Monday, August 25, 2008

புதிய கூட்டணிக்குத் தயாராகும் தமிழக அரசியல் கட்சிகள்



இந்திய அரசியலில் ஏற்பட்ட புயல் எதுவித பிரச்சினையும் இன்றி முடிவடைந்தமையினால் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசு தப்பிப் பிழைத்தது. காங்கிரஸ் அரசை ஆட்சியில் இருத்திய இடதுசாரிகள் பறித்த குழியில் இருந்து சாமர்த்தியமாக இந்திய மத்திய அரசாங்கம் தப்பிவிட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கும், வாக்களிக்காமல் இருப்பதற்கும் பலகோடி ரூபா கை மாறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான அரசும் தப்பிப்பிழைத்ததனால் மகிழ்ச்சியடைந்த தமிழக முதல்வர் கருணாநிதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸும் டில்லிக்குச் சென்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்விருவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக டில்லிக்குச் சென்றதாகக் கூறப்பட்டாலும் இருவரும் தமது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தவே டில்லிக்குச் சென்றார்கள் என்பது வெளியில் தெரியாத ரகசியமான சங்கதி.
இதேவேளை, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறிவிட்டனர், தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையுடன் போய்விட்டது என்று காங்கிரஸ் கட்சி நிம்மதியாக இருக்க முடியாது. இடது சாரிகளின் இடத்தை நிரப்புவதற்கு முலாயம் சிங் யாதவ், ஒமர் அப்துல்லா, சிபுசோரன் ஆகியோரின் கட்சியை இணைப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது.
முலாயம் சிங் யாதவ், ஒமர் அப்துல்லா, சிபு சோரன் ஆகியோர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவதனால் மத்திய அரசாங்கம் பலமடையுமே தவிர அதனால் தமிழக அரசுக்கு எந்த வகையான இலாபமும் கிடைக்காது.
தமிழகத்தில் இடதுசாரிகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. முலாயம் சிங் யாதவ் ஒமர் அப்துல்லா, சிபு சோரன் ஆகியோரின் கட்சிக்கு தென் மாநிலங்களில் செல்வாக்கு இல்லை. ஆகையினால் தமிழகத்தில் ஏற்படப்போகும் கூட்டணி பற்றிய முன்னோட்டத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி இருக்கலாம்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்டுவிட்டது. ஆனால் மத்தியில் உள்ள கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் ஒட்டிக் கொண்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறி விட்டனர். இதேவேளை தமிழகத்தில் ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடதுசாரிகள் தொடர்ந்தும் இருக்கின்றனர்.
இடதுசாரிகளின் மீது தமிழக முதல்வர் நம்பிக்கை வைத்துள்ளார். தமிழக முதல்வருக்கு வழங்கும் ஆதரவை இப்போதைக்கு இடதுசாரிகள் விலக்கிக் கொள்ளமாட்டார்கள். ஆகையினால் தமிழக அரசுக்கு இப்போதைக்கு ஆபத்து எதுவும் ஏற்படப்போவதில்லை.
காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் மாற்றீடாக மூன்றாவது அணியை உருவாக்க இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர். மாயாவதி, சந்திரசேகர் ராவ், சந்திரபாபு, தேவகௌடா, ஓம்பிரகாஷ் சௌத்தாலா ஆகியோரை ஓரணியில் திரட்ட இடதுசாரிகள் முயற்சிக்கின்றனர். இந்தக் கூட்டணியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் இணைந்தால் தமிழகத்தின் தி.மு.க. அரசாங்கத்துக்கு ஆபத்தானதாக அமையும்.
இந்தியப் பிரதமராகும் கனவு ஜெயலலிதாவுக்கு இருக்கின்றது. முன்பு ஒரு முறை மூன்றாவது அணி ஆரம்பிக்கப்பட்டு அதை வளர்ப்பதற்கு ஜெயலலிதா மிகவும் கடுமையாகப் பாடுபட்டார். மூன்றாவது அணியின் தலைவி போலவே அவர் செயற்பட்டார். பின்னர் மூன்றாவது அணியில் இருந்து வெளியேறிவிட்டார்.
மாயாவதி, சந்திரபாபு ஆகியோரும் பிரதமராகும் எண்ணத்தில் உள்ளனர். ஆகையினால், இந்தக் கூட்டணிக்குள் ஜெயலலிதா நுழைவது சற்று சிரமமானதாகும். மதவாதக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடன் இடதுசாரிகள் கைகோர்க்க மாட்டார்கள். ஆகையினால் மூன்றாவது அணியை பலமானதாக்குவதற்கு இடதுசாரிகள் கடுமையாக முயற்சி செய்வார்கள்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இருப்போம் என்று முழக்கமிடும் டாக்டர் ராமதõஸ் டில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசி உள்ளார். தமிழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக அரசை தூக்கி ஏறிவதற்கு முயற்சி செய்யும் டாக்டர் ராமதாஸ் காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பதாக உறுதிப்படுத்தும் பயணமாக டில்லிப்பயணம் அமைந்தது.
தமிழக அரசை எதிர்க்கும் கைங்கரியத்தில் விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் ஒரே வகையில் செயற்படுகிறார்கள். விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இந்திய மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் போன்றவற்றை முன்னெடுத்தே விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் கட்சியை நடத்துகின்றனர். தமிழக அரசாங்கத்தை மிகவும் மூர்க்கமாக எதிர்க்க வேண்டிய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பட்டும் படாமலும் தமிழக அரசை எதிர்த்து வருகிறது. அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் டாக்டர் ராமதாஸும், விஜயகாந்தும் இணைவார்களா என்ற கேள்வியும் தமிழகத்தில் எழுந்துள்ளது.
இந்திய மத்திய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்து தோற்றுப்போன இடதுசாரிகளை தமிழக முதல்வர் கண்டித்தோ காரசாரமாகவோ விமர்சிக்கவில்லை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனரையும் அதன் செயற்பாடுகளையும் முதல்வர் காரசாரமாக விமர்சித்து வருகிறார்.
இடதுசாரிகளுடன் ஒத்துப்போவதற்கு முதல்வர் விரும்புகிறார். பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கு முதல்வர் கொஞ்சமும் விரும்புகிறார் இல்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் இடதுசாரிகளை மீண்டும் காங்கிரஸுடன் இணைப்பதற்கான முயற்சியை முதல்வர் மேற்கொள்வார் போல் தெரிகிறது.
மத்திய அரசாங்கமும், தமிழக தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை. அணு ஒப்பந்த விவகாரம், சேது சமுத்திரத் திட்டம், விலை வாசி உயர்வுக்கு உரிய பரிகாரம் என்பனவற்றை ஒழுங்குபடுத்திய பின்னரே தேர்தலைச் சந்திக்கும் எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக்கழகமும் உள்ளன.
இடதுசாரிகளினால் தமிழக அரசாங்கத்துக்கு இப்போதைக்கு பிரச்சினை ஏற்படவாய்ப்பு இல்லை. அதேவேளை, தமிழக அரசை தூக்கி எறிவதற்கு சபதம் செய்திருக்கும் டாக்டர் ராமதாஸ் அதற்குரிய வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
விஜயகாந்தை தமது பக்கம் இழுப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சி, முயற்சி செய்கிறது. விஜயகாந்த் விரும்பினால் அவருடன் கூட்டுச் சேர்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒரு சிலர் விருப்பப்படுகின்றனர். திராவிட முன்னேற்றக்கழகத்தை வெளியேற்றிவிட்டு விஜயகாந்தை சேர்க்கலாம் என்று காங்கிரஸில் உள்ள சிலர் விரும்புகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தால் வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை தமது கட்சியில் இணைப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் காங்கிரஸை நம்பித்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் நகருகிறது.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;03.08.2008

No comments: