Monday, August 18, 2008
குழம்பிப் போயிருக்கும் கூட்டணிக் கொள்கைகள்
முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூவரையும் சுற்றியே தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருக்கும் முதல்வர் கருணாநிதியும் எந்த ஜென்மத்திலும் இணையமாட்டார்கள். விஜயகாந்தை தம் பக்கம் இழுக்கும் இருவரும் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் நான்தான் என்ற கோஷத்துடன் அரசியல் நடத்தும் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸுடன் கூட்டணி சேர வேண்டும் என்று விஜயகாந்தின் கட்சியில் உள்ள சிலர் விரும்புகின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களும் விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்வதை விரும்புகிறார்கள்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை முறித்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி சேராது, விஜயகாந்த் தனியாகத் தேர்தலைச் சந்தித்தால் வெற்றி பெற முடியாது. அதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்பை இல்லாமல் செய்ய முடியும்.
விஜயகாந்த் யாருடனும் கூட்டணி சேரக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். விஜயகாந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தனித்துப் போட்டியிட்டால் பலமான கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்று முதல்வர் கருணாநிதி எதிர்பார்க்கிறார்.
தமிழகத்தில் வெற்றி ÷தால்வியை தீர்மானிக்கும் சக்தி மிக்கவர்களாக கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளனர். காங்கிரஸுடன் மல்லுக்கட்டி கூட்டணியில் இருந்து வெளியேறிய இடதுசாரிகள் தமிழகத்தில் கூட்டணியில் இருந்து இதுவரை வெளியேறவில்லை.
காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் என்ற வில்லங்கமான கணக்குடன் தமிழகத் தேர்தலைச் சந்திக்க முதல்வர் தயாராகி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியை மத்திய அரசில் இருந்து தூக்கி எறிய முயற்சி செய்த கம்யூனிஸ்ட்களை தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரிக்குமா என்பது சந்தேகம்தான். காங்கிரஸ் பாரதிய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு மாற்றீடாக மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்யும் கம்யூனிஸ்ட்டுகள் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸுடன் இணைந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்பமாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என்ற உறுதியான முடிவுடன் முதல்வர் கருணாநிதி செயற்படுகிறார். மூன்றாவது அணியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை முடிவு எதனையும் தெரிவிக்கவில்லை.
மூன்றாவது அணி பலமான அணியாக மாறினால் சிலவேளை திராவிட முன்னேற்றக்க கழகம் காங்கிரஸை விட்டு மூன்றாவது அணியில் இணைந்து விடும்.
தமிழக அரசியலின் வெற்றி தோல்வியை தீர்மானித்த கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தங்கள் பலத்தினை இழந்துள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் கவலையில்லை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவில் உள்ளது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தபோது தான் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் வெளியேறிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவுடன் இணைந்ததும் அமைதி காக்கிறது. தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிந்தும் வெளியேற முடியாத நிலையில் ஒட்டிக்கொண்டிருக்கிறார் வைகோ.
டாக்டர் ராமதாஸின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. தமிழக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக்கொண்டே எதிர்க்கட்சிபோல் தமிழக அரசாங்கத்தை விமர்சித்து அரசியல் நடத்திக்கொண்டிருந்த டாக்டர் ராமதாஸின் நடவடிக்கைகளைப் பொறுக்கமாட்டாத முதல்வர் கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியை வெளியேற்றினார். காங்கிரஸ் கட்சி மத்தியஸ்தம் பேசி மீண்டும் கூட்டணிக்குள் தனது கட்சியை கொண்டு வரும் என்று டாக்டர் ராமதாஸ் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், தமிழக அரசியலின் சாரதி முதல்வர் கருணாநிதி தான், அவர் எது கூறினாலும் சரிதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கைவிட்டால் மூன்றாவது அணியில் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் தயாராக இருக்கிறார்.
வர்மா; வீரகேசரி வார வெளியீடு;17.08.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment