Saturday, September 7, 2024

அரசுப் பாடசாலைகளில் மோசமான கல்வித் தரம் தமிழக அரசைச் சீண்டிய ஆளுநர் ரவி

 தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான உறவு என்றைக்கும் கீரியும் பாம்பும்  போன்றதே. தமிழக அரசைச் சீண்டிப் பார்ப்பதில் ஆளுநர்  ரவிக்கு அலாதி இன்பம்.  இம்முறை தமழக அரசுப் பாடசாலைகளின்  கல்வியைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றஎண்ணி துணிகநிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது; தேசிய சராசரியைவிட கீழே போய்விட்டது என்று தெரிவித்தார்.

 அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார்.

துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக்கூட படிக்க முடியவில்லை. ஒரு ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது.

தமிழ்நாடு சந்தித்து வரும் மற்றொரு பெரிய பிரச்சனை போதைப் பொருள்கள். ஆனால், போதைப் பொருள்கள் பெரிய பிரச்சினை இல்லை என்று மறுக்கக்கூடிய நிலை இங்கே இருக்கிறது. கோகெய்ன், ஹெராயின், மெத் என ரசாயண போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகளில் இத்தகைய போதைப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.

மாணவர்களை பெரிதாக கனவு காண வைக்க வேண்டும். இதற்கான பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். பல மாணவர்களிடம் பெரிய கனவுகள் இல்லை. தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள்கூட, சராசரி வேலை குறித்த கனவையே கொண்டிருக்கிறார். பலரின் கனவுகள் சிறியதாக உள்ளன. ஆலமரத்தின் விதையைப் போன்றவர்கள் மாணவர்கள். ஆனால், பலர் அதனை உணராமல் போய்விடுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

ஆளுநரின் இந்தப் பேச்சு உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்" என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், "மாநில பாடத்திட்டத்தின் தரம் கீழ் நிலையில் இருக்கிறது என்ற கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வாபஸ் பெற வேண்டும்." என்று பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, கணித மேதைகளாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்த நிலையில், மாநில பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று எதன் அடிப்படையில் ஆளுநர் சொல்கிறார் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஆளுநரின் பேச்சு, மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தனியார் நடத்தும் மத்திய பாடத் திட்டப் பள்ளிகளை ஊக்குவிக்கும் தந்திரச் செயலும் கூட என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது

மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது என்று எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார்? மாநிலப் பாடத்திட்டத்தை எந்த பாடத்திட்டத்துடன் அவர் ஒப்பாய்வு செய்தார்? தரத்தை அளப்பதற்கு என்ன அளவுகோலை ஆளுநர் பயன்படுத்தினார்? மாநிலத்தின் தலைவராக இருக்கும் ஆளுநர், அவ்வாறு ஆய்வுகள் மேற்கொண்டிருந்தால், தான் ஆராய்ந்தறிந்தவற்றை மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையிடம் தெரிவித்தாரா? ஒப்பீட்டு ஆய்வறிக்கையை மாநில அரசிடம் வழங்கி கருத்து கோரினாரா? போன்ற கேள்விகள்  ஆளுநரை நோக்கி எழுப்பப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி அடிப்படையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, நாட்டில் தரமான பாடத்திட்டம் என்று கல்வியாளர்களால் அது பாராட்டப்படுகிறது. மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், "தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தரமற்றது" என்ற வாதத்தை நிராகரித்தது. மாநில பாடத் திட்டத்தைத் தமிழக அரசு தொடர்ந்து செழுமைப்படுத்தி வருகிறது.

பல புதிய அம்சங்களை இணைத்து மாணவர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, தமிழ்நாடு மாநில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சிறுமைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என்று கல்வியாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

2021-ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாகப் பிரச்னை வெடித்தது. பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நாட்டில் தோன்றிய பல்வேறு பிரிவினை சித்தாந்தங்களுள் திராவிட சித்தாந்தமும் ஒன்று." என்று பேசியதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது

கட்சி பேதமின்றி தமிழ்கத்தின் தலைவர்கள் அனைவரும்  ஆளுநர் ரவிக்கு பதிலளித்துள்ளனர். தமிழக கல்வித்தரத்தையும் வடமநிலங்களின் கல்வித் தரத்தையும் ஒப்பிட்டு செய்யப்பட்ட பல ஆய்வுகளை முன்வைத்து ரவிக்கு பலரும் பதிலடி கொடுக்கின்றனர்.

No comments: