்படுத்தியுள்ளார். திராவிட முன்னேற்ரக் கழகத்தின் வழக்குகளை முன்னின்ரு நடத்துபவர் வில்சன். கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுத்தபோது ஒரே இரவில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொடுத்தவர் வில்சன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்று உறுப்பினர்களும் மூன்று துரையுல் வல்லுநர்கள். மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மூவரும் குடைச்சல் கொடுப்பார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு ராஜ்யசபை உறுப்பினர் பதவியையும் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்தது.  பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளிலும் படு தோல்வியடைந்ததால் ராஜ்யசபை உறுப்பினர் கொடுக்கப்படாது என்ற கருத்துநிலவியது. பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தாலும், வாக்கு வங்கியில் சரிவு ஏற்படவில்லை. அடுத்து வரும் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு தேவை என்பதன் அவசியம் கருதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அன்புமணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது.

தமிழகத்தின் அரூர்,சோளிங்கர்,பாப்பிரெட்டி ஆகிய தொகுதிகளில்  நடைபெற்ற இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி  பெற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குதான்  காரணம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்புவதால் அன்புமணி  மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.  அடுத்து நடைபெறும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  என்பனவற்றில் வெற்றி பெறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் சந்திரசேகரன் ஆகிய  இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்றம் செல்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து ஆறு பேர் ராஜ்யசபைக்குச் செல்கிறார்கள். அங்கு வைகோவின் குரல் மற்றையோரின் குரலைவிட சத்தமாக ஒலிக்கப்போகிறது. 1978,1984,1990 ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டார். ஹைட்ரோ காபன், மீதேன், எட்டு வழிச்சாலை, ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்  இலங்கை கடற்படையால் கொல்லப்படுதல் போன்றவற்றில் வைகோ காத்திரமாகக்குரல் குடுப்பார். 

No comments: