Monday, August 25, 2008

அழகிரியை ஓரங்கட்டி முன்னேறுகிறார் ஸ்டாலின்




திராவிட முன்னேற்றக் கழக வாரிசுப் போட்டியில் பின்னடைந்திருந்த மு.கா. ஸ்டாலின் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார். முதல்வர் கருணாநிதிக்கு அடுத்து கழகத்தை வழி நடத்தி செல்பவர் ஸ்டாலின்தான் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. முதல்வரின் இன்னொரு மகனான மு.க. அழகிரியின் வரவினால் ஸ்டாலினின் இடம் கேள்விக்குறியானது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் கருணாநிதியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் செல்வி ஜெயலலிதாவும் முதல்வராவார்கள் என்பது வெளிப்படையானது.
விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் கட்சி ஆரம்பித்த பின்னர் அவர்களின் ஆதரவாளர் கள் தமது தலைவரை முதல்வராக்கும் கனவில் செயற்படுகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ராமதாஸோ ஒருபடி மேலே போய் 2011 இல் பாட்டாளி மக்கள் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று சவõல் விடுகிறார்.
அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்று இன்றுவரை யோசித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் ரசிகர்கள் விளம்பரங்களில் அவரை முதல்வராக்கி அழகு பார்க்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக கொடுமையான தண்டனைகளை அனுபவித்த ஸ்டாலினுக்கு போட்டியாக கழகத்தில் எவரும் இல்லை. தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்பதை கழகத்தின் மூத்த தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஸ்டாலினுக்கு எதிராக அவரது குடும்பத்தில் இருந்தே ஒருவர் புறப்படுவார் என்று எவரும் நினைக்கவில்லை. முதல்வரின் இன்னொரு மகனான மு.க. அழகிரியின் அரசியல் பிரவேசம் ஸ்டாலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.
அரசியலில் ஸ்டாலினின் செல்வாக்கு அளப்பரியது. அதேவேளை அழகிரியின் அன்புக் கட்டளைக்கு முதல்வர் மறுப்புத் தெரிவிப்பது குறைவு. மாறன் சகோதரர்களின் பிரச்சினை பெரிதாவதற்கு மு.க. அழகிரியும் ஆற்காடு வீரõசாமியும் தான் காரணம் என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.
மாறன் சகோதரர்களை மிக்க மூர்க்கமாக எதிர்க்கிறார் மு.க. அழகிரி. மதுரையில் அவரின் செல்வாக்கினால் மாறன் சகோதரர்கள் தலையெடுக்க முடியாது தவிக்கின்றனர். அழகிரியின் அதிகாரம் மதுரையில் கொடி கட்டிப் பறக்கிறது. மதுரையில் உள்ள தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட பின்னர் மாறன் சகோதரர்களின் வியாபார வலைப்பின்னல்கள் அங்கு முடங்கிப் போயுள்ளன.
மாறன் சகோதரர்களுக்கு எதிராக முதல்வரும் அழகிரியும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். கழகத்தில் உள்ள ஏனைய தலைவர்கள் மௌனமாகவே உள்ளனர். ஏனைய கட்சித் தலைவர்களைப் போன்று மாறன் சகோதரர்களை தாக்கிப் பேசுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் தயாராக இல்லை.
மு.க. அழகிரி அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியதால் ஸ்டாலினுக்கு சற்ற பின்னடைவு ஏற்பட்டது. அழகிரியின் அதிரடி நடவடிக்கைகள் அவரை கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்துள்ளன.
ஸ்டாலினிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு முதல்வர் கருணாநிதி கட்சிப் பதவிகளில் ஆர்வம் காட்டப் போகிறார் என்ற செய்தி கடந்த இரண்டு வருடங்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடந்த மாநாட்டில் ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும் என்றும் இளைஞர் மாநாட்டின் போது தொண்டர்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு வெளியாகும் என்றும் பூடகமாக செய்திகள் வெளியாகின. ஆனால் இறுதியில் அவை எல்லாம் புஸ் வாணமாகி விட்டன.
தற்போது, ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைக்க முதல்வர் தயாராக இருக்கிறார், கழகத்தின் மூத்த தலைவர்கள் சிலரும் அழகிரியும் முட்டுக் கட்டை போடுகின்றனர் என்ற செய்தி அரசல் புரசலாக வெளி வருகின்றன. அதை உறுதிப்படுத்துவது போன்று கழகத்தினுள் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.தனக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களைப் பார்த்து மௌனமாக இருந்த ஸ்டாலின் இப்போது சுறுசுறுப்படையத் தொடங்கிவிட்டார். இதுவரை பல விடயங்களில் பட்டும் படாமலும் இருந்த ஸ்டாலின் தனது ஆளுமையை வெளிப்படுத்துவதற்குரிய காரியங்களை மளமளவெனச் செய்யத் தொடங்கிவிட்டார்.
தொண்டர்களை தேடி அலுவலகத்தில் சந்திக்காத ஸ்டாலின் தற்போது, தனது அறையில் இருந்தவாறே தொண்டர்களை அழைத்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்கிறார். மனு கொண்டு வருபவர்களை நேரடியாகச் சந்தித்து மனுக்களை வாங்கி ஆறுதலாக சில வார்த்தைகள் பேசுகிறார். இவை எல்லாம் ஸ்டாலினின் போக்கில் ஏற்படும் மாற்றத்தை வெளிக் காட்டுகின்றன.
கட்சித் தலைமையகம் முதல்வர் பதவியை ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கு தலைவர் கருணாநிதி தயாராக இருக்கிறார். அழகிரியின் அரசியல் பிரவேசம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. எனவே முதல்வர் பதவியை ஸ்டாலினிடமும் கட்சித் தலைமையை அழகிரியிடமும் கொடுப்பதற்கு முதல்வர் தீர்மானித்துள்ளார் என்று செய்திகள் கசிந்தன. இதனை மறுத்து அறிக்கை எதனையும் முதல்வர் வெளியிடவில்லை.
அழகிரியை தலைவராக ஏற்பதற்கு திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர்களும் தொண்டர்களும் தயாராக இல்லை. அழகிரியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் தவறினால் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதிப்பு ஏற்படும். அழகிரியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகப்பெரிய பிரிவு ஒன்று ஏற்படும்.
அதனை நன்கு உணர்ந்துள்ள ஸ்டாலின் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார். அரசியல் விவகாரங்களில் அதிரடி செய்யாது அரசியலில் வளர்ந்து ஸ்டாலின் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;10.08.2008

1 comment:

Unknown said...

Find new leader alone will stop this nonsense