Monday, August 18, 2008

பரபரப்பான அரசியலில் அமைதி காத்த அ.தி.மு.க.


ஒரு வாரமாக இந்திய அரசியலைக் கலக்கிக் கொண்டிருந்த பிரச்சினை ஒருபடியாக முடிவுக்கு வந்துள்ளது. மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தப்பிப் பிழைத்துள்ளது.
தனது அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியும், அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இடதுசாரிகளும் பாரதீயஜனதாக் கட்சியும் தீவிரமாக களமிறங்கின. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் அதற்கு எதிராக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் நேரத்துக்கு நேரம் மாறுபட்டன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி இழக்கவில்லை. அரசாங்கம் கவிழுமா? நிலைக்குமா? என்ற பரபரப்பு தமிழகத்திலும் எதிரொலித்தது. தமிழ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இருந்ததனால் தமிழ் நாட்டின் பக்கம் காங்கிரஸ் கட்சி தனது நேரத்தை செலவிடவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.தி.மு.க. வின் நான்கு நாடாளுமன்ற உறப்பினர்களில் இரண்டு பேர் மட்டுமே மத்திய அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தால் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியையும் பகைத்துக்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. அடுத்த சட்ட மன்றத் தேர்தல் அல்லது பொதுத் தேர்லின்போது பலமான எதிர்க்கட்சி ஒன்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறாது என்பது புலனாகின்றது.
முதல்வரால் ஓரங்கட்டப்படும் தயாநிதி மாறன் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தமிழகத்தில் பரவலாக எழுந்தது. காங்கிரஸை எதிர்த்து தயாநிதி மாறன் வாக்களிக்க மாட்டார் என்பதைத் தெரிந்து கொண்டும் தயாநிதி மாறன் நடுநிலை வகிக்கப் போகிறார், வாக்களிக்க மாட்டார் என்று பரவலாக செய்திகள் கசிந்தன.
தயாநிதி மாறனை எதிர்ப்பவர்கள் இந்தச் செய்தியை பிரபலமாக்கினார்கள். இந்த வதந்தி உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளை பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டிய நிலைக்கு தயாநிதி மாறன் தள்ளப்பட்டார்.
தயாநிதி மாறனின் வீட்டில் நடந்த இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் ஏராளமான பத்திரிகையாளர்களும் தயாநிதி மாறனின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். உணச்சிவசப்பட்ட தயாநிதி மாறனின் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
அரசியல் தலைவர் ஒருவர் ஓரங்கட்டப்பட்டால் அவருடைய ஆதரவாளர்கள் மிகக் கீழ்த்தரமான வாசகங்களைக் கூறி தமது தலைவனை ஒதுக்கிய அரசியல் தலைவரை வசைபாடுவது வழமை. தயாநிதி மாறனின் வீட்டில் கூடிய ஆதரவாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தையோ அல்லது முதல்வரையோ எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய தயாநிதி மாறன் முதல்வர் மீதும் கழகத்தின் மீதும் தான் வைத்திருக்கும் நம்பிக்கையை முழுமையாக வெளிப்படுத்தினார். அதேவேளை பெயரைக் குறிப்பிடாமல் அழகிரியை தாக்கிப் பேசினார். திராவிட முன்÷னற்றக் கழகத்துக்கு எதிராக அழகிரி செய்தவற்றையும் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைவதற்கு மு.கா. அழகிரி காரணமாக இருந்ததையும் தயாநிதி மாறன் நினைவுபடுத்தினார். இப்போதைக்கு முதல்வரை நெருங்க முடியாது என்பதை தயாநிதி மாறன் பட்டவர்த்தனமாகத் தெரிந்து கொண்டார்.
டில்லி அரசியல் உச்சக் கட்டத்தில் இருந்த போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கை கட்டி பார்த்துக் கொண்டிருந்தது. பாரதீய ஜனதாக் கட்சியையும் காங்கிரஸ் கட்சியையும் மத்தியில் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்த ஜெயலலிதா எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தார். கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எவரும் வெற்றி பெறவில்லை. தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைத்தது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. தமக்கு வழங்கப்பட்ட பணத்தை சில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் காட்டினார்கள்.
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் தான் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தது என்று வட நாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. சேது சமுத்திரத் திட்டத்துக்கு வட இந்தியாவில் பலத்த எதிர்ப்பு இருப்பதனால் நம்பிக்கைத் தீர்மானத்துக்கும் சேது சமுத்திரத்துக்கும் முடிச்சுப் போட்டு தமது ஆதங்கத்தை வட நாட்டுப் பத்திரிகைகள் நிறைவேற்றியுள்ளன.
தமிழக பத்திரிகைகள் ஒரு படி மேலே போய் முதல்வரின் மகள் கனிமொழிக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தது என்று கூறியுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஆனால் ஆதரவளித்த கட்சிகளுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து திருப்திப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. ஒரு சில கட்சிகள் தமக்கு இந்தப் பதவி வேண்டும் என்று பேரம் பேசத் தொடங்கி விட்டன. தமிழகக் கட்சிகள் எவையும் பேரம் பேசியதாக தகவல் வெளியாகவில்லை.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்தான் தமிழக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்கிறது. காங்கிரஸை எதிர்த்தால் தமிழக ஆட்சி ஆட்டம் காணும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நன்கு தெரியும். ஆகையினால் பேரம் பேச எதுவும் இன்றி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திராவிட முன்னேற்றக் கழகம் வாக்களித்தது.
காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு இடதுசாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்து விட்டது. இனி அடுத்த பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இடதுசாரிகள் ஆரம்பித்துள்ளன. பலமான ஒரு கூட்டணியை அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் திட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளது.
கம்யூனிஸ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சோம்நாத் சட்டர்ஜி மிகத் திறமையாக நாடாளுமன்றத்தில் செயலாற்றினார். சபாநாயகர் கட்சி சார்பானவர் என்பதை அவர் நிரூபித்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியின் உறுப்புரிமையினையடுத்து அவர் நீக்கப்பட்டார்.கட்சிக்குள் பல பிரச்சினைகள் இருந்தபோதும் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கத்தை அகற்றிவிட வேண்டும் என்று இடதுசாரிகள் கங்கணம் கட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக காய் நகர்த்தும் இடதுசாரிகள் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு வழங்கியுள்ள ஆதரவை இப்போதைக்கு வாபஸ் பெறப் போவதில்லை. மத்திய அரசாங்கத்தை எதிர்க்கும் இடதுசாரிகளையும் எதிர்க்கப் போவதில்லை என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளõர்.
காங்கிரஸ் கட்சி பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு மாற்றீடாக மூன்றாவது அணி ஒன்றை உருவாக்க இடதுசாரிகள் முயற்சி செய்கின்றனர். மூன்றாவது அணியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் சேர்ப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. தமிழக அரசாங்கத்தை கவிழ்க்க தருணம் காத்திருக்கும் ஜெயலலிதா சில வேளை மூன்றாவது அணியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசாங்கம் தப்பி பிழைத்து விட்டது. ஆனால் இடதுசாரிகளுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சேர்ந்தால் தமிழக அரசாங்கம் ஆட்டம் காணும் சூழ்நிலை ஏற்பக.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;27.07.2008

No comments: