Monday, August 18, 2008

அணி மாறுவதற்குத் தயாராகும் தமிழக அரசியல் கட்சிகள்



அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி கையெழுத்திடுவதற்கு ஒப்புதலளித்ததனால் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வந்த இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டமை, பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதான பேச்சாளரான காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டமை ஆகிய இரண்டு சம்பவங்களினால் இந்திய அரசியலும் தமிழக அரசியலும் பரபரப்பாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதால் மத்திய அரசாங்கம் கவிழுமா? அல்லது புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தனது எஞ்சிய பதவிக் காலத்தை காப்பாற்றுமா? மத்தியில் புதிய கூட்டணி ஏற்பட்டால் தமிழகத்திலும் கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்பன தற்போதுள்ள கேள்விகள்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரை தாக்கிக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதால் பாட்டாளி மக்கள் கட்சியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சேருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸுடனான கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி அமைப்பது என்ற சிக்கலில் திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்பமாட்டா. ஆகையினால் கம்யூனிஸ் கட்சிகளை விட்டு காங்கிரஸின் பக்கம் போவதையே திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பும்.
மதவாதக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடன் கம்யூனிஸ்ட்டுகள் ஒரு போதும் இணையமாட்டா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க பாரதீய ஜனதாக் கட்சி ஆர்வமாக உள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியா? கம்யூனிஸ்ட்களா? என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கேட்டால் இன்றைய நிலையில் கம்யூனிஸ்ட்களே என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூறும்.
பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் இரண்டு சதவீத வாக்குகளே உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நான்கு சதவீத வாக்குகள் உள்ளன.
பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் இந்து மதத்தைத் தவிர ஏனைய மதத்தவர்களின் வாக்குகள் கிடைக்காது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மைச் சமுதாயங்களின் வாக்குகள் பெருமளவில் கிடைக்கும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்தால் தமிழகத்தில் ஏனைய சிறு கட்சிகள் சிலவற்றுடன் இணையும் சாத்தியம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மாற்றீடாக புதிய கூட்டணியை அமைக்க காத்திருக்கும் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது.
மத்தியிலும் தமிழகத்திலும் கூட்டணியில் ஏற்படும் மாற்றங்களினால் ஆதாயம் கிடைக்கக் கூடிய கூட்டணியில் சேர்வதற்கு சில கட்சிகள் இப்போதே தயாராக உள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கியான காடு வெட்டிகுரு கைது செய் யப்படுவார் என்ற பேச்சு அண்மைக்காலத்தில் பரவலாக எழுந்தது. தமிழக முதல்வரையும் மத்திய அமைச்சரையும் தமிழக அமைச்சர்களையும் தரக் குறைவாகப் பேசியதற்காக காடு வெட்டி குரு கைது செய்யப்படுவார் என்று பரபரப்பாக செய்தி வெளியானபோது "தமிழக அரசுக்குத் துணிவு இருந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும்' என்று காடு வெட்டி குரு சவால் விடுத்தார்.
காடு வெட்டி குருவின் அசிங்கமான பேச்சின் காரணமாகவே பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேற்றியது. கூட்டணியில் இருந்து வெளியேறி கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வந்த பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
காடு வெட்டி குருவின் பேச்சு கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அவரை தட்டிக் கேட்காது உற்சாகப்படுத்தினார். அதன் விபரீதம் இன்று காடு வெட்டி குருவை சிறையில் அடைத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரைக் கொலை செய்ய முயற்சித்ததாக காடு வெட்டி குரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றப் பிரமுகரான குணசேகரன் என்பவர் பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டின் காரணமாகவே காடு வெட்டிகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.
குணசேகரன் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவர். முன்னாள் கட்சி சபை உறுப்பினரான இவர் முன்பு சாராய வியாபாரம் செய்து வந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு வெளியேறிய இவர் இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளõர். சாராய வியாபாரத்தையும் கைவிட்டுள்ளார். குணசேகரனின் முயற்சியினால் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகக் கட்சியில் இணைவதும் காடு வெட்டி குருவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
1995 ஆம் ஆண்டு அம்பலவாணர் அரச கட்டளை கிராமத்தில் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியமை, 1997ஆம் ஆண்டு ஜெயங் கொண்டான் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அரசைப் பற்றி அவதூறாகப் பேசியமை, 2000 ஆம் ஆண்டு மேலூர் கிராமத்தில் பொலிஸ்மீது வெடிகுண்டு வீசப்போவதாக மிரட்டியமை, 2005ஆம் ஆண்டு வீராணம் திட்டத்துக்கு எதி ராக நடந்த கூட்டத்தில் அதிகாரிகளை மிரட்டியமை, 2006ஆம் ஆண்டு ஜெயங்கொண்டத் தில் அதிகாரிகளை மிரட்டியமை, 2008 ஆம் ஆண்டு தன்னூரில் முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் செல்வம் வீட்டில் வெடிகுண்டு வீசியமை, 2008 ஆம் ஆண்டு அரியலூரில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராசா, தமிழக சட்ட மன்ற உறுப்பினர் சிவசங்கர் ஆகியோரை மிரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவாகி உள்ளது.
இதேவேளை, அரியலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆண்டி மடம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் ஆகி யோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் காடு வெட்டிகுரு கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
காடு வெட்டி குரு கைது செய்யப்பட்டதை திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் வன்முறையில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காடுவெட்டி குரு கைது செய்யப்பட வேண்டும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் எனத் திட்டமிட்டு பாட்டாளி மக்கள் கட்சி காய் நகர்த்தி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. ஆனால் காடு வெட்டி குரு கைது செய்யப்பட்டதன் காரணம் தான் மாறிவிட்டது.
திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களை தாக்கிப் பேசியதற்காக காடு வெட்டி குரு கைது செய்யப்படுவார் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்த்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரைத் தாக்கி கொலை செய்ய முயன்றதாக காடு வெட்டி குரு மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதனால் தமிழக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரின் புகார் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டிருந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியனவும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தி இருக்கும்.
காடுவெட்டிகுரு கைது செய்யப்பட்டது சரியானதே. ஆனால் காடு வெட்டி குருவைப் போன்று தரக்குறைவாகப் பேசும் ஏனையவர்களும் கைது செய்யப்பட்டு நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றிலும் தரக் குறைவான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் பேச்சாளர்கள் பலர் உள்ளனர். அவர்களின் அத்துமீறல் பேச்சுக்கு தமிழக அரசு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு; 13.07.2008

No comments: